மதுரைக்காஞ்சி - மூலமும் உரையும்

 மதுரைக்காஞ்சிமூலமும் உரையும்


பாண்டிய மன்னரின் குடிச் சிறப்பு

ஓங்கு திரை வியன் பரப்பின்
ஒலி முந்நீர் வரம்பாகத்
தேன் தூங்கும் உயர் சிமைய
மலை நாறிய வியன் ஞாலத்து

வலம் மாதிரத்தான் வளி கொட்ப                    5

 

வியல் நாள்மீன் நெறி ஒழுகப்
பகல் செய்யும் செஞ் ஞாயிறும்
இரவுச் செய்யும் வெண் திங்களும்
மை தீர்ந்து கிளர்ந்து விளங்க
மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்கத்        10

 

தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய
நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த
நோய்  இகந்து நோக்கு விளங்க
மேதக மிகப் பொலிந்த
ஓங்கு நிலை வயக் களிறு                       15


கண்டு தண்டாக் கட்கு இன்பத்து
உண்டு தண்டா மிகுவளத்தான்
உயர் பூரிம விழுத் தெருவில்
பொய் அறியா வாய்மொழியால்
புகழ் நிறைந்த நல்மாந்தரொடு                    20


நல் ஊழி அடிப் படரப்
பல் வெள்ளம் மீக் கூற
உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக!

 

அருஞ்சொற்பொருள்:

1.ஓங்குதல் = உயர்த்துதல்; திரை = அலை; வியன் பரப்பு = அகன்ற இடம்

 

2. முந்நீர் = கடல்; வரம்பு = எல்லை

 

3. தேன் – இங்கு தேனடையைக் குறிக்கிறது; தூங்கும் = தொங்கும்; சிமை = மலையுச்சி

 

4. நாறிய = தோன்றிய; வியன் ஞாலம் = அகன்ற உலகம்

 

5. வலம் = வலப்பக்கம்; மாதிரம் = ஆகாயம்; வளி = காற்று; கொட்ப = சுழல


6. வியல் = அகலம்; நாள்மீன் = நட்சத்திரம்; நெறி = முறை, ஒழுக = செல்ல

 

9. மை = குற்றம்; கிளர்ந்து = எழுந்து (தோன்றி)

 

10. மாதிரம் = திசை; கொழுக்க = தழைப்ப

 

11. தொடுப்பு = விதைப்பு

 

12. எதிர்பு = மேற்கொண்டு; நந்த = தழைப்ப

 

13. இகந்து = அகன்று; நோக்கு = அழகு

 

14. மேதக = மேன்மையாக (மேம்பாடு தக)

 

15. வயம் = வலிமை

 

16. தண்டா = குறையாத

 

18. பூரிமம் = தெருவின் பக்கம்; விழு = சிறந்த

 

21. ஊழி = உலக முடிவு காலம்; அடிப்படர்தல் = அடிப்பட்டு நடக்க (அடங்கி நடக்க)

 

22. வெள்ளம் = ஒரு பெரிய எண்; மீக்கூறல் = புகழ்தல்

 

23. மருகன் = வழித்தோன்றல்

 

பதவுரை:

1. ஓங்கு திரை வியன் பரப்பின் = உயர்ந்து எழுகின்ற அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும்,

2. ஒலி முந்நீர் வரம்பா = ஒலியுடைய கடலை எல்லையாகவும்,

 

3. தேன் தூங்கும் உயர் சிமைய = தேனடைகள் தொங்குகின்ற உயர்ந்த உச்சிகளையுடைய,

4. மலை நாறிய வியன் ஞாலத்து = மலைகள் தோன்றிய அகன்ற உலகத்தில்,

5. வலம் மாதிரத்தான் வளி கொட்ப = வலப்பக்கமாக ஆகாயத்தில் காற்றுச் சுழல,

6. வியல் நாள்மீன் நெறி ஒழுக = பெரிய நாள்மீன்களின் கூட்டம் தாம் செல்லும் பாதையில் ஒழுங்காகச் செல்ல,

7. பகல் செய்யும் செஞ் ஞாயிறும் = பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும்,

8. இரவுச் செய்யும் வெண் திங்களும் = இரவில் ஒளிசெய்யும் வெண்மையான திங்களும்,

9. மை தீர்ந்து கிளர்ந்து விளங்க = குற்றமற்றுத் தோன்றி விளங்க,

10. மழைதொழில் உதவ மாதிரங் கொழுக்க = மேகங்கள் தம் தொழிலைச் செய்து உதவுவதால் (மழை பெய்வதால்), (எல்லாத்) திசைகளும் தழைக்க,

11. தொடுப்பின் ஆயிரம் வித்தியது விளைய = விதைத்த ஒரு விதை ஆயிரம் விதைகளாக விளைய,

12. நிலனு மரனும் பயன்எதிர்பு நந்த = விளைநிலங்களும் மரங்களும் பயன்தருவதை மேற்கொண்டு தழைப்ப,

13. நோய்  இகந்து நோக்கு விளங்க = மக்கள் பசியும் பிணிகளும்  நீங்கி அழகுடன் விளங்க,

14-15 மிகப் பொலிந்த ஓங்கு நிலை வயக் களிறு மேதக = மிகவும் பொலிவுபெற்ற உலகத்தைத் தாங்கும் உயர்ந்த நிலையை உடைய, வலிமை மிக்க திசை யானைகள் தம் சுமை குறைந்து, வருத்தமில்லாமல் மேம்பட்டு,

16. கண்டு தண்டாக் கட்கு இன்பத்து = கண்ணுக்குக் காணக் காணக் குறையாத இனிமையும்,

17. உண்டு தண்டா மிகுவளத்தான் = உண்ண உண்ணக் குறையாத மிகுந்த வளத்தையும்,

18. உயர் பூரிம விழுத் தெருவில் = உயர்ந்த பக்கங்களையுடைய சிறந்த தெருக்களில் இருக்கும்,

19-20. பொய் அறியா வாய்மொழியால் புகழ் நிறைந்த நல் மாந்தரொடு = பொய் பேசுவதை அறியாத (தங்களின்) உண்மையான பேச்சால் புகழ் நிறைந்த நல்ல மக்களோடு (நல்ல அமைச்சர்களோடு),

21. நல் ஊழி அடிப் படரப் = ஊழிக்காலம் எல்லாம் மற்றவர்கள் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்க,

22. பல் வெள்ளம் மீக் கூற = நீண்ட காலம் தம்மைப் புகழ்ந்து கூறுமாறு,

23. உலகம் ஆண்ட உயர்ந்தோர் மருக = உலகை ஆண்ட உயர்ந்தோர்களின் வழித்தோன்றலே!

கருத்துரை:

உயர்ந்து எழுகின்ற அலைகளையும், அகன்ற நீர்ப்பரப்பையும் ஒலியையும் உடைய கடல் எல்லையாக அமையுமாறு, தேனடைகள் தொங்குகின்ற உயர்ந்த உச்சிகளையுடைய மலைகள் தோன்றியுள்ள அகன்ற உலகத்தில், வலப்பக்கமாக ஆகாயத்தில் காற்றுச் சுழல, நாள்மீன்கள் (நட்சத்திரங்கள்) தாம் செல்லும் பாதையில் ஒழுங்காகச் செல்ல, பகலை உண்டாக்கும் சிவந்த கதிரவனும், இரவில் ஒளிசெய்யும் வெண்மையான திங்களும் குற்றமற்றுத் தோன்றி விளங்க, மேகங்கள் தம் தொழிலைச் செய்து உதவுவதால் (காலத்தில் மழை பெய்வதால்), எல்லாத் திசைகளும் தழைக்க, விதைத்த ஒரு விதை ஆயிரம் விதைகளாக விளைய, விளைநிலங்களும் மரங்களும் பயன்தருவதை மேற்கொண்டு தழைப்ப, மக்கள் பசியும் பிணிகளும்  நீங்கி, அழகுடன் விளங்க, மிகவும் பொலிவுபெற்ற உலகத்தைத் தாங்கும் உயர்ந்த நிலையை உடைய, வலிமை மிக்க திசை யானைகள் தம் சுமை குறைந்து வருத்தமில்லாமல் சிறக்க, கண்ணுக்குக் காணக் காணக் குறையாத இனிமையும், உண்ண உண்ணக் குறையாத மிகுந்த வளத்தையும், உயர்ந்த பக்கங்களையுடைய சிறந்த தெருக்களில் இருக்கும் பொய் பேசுவதை அறியாத (தங்களின்) உண்மையான பேச்சால் புகழ் நிறைந்த நல்ல மக்களோடு (நல்ல அமைச்சர்களோடு), ஊழிக்காலம் எல்லாம் மற்றவர்கள் தமக்குக் கீழ்ப்படிந்து நடக்க, நீண்ட காலம் தம்மைப் புகழ்ந்து கூறுமாறு, உலகை ஆண்ட உயர்ந்தோர்களின் வழித்தோன்றலே!

 

சிறப்புக் குறிப்பு:

இளமை, செல்வம் மற்றும் உடல் ஆகியவை நிலையில்லாதவை என்பதைப் பற்றிப் பாடும் பாடல்கள் காஞ்சித்திணையில் அடங்கும். மதுரையில் வாழ்ந்த தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையைப் பற்றிக் கூறுவதால் இப்பாடல் மதுரைக் காஞ்சி என்று அழைக்கப்படுகிறது. மனித வாழ்க்கையில், இளமை, செல்வம் மற்றும் உடல் ஆகியவை அழிவது பெரிய அலைகள் கரைகளில் மோதி அழிவதைப் போன்றது என்று பாடலின் தொடக்கத்திலேயே புலவர் கூறுவது இந்தக் காஞ்சித்திணைப் பாடலின் கருத்தைக் கூறுவதற்கு ஒரு முன்னுரையாக அமைந்திருக்கிறது என்பது குறிப்பிடத் தக்கது.

 

 

ஒரு நாட்டில் மன்னன் முறையாக நல்லாட்சி செய்தால், அந்த நாட்டில் தேவையான காலத்தில் நன்கு மழைபொழியும் என்ற நம்பிக்கை பண்டைக் காலத்தில் தமிழகத்தில் நிலவியது என்பது, 

 

இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட
பெயலும் விளையுளும் தொக்கு.                           (குறள் 545)

 

முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி
ஒல்லாது வானம் பெயல்.                                   (குறள் 559)

 

போன்ற குறட்பாக்களிலிருந்து தெரிகிறது. இப்பாடலாசிரியரும் அதை கருத்தைத்தான் இங்கு குறிப்பிடுகிறார்.

 

இந்த உலகை எட்டு திசை யானைகள் தாங்கிக்கொண்டிருப்பாதாக புராணங்கள் கூறுகின்றன. பாண்டிய நாட்டில் மக்கள் மனச்சுமையின்றி மகிழ்ச்சியாக வாழ்வதால் உலகின் சுமை குறைந்து இருந்ததாகவும், அதனால், எட்டு திசை யானைகளும் வருத்தமில்லாமல் இருந்ததாகவும் புலவர் கற்பனை செய்கிறார்

 

 

 

தென்னவர் போற்றும் மன்னவன்

 

பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின்
நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர்          25


இணை ஒலியிமிழ் துணங்கைச் சீர்ப்
பிணை யூபம் எழுந்து ஆட
அஞ்சு வந்த போர்க்களத் தான்
ஆண் தலை அணங்கு அடுப்பின்
வய வேந்தர் ஒண் குருதி                 30

சினத் தீயின் பெயர்பு பொங்கத்
தெறல் அருங் கடுந் துப்பின்
விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின்
தொடித் தோட்கை துடுப்பு ஆக
ஆடுற்ற ஊன் சோறு                      35

நெறி அறிந்த கடி வாலுவன்
அடி ஒதுங்கிப் பின் பெயராப்
படையோர்க்கு முருகு அயர
அமர் கடக்கும் வியன் தானைத்
தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின்    40

தொல்முது கடவுட் பின்னர் மேய
வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந

அருஞ்சொற்பொருள்:

24. கோடு = கொம்பு; குழும்பு = திரள்

 

25. நிணம் = கொழுப்பு(தசை)

 

26. இமிழ்தல் = ஒலித்தல்; துணங்கை = முடக்கிய இருகைகளையும் விலாப்புடைகளில் ஒற்றியடித்துக்கொண்டு அசைந்தாடும் ஒருவகைக் கூத்து; சீர் = தாளம்

 

27. பிணை = நெருக்கம்; யூபம் = தலை இல்லாத பிணம்

 

29. அணங்கு = வருத்துகின்ற

 

30. வயம் = வலிமை

 

31. பெயர்பு = உலாவி

 

32. தெறல் = சினத்தல்; தெறலரும் = சினத்தற்கு இயலாத; துப்பு = வலிமை

 

33. விறல் =வெற்றி; விழு = துன்பமான; சூர்ப்பு = கொடுந்தொழில்

 

34. தொடி = வீரவளை

 

35. ஆடுதல் = கலத்தல் (துழாவுதல்)

 

36. கடி = பேய்; வாலுவன் = சமைப்பவன்

 

38. முருகு = வேள்வி; அயர்தல் = செய்தல்

 

39. அமர் = போர்; கடக்கும் = வெல்லும்; வியன் = அகலம் (மிகுதி)

 

40. பெயரிய = பெயரையுடைய; துன்னுதல் = நெருங்குதல்; துப்பு = வலிமை

 

41. மேய = வந்த (வழித்தோன்றிய)

 

42. வரை = மலை; பொருப்பு = மலை; பொருநன் = அரசன்

 

பதவுரை:

24-25. பிணக் கோட்ட களிற்றுக் குழும்பின் நிணம் வாய்ப்பெய்த பேய் மகளிர் = போரில் இறந்த வீரர்களின் பிணங்களைத் தங்கள் கொம்புகளில் கோத்துக்கொண்டு திரியும் யானைக் கூட்டத்தின் தசைகளைத் தின்ற பெண்பேய்கள்,

 

26 27. இணை ஒலியிமிழ் துணங்கைச் சீர்ப் பிணை யூபம் எழுந்து ஆட = ஆரவாரமான ஒலியுடன் கூடித் துணங்கைக் கூத்து ஆடுகின்றபொழுது, அங்கே ஒலியுடன் கூடிய தாளத்துக்கு ஏற்ப, தலையில்லாத பிணங்கள் நெருக்கமாக எழுந்து ஆடுகின்ற,

28. அஞ்சு வந்த போர்க்களத் தான் = காண்பவர்க்கு அச்சத்தைத் தரும் போர்க்களத்தில்,

29. ஆண் தலை அணங்கு அடுப்பின் = வீரர்களின் தலைகளை, காண்பவர்களை வருத்துகின்ற அடுப்பாகக் கொண்டு,

30. வய வேந்தர் ஒண் குருதி = வலிமை மிக்க வேந்தர்களின் குருதியை (இரத்தத்தை) உலை நீராகவும்,

31.. சினத் தீயின் பெயர்பு பொங்க = சினத்தை நெருப்பாகவும் கொண்டு,

32-35. தெறல் அருங் கடுந் துப்பின் விறல் விளங்கிய விழுச் சூர்ப்பின் தொடித் தோட்கை துடுப்பு ஆக ஆடுற்ற ஊன் சோறு = பகைவர்களால் வெல்லுதற்கரிய மிகுந்த வலிமையோடும் வெற்றியோடும் விளங்கிய, துன்பத்தைத் தரும்  கொடுந்தொழில் புரிந்த வீர்களின்  வளையல் அணிந்த தோளையுடைய கைகளைத் துடுப்பாகக் கொண்டு துழாவிச் சமைத்த ஊன்கலந்த சோற்றை,

36. நெறி அறிந்த கடி வாலுவன் = பரிமாறும் முறையறிந்த பேய்மகனாகிய சமையற்காரன்,

37-38. அடி ஒதுங்கிப் பின் பெயராப் படையோர்க்கு முருகு அயர = வைத்த அடியைப் பின்வாங்காமல் போரில் இறந்த வீரர்களுக்கு வேள்வி செய்யும்படி,

39. அமர் கடக்கும் வியன் தானை = போரில் வெல்லும் பெரிய படையையுடைய,

40. தென்னவன் பெயரிய துன்னருந் துப்பின் = தென்னவன் (பாண்டியன்) என்னும் பெயரையுடைய,

41. தொல்முது கடவுட் பின்னர் மேய = பழம்பெரும் கடவுளின் வழிவந்த,

42. வரைத்தாழ் அருவிப் பொருப்பிற் பொருந = மலையிலிருந்து விழும் அருவிகளயுடைய மலைகள் உள்ள நாட்டுக்கு வேந்தனே!

 

கருத்துரை:

உன்னுடைய போர்க்களங்களில், போரில் இறந்த வீர்களின் பிணங்களைத் தங்கள் கொம்புகளில் கோத்துக்கொண்டு திரியும் யானைக் கூட்டத்தின் தசைகளைத் தின்ற பெண்பேய்கள், ஆரவாரமான ஒலியுடன் கூடித் துணங்கைக் கூத்து ஆடுகின்றபொழுது, அங்கே, ஒலியுடன் கூடிய தாளத்துக்கு ஏற்ப, தலையில்லாத பிணங்கள் நெருக்கமாக எழுந்து ஆடுகின்றன. அவை, காண்பவர்களுக்கு அச்சத்தைத் தருகின்றன. பகைவீரர்களின் தலைகளைக் காண்பவர்களை வருத்துகின்ற அடுப்பாகக் கொண்டு, வலிமை மிக்க பகைவேந்தர்களின் குருதியை (இரத்தத்தை) உலை நீராகவும், சினத்தை நெருப்பாகவும் கொண்டு, பகைவர்களால் வெல்லுதற்கரிய மிகுந்த வலிமையோடும் வெற்றியோடும் விளங்கிய, துன்பத்தைத் தரும் கொடுந்தொழில் புரிந்த பகைவீரர்களின் வளையல் அணிந்த தோளையுடைய கைகளைத் துடுப்பாகக் கொண்டு, துழாவிச் சமைத்த ஊன்கலந்த சோற்றைப் பரிமாறும் முறையறிந்த பேய்மகனாகிய சமையற்காரன், வைத்த அடியைப் பின்வாங்காமல் போரில் இறந்த வீரர்களுக்கு வேள்வி செய்கிறான். போரில் வெல்லும் பெரிய அத்தகைய படையையுடையவனே! தென்னவன் என்னும் பெயரையுடைய, பகைவர்கள் நெருங்க முடியாத வலிமையுடைய, பழம்பெரும் கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றலும், பக்கமலையில் வீழ்கின்ற அருவிகளையுடைய மலைக்கு வேந்தனே!

 

 

நெடுஞ்செழியனின் படைச் சிறப்பு, போர்த்திறமை,  

நிலந்தரு திருவிற் பாண்டியனின் வழித் தோன்றல்

விழுச் சூழிய விளங்கு ஓடைய
கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து
அளறு பட்ட நறுஞ் சென்னிய                     45

வரை மருளும் உயர் தோன்றல
வினை நவின்ற பேர் யானை
சினஞ் சிறந்து களன் உழக்கவும்
மா எடுத்த மலி குரூஉத் துகள்
அகல் வானத்து வெயில் கரப்பவும்                50

வாம் பரிய கடுந்திண்தேர்
காற்று என்னக் கடிது கொட்பவும்
வாள் மிகு மற மைந்தர்
தோள் முறையான் வீறு முற்றவும்
இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப்             55

பொருது அவரைச் செரு வென்றும்
இலங்கு அருவிய வரை நீந்திச்
சுரம் போழ்ந்த இகல் ஆற்றல்
உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின்
நிலந் தந்த பேர் உதவிப்                          60

பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல்

43. விழு = சிறந்த; சூழி = யானையின் முகபடாம்; ஓடை = யானையின் நெற்றிப்பட்டம்

 

44. கமழ்தல் = மணத்தல்; கடாம் = யானையின் மதநீர்

 

45 அளறு = சேறு; நறும் = மணக்கும்; சென்னி = தலை

 

46. வரை = மலை; மருளும் = மயங்கும்; தோன்றல = தோற்றத்தையுடைய

 

47. நவின்ற = பயின்ற; பேர் யானை = பெரிய யானை

 

48. களன் = போர்க்களம்; உழக்கவும் = கொன்று திரியவும் (கலக்கவும்)

 

49. மா = குதிரை; மலிதல் = மிகுதல்; குரூஉ = நிறம்; துகள் = புழுதி

 

50. அகல் = அகன்ற; கரப்ப = மறைக்க

 

51. வாவுதல் = தாவுதல்; பரி = குதிரை; வாம்பரிய = தாவும் குதிரைகளையுடைய

 

52. கடிது = விரைந்து; கொட்ப = சுழல

 

54. வீறு = வெற்றி; முற்றவும் = முற்றுப் பெறவும்

 

55. இரு = பெரிய; வேளிர் = குறுநிலமன்னர்; சாய்தல் = அழிதல்

 

56. செரு = போர்

 

57. இலங்குதல் = விளங்குதல்; வரை = மலை

 

58. சுரம் = காடு; போழ்ந்த = பிளந்த; இகல் = பகை, போர்

 

59. விழு = சிறந்த; சிறப்பு = தலைமை

 

61. பொலம் = பொன்; தார் = மாலை; நெடியோன் = நிலந்தரு திருவிற் பாண்டியன்; உம்பல் =

வழித்தோன்றல்

 

பதவுரை:

43. விழுச் சூழிய விளங்கு ஓடைய = சிறந்த முகபடாத்தையும் விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையும்  கொண்ட,

 

44-45. கடுஞ் சினத்த கமழ் கடாஅத்து அளறு பட்ட நறுஞ் சென்னிய = கொடிய சினத்துடன் கூடிய யானையின் மணமுள்ள மதநீர் பட்டு சேறு படிந்த தலையை உடைய,

 

46. வரை மருளும் உயர் தோன்றல = அந்த யானையைக் காண்போர், அது ஒரு மலையோ என்று கலங்கும்படி உயர்ந்த தோற்றத்தையுடைய,

 

47. வினை நவின்ற பேர் யானை = போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற அந்தப் பெரிய யானை,

 

48. சினஞ் சிறந்து களன் உழக்கவும் = சினம் மிகுந்து போர்க்களத்தில், பகைப் படைவீரர்களைக் கொன்று திரிய,

 

49-50. மா எடுத்த மலி குரூஉத் துகள் அகல் வானத்து வெயில் கரப்பவும் = குதிரைப்படை பகைவரைத் தாக்கியதால் எழுந்த பல நிறமான புழுதி, அகன்ற வானத்தை மறைக்குமாறு,

 

51-52. வாம் பரிய கடுந்திண்தேர் காற்று என்னக் கடிது கொட்பவும் = தாவும் குதிரைகள் பூட்டிய, விரைந்து செல்லும் தேர்ப்படை, காற்று அடித்தாற்போல் சுழல,

 

53-54. வாள் மிகு மற மைந்தர் தோள் முறையான் வீறு முற்றவும் = வாள் போரில் வல்லமை மிக்க வீரர்கள் தங்கள் தோள் வலிமையால் வெற்றிபெறவும்,

 

55-56. இருபெரு வேந்தரொடு வேளிர் சாயப் பொருது அவரைச் செரு வென்றும் = முடிசூடிய இரண்டு பெரிய வேந்தர்களுடன் (சேரனுடனும் சோழனுடனும்) குறுநில மன்னர் பலரையும் அழித்து, அவர்களைப் போரில் வென்றும் அமையாமல்,

 

57-58. இலங்கு அருவிய வரை நீந்திச் சுரம் போழ்ந்த இகல் ஆற்றல் = விளங்கும் அருவிகளையுடைய  மலைகளைக் கடந்து, காடுகளைப் பிளந்து, பகைவர்களை அழித்த வலிமையுடையோனும்,

 

59-60. உயர்ந்து ஓங்கிய விழுச் சிறப்பின் நிலந் தந்த பேர் உதவிப் = மிக உயர்ந்த சிறப்புடைய தலைமையும், பகைவர்களை வெற்றிபெற்று, பகைவர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று,  மக்களுக்கு உதவிய,

 

 61. பொலந்தார் மார்பின் நெடியோன் உம்பல் = பொன்னால் செய்த மாலையை அணிந்த மார்பினை உடைய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழ் பெற்றவனின் வழித்தோன்றலே!

 

கருத்துரை:

நீ போர் புரியும்பொழுது, உன்னுடைய போர்க்களங்களில், சிறந்த முகபடாத்தையும் விளங்குகின்ற நெற்றிப்பட்டத்தையும் கொண்ட, கொடிய சினத்துடன் கூடிய யானையின் மணமுள்ள மதநீர் பட்டு அதன் தலை சேறு படிந்ததுபோல் இருக்கும். அது ஒரு மலையோ என்று காண்பவர்கள் கலங்கும்படி தோற்றம் அளிக்கும். போர்த்தொழிலில் பயிற்சி பெற்ற அந்தப் பெரிய யானை, சினம் மிகுந்து, போர்க்களத்தில், பகைப் படைவீரர்களைக் கொன்று திரியும். குதிரைப்படை பகைவரைத் தாக்குவதால் எழுந்த பல நிறமான புழுதி, அகன்ற வானத்தை மறைக்கும். தாவும் குதிரைகள் பூட்டிய, விரைந்து செல்லும் தேர்ப்படை காற்று அடித்தாற்போல் சுழலும். வாட்போரில் வல்லமை மிக்க வீரர்கள் தங்கள் தோள் வலிமையால் வெற்றி பெற்றார்கள். இவ்வாறு நடைபெற்ற போரில்,

 

 முடிசூடிய இரண்டு பெரிய வேந்தர்களுடன் (சேரனும் சோழனும்) குறுநில மன்னர் பலரையும் அழித்தும், அவர்களைப் போரில் வென்றும் அமையாமல், விளங்கும் அருவிகளையுடைய மலைகளைக் கடந்து, காடுகளைப் பிளந்து, பகைவர்களை அழித்த வலிமையுடையவனே!, மிக உயர்ந்த சிறப்புடைய தலைமையும், பகைவர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று,  மக்களுக்கு உதவிய, பொன்னால் செய்த மாலையை அணிந்த மார்பினை உடைய, நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழ் பெற்றவனின் வழித்தோன்றலே!

 

சிறப்புக் குறிப்பு:

உலக நாடுகளை ஆண்ட அரச பரம்பரைகளில் பாண்டியர் பரம்பரை மிகப் பழமையான பரம்பரைகளில் ஒன்று என்று கருதப்படுகிறது. பாண்டிய மன்னர்களின் வரிசையில், வடிம்பலம்ப நின்ற பாண்டியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்ட முதல் மன்னன் என்று வரலாற்று அறிஞர்கள் கருதுகின்றனர். இவன் காலத்தில் கடல்கோள் ஏற்பட்டு, அப்பொழுது தலைநகராக இருந்த மதுரை நகரம் அழிந்ததாகக் கூறப்படுகிறது. கடல் நீரில் மூழ்கிப்போன நிலப்பரப்புக்கு ஈடாக, வடக்கே தன் அரசின் எல்லையை விரிவு படுத்தியதால், இவன் நிலந்தரு திருவிற் பாண்டியன் என்றும், நீண்ட காலம் ஆண்டதனால் நெடியோன் என்றும் அழைக்கப்பட்டான். இவனுக்குப் பிறகு முடத்திருமாறன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டதாக வரலாறுகளில் காண்கிறோம். முடத்திருமாறனுக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்டவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி. பல யாகசாலைகளை அமைத்துப் பல வேள்விகளை நடத்தியதால் இவன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்று அழைக்கப்பட்டான். பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதிக்குப் பிறகு பாண்டிய நாட்டை ஆண்ட மன்னன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன். இவன் கோவலனுக்குக் கொலை தண்டனை வழங்கியது தவறு என்று கண்ணகி சுட்டிக்காட்டியவுடன், அக்கணமே உயிர் துறந்தான். ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் இறந்த பிறகு, அவன் இளவல் வெற்றிவேற் செழியன் என்பவன் பாண்டிய நாட்டை ஆண்டான். வெற்றிவேற் செழியன் இறந்த பிறகு, அவன் மகன் நெடுஞ்செழியன் என்பவன் பாண்டிய மன்னனாகப் பதவி ஏற்றான். இவன் சேர மன்னனையும், சோழ மன்னனையும், ஐந்து குறுநில மன்னர்களையும் தலையாலங்கானம் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் வென்றதால், தலயாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் அழைக்கப்பட்டான். இவனே, இப்பாட்டுடைத் தலைவன்.

 

பாண்டியனின் வெற்றியும் சாலியூரைக் கைப்பற்றியதும்

 

மரம் தின்னூஉ வரை உதிர்க்கும்
நரை உருமின் ஏறு அனையை
அருங்குழு மிளைக் குண்டுக் கிடங்கின்
உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின்          65

நெடு மதில் நிரை ஞாயில்
அம் புமிழ் அயில் அருப்பம்
தண் டாது தலைச் சென்று
கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின்
தென்குமரி வட பெருங்கல்                70

குண குட கடலா எல்லைத்
தொன்று மொழிந்து தொழில் கேட்ப
வெற்றமொடு வெறுத்து ஒழுகிய
கொற்றவர் தம் கோன் ஆகுவை
வான் இயைந்த இருமுந்நீர்ப்               75

பேஎம் நிலைஇய இரும் பெளவத்துக்
கொடும் புணரி விலங்கு போழக்
கடுங்காலொடு கரை சேர
நெடுங் கொடிமிசை இதை எடுத்து
இன் இசைய முரச முழங்கப்              80

பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு இழிதரும்
ஆடு இயற் பெரு நாவாய்
மழை முற்றிய மலை புரையத்
துறை முற்றிய துளங்கு இருக்கைத்        85


தெண் கடல் குண்டு அகழிச்
சீர் சான்ற உயர் நெல்லின்
ஊர் கொண்ட உயர் கொற்றவ

 

 

அருஞ்சொற்பொருள்:

62. தின்னூஉ = தின்று (இங்கு சுட்டெரித்த்லைக் குறிக்கிறது); உதிர்க்கும் = பொடியாக்கும்; வரை = மலை

 

63. நரை = பெருமை; உரும் = அச்சம்; ஏறு = இடி

 

64. குழு = கூட்டம்; மிளை = காவற் காடு; குண்டு = ஆழம்; கிடங்கு = அகழி

 

65. நிரை = கோபுரம்; புதவு = வாயில்

 

66. நிரை = வரிசை; ஞாயில் = வீரர்கள் மறைந்துகொள்வதற்காக மதில்களில் உள்ள இடம்

 

67. உமிழ்தல் = வெளிப்படுதல்; அயில் = வேல்; அருப்பம் = அரண்

 

68. தண்டாது = நீங்காமல் (விடாது); தலை = இடம்

 

69. கொண்டு =  பகையரசரின் நாடு அரண் முதலியவற்றைக் கைக்கொண்டு; விழுச் சிறப்பு = மாபெருஞ் சிறப்பு

 

70. பெருங்கல் = பெரிய மலை (இமயம்)

 

71. குண = கிழக்கு; குட = மேற்கு

 

73. வெற்றம் = வெற்றி

 

74, கொற்றவர் தம் கோன் = மன்னர்களுக்கெல்லாம் மன்னன்

 

75. வான் இயைந்த = வானவெளியோடு ஒன்றுபட்டு; இரு = பெரிய; முந்நீர் = மூன்று வகையான நீர்

(ஆற்று நீர், ஊற்று நீர், மழை நீர் ஆகிய மூன்றும் கலந்து இருப்பதால் முந்நீர் என்று கடல்

அழைக்கப்பட்டது)

 

76. பேஎம் = அச்சம்; இரு = கரிய; பௌவம் = கடல்

 

77. புணரி = அலை; விலங்கு =குறுக்கானது; போழ = பிளந்துகொண்டு

 

78. கால் = காற்று

 

79. இதை = கப்பலில் கட்டும் பாய்

 

81. மலிந்த = மிகுந்த. விழுப் பண்டம் = சிறந்த சரக்குகள்

 

82. இழிதரும் = இறக்குதலைச் செய்யும்

 

83. நாவாய் = கப்பல்

 

84. மழை = மேகம்; முற்றிய = சூழப்பட்ட; புரைய = போல

 

85. துளங்கு இறுக்கை = அசைகின்ற இருக்கை (துறைமுகம்)

 

86.  குண்டு = ஆழம்

 

87. சீர் சான்ற = சிறப்புக்கள் அமைந்த

 

88. நெல்லின் ஊர் = நெல்லூர் (நெல்லூர் என்னும் ஊர் சாலியூர் என்று பின்னர் அழைக்கப்பட்டதாகக்

கருதப்படுகிறது); கொற்றவ = மன்னா

 

 

பதவுரை:

62-63. மரம் தின்னூஉ வரை உதிர்க்கும் நரை உருமின் ஏறு அனையை = மரங்களைச் சுட்டெரித்து, மலைகளைத் தூள்தூளாக்கும் மிகுந்த அச்சத்தைத் தரும் பேரிடி போன்றவனே!

 

64. அருங்குழு மிளைக் குண்டுக் கிடங்கின் = பகைவர் நெருங்குதற்கரிய திரட்சியையுடைய ஆழமான அகழிகளையும்,

 

65. உயர்ந்து ஓங்கிய நிரைப் புதவின் =  உயர்ந்து ஓங்கிய கோபுர வாயில்களையும்,

 

66. நெடு மதில் நிரை ஞாயில் = நீண்ட மதில்களையும், வீரர்கள் மறைந்திருந்து அம்பெய்வதற்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ள இடங்களையும்,

 

67. அம்பு உமிழ் அயில் அருப்பம் = வீரர்கள் வேலையும் அம்பையும் வீசும் இடங்களில் உள்ள அரண்களையும்,

 

68. தண் டாது தலைச் சென்று = அவையுள்ளை இடங்களுக்குச் சென்று ஒன்றையும் விடாது,

 

69. கொண்டு நீங்கிய விழுச் சிறப்பின் = அவற்றைக் கைக்கொண்டு அழித்த மாபெருஞ் சிறப்போடு,

 

70. தென்குமரி வட பெருங்கல் = தெற்கே உள்ள குமரியும் வடக்கே உள்ள  இமயமும்,

 

71. குண குட கடலா எல்லை = கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாக உள்ள நாட்டில் உள்ள மன்னர்கள்,

 

72. தொன்று மொழிந்து தொழில் கேட்ப = வழிவழியாக வந்த தங்களின்  பெருமையைக் கூறி, உன் ஏவல் கேட்ப,

 

73. வெற்றமொடு வெறுத்து ஒழுகிய = வெற்றியோடு கீழ்ப்படிந்து நடக்கும்,

 

74. கொற்றவர் தம் கோன் ஆகுவை = மன்னர்களுக்கெல்லாம் மன்னன் நீ.

 

75-76. வான் இயைந்த இருமுந்நீர்ப் பேஎம் நிலைஇய இரும் பெளவத்து = வானத்தோடு ஒன்றுபட்டுத் தோன்றும், அச்சம் நிலைபெற்ற கரிய கடலில்,

 

77. கொடும் புணரி விலங்கு போழ = வளைந்து  வருகின்ற அலைகளைப் பிளந்துகொண்டு,

 

78. கடுங்காலொடு கரை சேர = கடிய காற்றின் உதவியால் ஓடித் துறையைச் சேரும் பொருட்டு,

 

79. நெடுங் கொடிமிசை இதை எடுத்து = உச்சியில் கொடியையுடைய  நெடிய பாய்மரங்களில் பாய் விரிக்கப்பட்டு,

 

80. இன் இசைய முரச முழங்கப் = இனிய ஓசையையுடைய முரசு முழங்க,

 

81-62. பொன் மலிந்த விழுப் பண்டம் நாடு ஆர நன்கு இழிதரும் = பொன் மிகுதற்குக் காரணமான உயர்ந்த சரக்குகளை நாட்டில் உள்ளவர்களுக்காக நன்றாகக் கொண்டுவந்து இறக்கும்,

 

83. ஆடு இயற் பெரு நாவாய் = அசையும் இயல்புடைய பெரிய கப்பல்கள்,

 

84. மழை முற்றிய மலை புரைய = மேகங்களால் சூழப்பட்ட மலைகளைப்  போல் தோற்றமளித்து,

 

85. துறை முற்றிய துளங்கு இருக்கை = துறைமுகத்தில் கடலால் சூழப்பட்டு அசைந்துகொண்டு நிற்கும்,

 

86. தெண் கடல் குண்டு அகழி = தெளிந்த கடலை அகழியாகக் கொண்ட, 

 

87-88. சீர் சான்ற உயர் நெல்லின் ஊர் கொண்ட உயர் கொற்றவ = சிறந்த நெல் விளையும் சாலியூர் என்னும் ஊரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே!

கருத்துரை:

மரங்களைச் சுட்டெரித்து, மலைகளைத் தூள்தூளாக்கும் மிகுந்த அச்சத்தைத் தரும் பேரிடி போன்றவனே!  பகைவர் நெருங்குதற்கரிய திரட்சியையுடைய ஆழமான அகழிகளையும்,  உயர்ந்து ஓங்கிய கோபுர வாயில்களையும், நீண்ட மதில்களையும், வீரர்கள் மறைந்திருந்து அம்பெய்வதற்காக வரிசையாக வைக்கப்பட்டுள்ள இடங்களையும், வீரர்கள் வேலையும் அம்பையும் வீசும் இடங்களில் உள்ள அரண்களையும்,  அவையுள்ள இடங்களுக்குச் சென்று ஒன்றையும் விடாது, அவற்றைக் கைக்கொண்டு அழித்த மாபெருஞ் சிறப்போடு, தெற்கே உள்ள குமரியும் வடக்கே உள்ள பெரிய இமயமும், கிழக்கிலும் மேற்கிலும் கடலை எல்லையாகவும் கொண்ட நாட்டில் உள்ள மன்னர்கள், வழிவழியாக வந்த தங்களின்  பெருமையைக் கூறி, உன் ஏவல் கேட்ப, வெற்றியோடு கீழ்ப்படிந்து நடக்கும்,  மன்னர்களுக்கெல்லாம் மன்னன் நீ. வானத்தோடு ஒன்றுபட்டுத் தோன்றும், அச்சம் நிலைபெற்ற கரிய கடலில், வளைந்து  வருகின்ற அலைகளைப் பிளந்துகொண்டு, கடிய காற்றின் உதவியால் ஓடித் துறையைச் சேரும் பொருட்டு, கொடியை உச்சியிலுடைய நெடிய பாய்மரங்களில் பாய் விரிக்கப்பட்டு,  இனிய ஓசையையுடைய முரசு முழங்க, பொன் மிகுதற்குக் காரணமான உயர்ந்த சரக்குகளை நாட்டில் உள்ளவர்களுக்காக நன்றாகக் கொண்டுவந்து இறக்கும், அசையும் இயல்புடைய பெரிய கப்பல்கள், மேகங்களால் சூழப்பட்ட மலைபோல் தோற்றமளித்து, துறைமுகத்தில் கடலால் சூழப்பட்டு அசைந்துகொண்டு நிற்கின்றன. தெளிந்த கடலை அகழியாகக் கொண்ட, சிறந்த நெல் விளையும் சாலியூர் என்னும் ஊரைக் கைக்கொண்ட உயர்ந்த வெற்றியை உடையவனே!

 

சிறப்புக் குறிப்பு:

சாலியூர் என்னும் ஊர், இன்று ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள நெல்லூர் என்னும் ஊரைக் குறிக்கிறது.


பொருநர்க்குப் பரிசு அளிக்கும் வேந்தே! குட்டுவர் வெல் கோவே!

 

நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர்
பாடு சிலம்பும் சை ற்றத்               90

தோடு வழங்கும் அகல் ஆம்பியின்
கயன் அகைய வயல் நிறைக்கும்
மென் தொடை வன் கிழாஅர்
அதரி கொள்பவர் பகடுபூண் தெள்மணி
இரும் புள் ப்பும் இசையே என்றும்       95


மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல்
பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப
ஒருசார், விழவு நின்ற வியல் ஆங்கண்
முழவுத் தோள் முரண் பொருநர்க்கு
உரு கெழு பெருஞ்சிறப்பின் . . . .          100

இரு பெயர்ப் பேர் ஆயமொடு
இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும்
பொலந்தாமரைப் பூச் சூட்டியும்
நலம் சான்ற கலம் சிதறும்
பல் குட்டுவர் வெல் கோவே!              105

அருஞ்சொற்பொருள்:

89. தெவ்வுதல் = கொள்ளுதல், நிறைத்தல்; நிரை = வரிசை; தொழுவர் = உழவுத் தொழில் செய்பவர்கள்

90. சிலம்பும் = ஒலிக்கும்

91. ஆம்பி = இறைகூடை (நீர் இறைக்கும் கருவி – சால்)

92. கயன் = கயம் (குளம்); அகைய = தழைக்க

93. தொடை = கட்டு; கிழாஅர் = பூட்டைப்பொறி (நீர் இறைக்கும் கருவி)

94. அதரி = கடா; அதரிகொள்ளுதல் = நெற்கதிரைக் கடாவிட்டு உழக்குதல்; பகடு = எருது

95. ஓப்பும் = விரட்டும்

96. முண்டகம் = கழிமுள்ளி (ஒரு கடல் பூ); மலிதல் = மிகுதல்; கானல் = கடற்கரைச் சோலை

97. பரதவர் = நெய்தல் நிலமக்கள்; குரவை = ஒருவகைக் கூத்து

98. வியல் = அகன்ற; ஆங்கண் = ஊர் இடத்தே

99. முரண் = மாறுபட்ட; பொருநர் - இங்கு தடாரி என்னும் பறையைக் கொட்டும் பொருநர்களைக் குறிக்கிறது

100. உரு = அச்சம்; கெழு = பொருந்திய

101.ஆயம் = கூட்டம்

102. இலங்கு = விளங்குகின்ற (ஒளி பொருந்திய); மருப்பு = தந்தம்

103. பொலன் = பொன்

104. நலம் = நன்மை; கலம் = கலன் (அணிகலன்கள்); சிதறுதல் = எல்லாருக்குங் கொடுத்தல்

105. குட்டுவர் = குட்ட நாட்டு அரசர்கள் (குட்ட நாடு என்பது தற்காலத்தில் கேரளாவில் உள்ள ஆலப்புழா, பத்தனம்திட்டா,கோட்டயம் ஆகிய மாவட்டங்கள் என்று கருதப்படுகிறது.)

பதவுரை:

89-91. நீர்த் தெவ்வும் நிரைத் தொழுவர் பாடு சிலம்பும் சை ற்றத் தோடு வழங்கும் அகல் ஆம்பியின் = நீரை இறைக்கூடையால் முகந்து வயலில் பாய்ச்ச வரிசையாக நிற்கும் உழவுத் தொழில் செய்வோர் பாடுவதால் எழும் இசையின் ஓசையும், ஏற்றம் இறைக்கும் அகன்ற இறைக்கூடையின் ஓசையும்,

 

92. கயன் அகைய வயல் நிறைக்கும் = குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையுமாறு நீரை முகந்து,  வயலை நிறைக்கின்ற,

 

93. மென் தொடை வன் கிழாஅர் = மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசையும்,

 

94. அதரி கொள்பவர் பகடுபூண் தெள்மணி = நெற்கதிரைக் கடாவிட்டு அடிக்கும் உழவர்களின் எருதுகளின் கழுத்தில்  பூட்டிய  தெளிந்த மணியின் ஓசையும்,

 

95. இரும் புள் ஓப்பும் இசையே = பெரிய பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசையும்,

 

96-97. என்றும் மணிப்பூ முண்டகத்து மணல்மலி கானல் பரதவர் மகளிர் குரவையொடு ஒலிப்ப = எந்த நாளும் நீலமணி போன்ற பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும் நெய்தல் நிலப் பரதவப் பெண்டிர் ஆடும் குரவைக் கூத்தின் ஓசையுடன் கூடி ஆரவாரிக்க,

 

98. ஒருசார், விழவு நின்ற வியல் ஆங்கண் = ஒரு பக்கத்தே, விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில்,

 

99. முழவுத் தோள் முரண் பொருநர்க்கு = முழவு  போன்ற தோளினையுடைய, (கல்வியால்) மாறுபடுதலையுடைய கூத்தர்க்கு,

 

100. உரு கெழு பெருஞ்சிறப்பின் = அச்சம் பொருந்திய பெரிய சிறப்பினையுடைய,

101. இரு பெயர்ப் பேர் ஆயமொடு = பிடி (பெண்யானை), கன்று என்னும் இரண்டு பெயரையுடைய  பெரிய கூட்டத்துடன்,

102. இலங்கு மருப்பின் களிறு கொடுத்தும் = ஒளியுடன் கூடிய கொம்புகளையுடைய ஆண்யானைகளைக் கொடுத்தும்,

103. பொலந்தாமரைப் பூச் சூட்டியும் = பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டி,

104. நலம் சான்ற கலம் சிதறும் = நல்ல அணிகலன்களைக் கொடுக்கும்,

105. பல் குட்டுவர் வெல் கோவே = பல குட்ட நாட்டு அரசர்களை வென்ற வேந்தனே!

கருத்துரை:

இறைக்கூடையால் முகந்து வயலில் நீரைப் பாய்ச்ச வரிசையாக நிற்கும் உழவுத் தொழில் செய்வோர் பாடும் இசையின் ஓசை எழும்; ஏற்றம் இறைக்கும் அகன்ற இறைக்கூடையின் ஓசையும், குளத்தின் நீர் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையுமாறு நீரை முகந்து, வயலை நிறைக்கின்ற, மென்மையான கட்டுக்களையுடைய வன்மையான ஏற்றப்பொறியின் ஓசை எழும்; நெற்கதிரைக் கடாவிட்டு அடிக்கும் உழவர்கள், எருதுகளின் கழுத்தில் பூட்டிய  தெளிந்த மணியின் ஓசையும், பெரிய பறவைகளைக் கடிந்து விரட்டும் ஓசையும் எழும். இவற்றோடு  எந்நாளும் நீலமணி போன்ற பூக்களையுடைய கழிமுள்ளிகளையுடைய மணல் மிக்க கடற்கரையிலிருக்கும் நெய்தல் நிலப் பரதவப் பெண்டிர் ஆடும் குரவைக்கூத்தின் ஆரவாரமும் சேர்ந்து ஒலிக்கும்.  இவ்வாறு விழாக்கள் நிறைந்த அகன்ற ஊர்களில், முழவு  போன்ற தோளினையுடைய, மற்ற பொருநர்களிடமிருந்து கல்வியால் மாறுபட்டு, தடாரிப் பறையைக் கொட்டும் பொருநர்க்கு, அச்சம் பொருந்திய பெரிய சிறப்பினையுடைய, பெண்யானைகளும் கன்றுகளும் ஆகிய பெரிய கூட்டங்களுடன், ஒளியுடன் கூடிய கொம்புகளையுடைய ஆண்யானைகளையும் கொடுத்து, பொன்னாற் செய்த தாமரைப் பூவைச் சூட்டி, நல்ல அணிகலன்களையும் கொடுக்கும் வேந்தனே! பல குட்ட நாட்டு அரசர்களை வென்ற பாண்டிய மன்னனே!

 

சிறப்புக் குறிப்பு: ”பொருநர், தடாரி முதலிய இசைக் கருவிகளை முழக்கிப் பாடுவோர். இவர் ஏர்க்களம் பாடுநரும், போர்க்களம் பாடுநரும் பரணி பாடுநரும் எனப் பலராவர். அவருள் ஈண்டு கூறப்பட்ட பொருநர், வைகறைப் பொழுதில் தடாரி கொட்டிப் பாடும் பொருநர் என்க.” என்று பெருமழைப்புலவர் பொ.வே. சோமசுந்தரனார் விளக்கம் அளிக்கிறார். அதாவது, இங்கு கூறப்பட்டுள்ள பொருநர்கள் மற்ற பொருநர்களிடமிருந்து மாறுபட்டு, வைகறைப் பொழுதில் தடாரி கொட்டிப் பாடுவதால், புலவர், ”முரண் பொருநர்” என்று குறிப்பிடுகிறார்.

குட்ட நாடு என்பது, இன்றைய கேரள மாநிலத்தில் உள்ள ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம் ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய பகுதி. இந்தப் பகுதி, நில வளமும் நீர் வளமும் மிகுந்த இடம். இன்றும், அங்கு ஆண்டு முழுதும் வேளாண்மைத் தொழில் நடைபெறுகிறது. அந்தப் பகுதி வளமானதாக இருப்பதால், அது கேரளாவின் ’அரிசிக் கிண்ணம்’ என்று அழைக்கப்படுகிறது.

நெடுஞ்செழியன் குறுநில மன்னர்களையும் சேர சோழரையும் வென்றது

கல் காயும் கடு வேனிலொடு
இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும்
வெள்ளம் மாறாது விளையுள் பெருக
நெல்லின் ஓதை அரிநர் கம்பலை . . .             110

புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே என்றும்
சலம் புகன்று சுறவுக் கலித்த
புலவு நீர் வியன் பெளவத்து
நிலவுக்கானல் முழவுத் தாழைக்
குளிர்ப் பொதும்பர் நளித் தூவல்                  115


நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை
இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு
ஒலி ஓவாக் கலியாணர்
முது வெள்ளிலை மீக் கூறும்
வியல் மேவல் விழுச் செல்வத்து . . . .           120

இரு வகையான் இசை சான்ற
சிறு குடிப் பெருந் தொழுவர்
குடி கெழீஇய நால் நிலவரொடு
தொன்று மொழிந்து தொழில் கேட்பக்
கால் என்னக் கடிது உராஅய்                      125


நாடு கெட எரிபரப்பி
ஆலங்கானத் அஞ்சுவர இறுத்து
அரசு பட அமர் உழக்கி
முரசு கொண்டு களம் வேட்ட
அடுதிறல் உயர் புகழ் வேந்தே . . . .              130

அருஞ்சொற்பொருள்:

106.கல் = மலை

 

107. இரு = பெரிய

 

108. வைகல் மீன் = விடியற்காலம் தோன்றும் வெள்ளி என்று அழைக்கப்படும் கோள்

 

110. ஓதை = ஒலி; கம்பலை = ஓசை, ஆரவாரம்

 

111. இமிழ்தல் = ஒலித்தல்

 

112. சலம் = மாறுபாடு; புகன்று = விரும்பி; சுறவு = சுறா; கலித்த = நெருங்கித் திரியும்

 

113. புலவு =புலால் நாற்றம்; வியன் = அகன்ற; பௌவம் = கடல்

 

114. கானல் = கடற்கரை

 

115. பொதும்பர் = இள மரங்கள் நிறைந்த காடு (சோலை); நளித் தூவல் = செறிந்த மழைத்துளி

 

116. திமில் = படகு (மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் படகு); கம்பலை = ஆரவாரம் (ஒலி)

 

117. இரு = பெரிய; செறு = பாத்தி; பகர்நர் = பண்டங்களை விற்கும் வணிகர்

 

118. ஓவா = ஓயாது; கலி = ஆரவாரம்; யாணர் = புதுவருவாய்

 

119. முதுவெள்ளிலை = ஒரு ஊர்; மீக்கூறுதல் = புகழ்ந்து பேசுதல்

 

120. வியன் = மிகுதி; மேவல் = விரும்புதல்; விழு = சிறந்த

 

121. இசை = புகழ்

 

122. தொழுவர் = தொழில் செய்பவர் (இங்கு வணிகரைக் குறிக்கிறது)

 

123. கெழீஇய = பொருந்திய; நால் நிலவரொடு = நான்கு வகையான நிலங்களோடு (இங்கு, நான்கு வகையான நிலங்கள் என்பது, குறிஞ்சி, முல்லை, மருதம் மற்றும் நெய்தல் ஆகிய நான்கு வகை நிலங்களைக் குறிக்கிறது)

 

124. தொன்று மொழிந்து தொழில் கேட்ப = வழிவழியாக வந்த தங்கள் பெருமையைக் கூறி உன் ஏவல் கேட்ப,

 

125. கால் = காற்று; உராய் = பரந்து (விரைந்து)

 

127. ஆலங்கானத்து = தலையாலங்கானத்து;அஞ்சு வர = அச்சந் தோன்றும்படி; இறுத்து = தங்கி

 

128. அஞ்சு பட = அரசர்கள் அழியுமாறு; அமர் = போர்; உழக்குதல் = வெல்லல்

 

129. வேட்டல் = வேள்வி நடத்துதல்

 

130.அடுதல் = கொல்லுதல்; திறல் = வலிமை

 

 பதவுரை:

106. கல் காயும் கடு வேனிலொடு = மலைகள் எல்லாம்  கடுமையான வெயிலால் சூடாகிக் காய்ந்து போனாலும்,

 

107. இரு வானம் பெயல் ஒளிப்பினும் = பெரிய மேகங்கள் மழை பேய்வதை நிறுத்திக் கொண்டாலும்,

 

108. வரும் வைகல் மீன் பிறழினும் = விடியற்காலத்தில் தோன்றும் வெள்ளி என்ற கோள் திசை மாறினாலும்

109. வெள்ளம் மாறாது விளையுள் பெருக = ஆறுகளில் நீர் வற்றாது விளைச்சல் பெருகியிருக்கும்.

 

110. நெல்லின் ஓதை அரிநர் கம்பலை = காற்றில் நெற்கதிர்கள் அசைவதால் எழும் ஒலியும், நெற்கதிர்களை அறுப்பவர்கள் செய்யும் ஆரவாரமும்,

 

111. புள் இமிழ்ந்து ஒலிக்கும் இசையே = பறவைகள் கத்துவதால் உண்டாகிய ஓசையும்,

 

112- 113. என்றும் சலம் புகன்று சுறவுக் கலித்த புலவு நீர் வியன் பெளவத்து = எந்நாளும் பகைமையை விரும்பி சுறா மீன்கள் நெருங்கித் திரியும், புலால் நாற்றம்  உடைய நீரையுடைய அகன்ற கடலிடத்தே,

 

114-115. நிலவுக்கானல் முழவுத் தாழைக்குளிர்ப் பொதும்பர் நளித் தூவல் = நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா போன்ற காயையுடைய  தாழையைக் வேலியாகக்கொண்ட, குளிர்ந்த சோலையில் செறிந்த நீர்த்திவலையின் ஓசையும்,

 

116. நிரைதிமில் வேட்டுவர் கரைசேர் கம்பலை = வரிசையாக  மீனவர்களின் படகுகள் கரைக்கு வந்து சேர்ந்தால் உண்டாகிய ஆரவாரமும்,

 

117. இருங்கழிச் செறுவின் வெள்உப்புப் பகர்நரொடு = பெரிய உப்பங்கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு,

 

118. ஒலி ஓவாக் கலியாணர் = ஒழியாமல் ஒலிக்கும் ஆரவாரத்தோடு புதுவருவாயையுடைய,

 

119. முது வெள்ளிலை மீக் கூறும் = முதுவெள்ளிலை என்னும் ஊரில் வாழ்வோரால்  புகழப்படுகின்ற,

 

120. வியல் மேவல் விழுச் செல்வத்து = மிகுதியாக விரும்பப்படுகின்ற சிறந்த செல்வமாகிய,

 

121. இரு வகையான் இசை சான்ற = இரண்டு வகைகளிலும் புகழ் நிறைந்த,

 

122. சிறு குடிப் பெருந் தொழுவர் = சிறுகுடி மக்களும் பெரிய வணிகரும்,

 

123. குடி கெழீஇய நால் நிலவரொடு = குடிகள் மிகுந்த நான்கு வகை நிலங்களில் வாழ்வாரோடு,

 

124. தொன்று மொழிந்து தொழில் கேட்ப = வழிவழியாக வந்த தங்கள் பெருமையைப் பாராட்டி, உன் ஏவல் கேட்ப,

 

 125. கால் என்னக் கடிது உராஅய் = காற்றைப் போல் விரைந்து சென்று,

 

126. நாடு கெட எரிபரப்பி = பகைவர் நாடு அழியுமாறு தீ மூட்டி,

 

127. ஆலங்கானத் அஞ்சுவர இறுத்து = தலையாலங்கானத்தில்  பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி,

 

128. அரசு பட அமர் உழக்கி = முடி சூடிய இரு பெருமன்னரும் (சேரனும் சோழனும்) குறுநில மன்னர் ஐவரும் அழியுமாறு போரில் வெற்றிபெற்று,

 

129. முரசு கொண்டு களம் வேட்ட = அவர்களின் முரசைக் கைக்கொண்டு, களவேள்வி நடத்தி,

 

130. அடுதிறல் உயர் புகழ் வேந்தே = கொல்லும் ஆற்றல் மிகுந்த புகழையுடைய வேந்தனே!

 

கருத்துரை:

மலைகள் எல்லாம் கடுமையான வெயிலால் சூடாகிக் காய்ந்து போனாலும், பெரிய மேகங்கள் மழை பெய்வதை நிறுத்திக் கொண்டாலும், விடியற்காலத்தில் தோன்றும் வெள்ளிமீன் (வெள்ளி என்னும் கோள்) திசை மாறினாலும், ஆறுகளில் நீர் வற்றாது விளைச்சல் பெருகியிருக்கும்; காற்றில் நெற்கதிர்கள் அசைவதால் ஒலி எழும்; அவற்றை அறுப்பவர்கள் ஆரவாரிப்பர். அங்கே பறவைகள் கத்துவதால் உண்டாகிய ஓசையும், எந்நாளும் பகைமையை விரும்பி சுறா மீன்கள் நெருங்கித் திரியும் புலால் நாற்றம்  உடைய நீரையுடைய அகன்ற கடலிடத்தே, நிலாப்போலும் மணலையுடைய கரையினில் குடமுழா போன்ற காயையுடைய  தாழையை வேலியாகக் கொண்ட குளிர்ந்த சோலையில் செறிந்த நீர்த்திவலையின் ஓசையும், வரிசையாக  மீனவர்களின் படகுகள் கரைக்கு வந்து சேர்ந்ததால் உண்டாகிய ஆரவாரமும், பெரிய உப்பங்கழியின் பாத்திகளில் விளைந்த வெள்ளை உப்பை விற்போரின் ஒலியோடு, ஒழியாமல் ஒலிக்கும் ஆரவாரத்தோடு புதுவருவாயையுடைய, முதுவெள்ளிலை என்னும் ஊரில் வாழ்வோரால்  புகழப்படுகின்ற, மிகுதியாக விரும்பப்படுகின்ற சிறந்த செல்வமாகிய, இரண்டு வகைகளிலும் புகழ் நிறைந்த, சிறுகுடி மக்களும் பெரிய வணிகரும், குடிகள் மிகுந்த நான்கு வகை நிலங்களில் வாழ்வாரோடு, வழிவழியாக வந்த தங்கள்  பெருமையைக் கூறி, உன் ஏவல் கேட்கும்படி,  காற்றைப் போல் விரைந்து சென்று, பகைவர் நாடு அழியுமாறு தீ மூட்டி, தலையாலங்கானத்தில்,  பகைவர்க்கு அச்சம் தோன்றும்படி தங்கி,  முடி சூடிய இரு பெருமன்னரும் (சேரனும் சோழனும்) குறுநில மன்னர் ஐவரும் அழியுமாறு போரில் வெற்றிபெற்று, அவர்களின் முரசைக் கைக்கொண்டு, களவேள்வி நடத்தி, கொல்லும் ஆற்றல் மிகுந்த புகழையுடைய வேந்தனே!

 

சிறப்புக் குறிப்பு:

சுக்கிரன் என்னும் கோள்  தெற்குத் திசையில் சென்றால் உலகில் வறட்சியும் வறுமையும் மிகுந்து தீய செயல்கள் நிகழும் என்று சோதிட நூல்கள் கூறுகின்றன. மேலும், இதே கருத்து புறநானூறு[1] மற்றும்  சிலப்பதிகாரம்[2] ஆகிய நூல்களிலும் காணப்படுகிறது.

முதுவெள்ளிலை என்னும் ஊர், இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில் சங்க காலத்தில் இருந்த ஒரு துறைமுகப் பட்டினம் என்று கருதப்படுகிறது.

இப்பாட்டுடைத் தலைவன் நெடுஞ்செழியன் சேரனையும் சோழனையும் (சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறையையும், சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளியையும்), ஐந்து வேளிர் குறுநில மன்னர்களையும் (சேரன் செம்பியன், திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய ஐவரையும்) சோழ நாட்டில் உள்ள தலையாலங்கானத்தில் நடைபெற்ற போரில் வென்றான். 

 

 

கொற்கைப் பட்டினம், குறுநில மன்னரை வென்றது,

போரில் நெடுஞ்செழியன் கொண்டுள்ள ஊக்கம்

நட்டவர் குடி உயர்க்குவை
செற்றவர் அரசு பெயர்க்குவை
பேர் உலகத்து மேஎந் தோன்றிச்
சீருடைய விழுச் சிறப்பின்
விளைந்து முதிர்ந்த விழுமுத்தின்                 135


இலங்கு வளை இருஞ்சேரிக்
கட் கொண்டிக் குடிப்பாக்கத்து
நற்கொற்கையோர் நசைப் பொருந
செற்ற தெவ்வர் கலங்கத் தலைச்சென்று
அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் . . .    140

கோழ் ஊஉன் குறைக் கொழுவல்சிப்
புலவு வில் பொலி கூவை
ஒன்று மொழி ஒலி இருப்பின்
தென் பரதவர் போர் ஏறே
அரிய வெல்லாம் எளிதினிற் கொண்டு            145


உரிய எல்லாம் ஓம்பாது வீசி
நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து
பனிவார் சிமையக் கானம் போகி
அகநாடு புக்கவர் விருப்பம் வெளவி
யாண்டு பல கழிய வேண்டுபுலத்து இறுத்து . . .   150

மேம்பட மரீஇய வெல்போர்க் குருசில்

அருஞ்சொற்பொருள்:

131.நட்டவர் = நண்பர்கள்; உயர்க்குவை = உயர்த்துவாய்

 

132. செற்றவர் = பகை கொண்டவர்கள்

 

133. மேஎம் = மேம்பட

 

134. சீர் = புகழ்; விழு = சிறந்த; சிறப்பு = தலைமை

 

135. விழு = சிறந்த

 

136. இலங்குதல் = விளங்குதல்; வளை = சங்கு; இரு = பெரிய; சேரி = குடியிருப்பு

 

137. பாக்கம் = கடற்கரையூர்; கொண்டி = உணவு

 

138. கொற்கை = பாண்டிய நாட்டில் இருந்த ஒரு துறைமுகம்; நசை = விருப்பம்

 

139. செற்ற = பகைக்கு ஆளான; தெவ்வர் = பகைவர்

 

140. அஞ்சு வர = அச்சம் தோன்றுமாறு; தட்குதல் = தங்குதல்; அணங்கு = வருத்தம்; துப்பு = வலிமை

 

141. கோழ் = கொழுத்த; ஊன்குறை = இறைச்சி. வல்சி = சோறு

 

142. புலவு = புலால நாற்றம்; பொலிதல் = பருமை; கூவை = கூவைக் கிழங்கு

 

143. ஒன்று மொழி = வஞ்சினம்

 

144. பரதவர் = நெய்தல் நில மக்கள்; ஏறு = சிங்கம்

 

146. வீசுதல் = குறையாது கொடுத்து

 

147. நனி புகன்று = மிகவும் விரும்பி; ஏற்றெழுந்து = மேற்கொண்டு சென்று

 

148. பனிவார் = பனி ஒழுகும்; சிமையம் = சிகரம்; கானம் = காடு

 

149. அருப்பம் = அரண்; வௌவி = கைப்பற்றி

 

150. இறுத்து - தங்கி

 

151. மரீஇய = கலந்த (அங்குள்ள மக்களோடு கலந்து); குருசில் = தலைவன்

 

 

 பதவுரை:

131. நட்டவர் குடி உயர்க்குவை = உன்னோடு நட்பு கொண்டவர்களை உயர்வடையச் செய்வாய்,

 

132. செற்றவர் அரசு பெயர்க்குவை = உன்னோடு பகைத்துக்கொண்டவர்களின் அரசுரிமையை எடுத்துக்கொள்வாய்,

 

133. பேர் உலகத்து மேஎந் தோன்றி = இப்பெரிய உலகத்தில்  பெரியோர்களில் மிகப் பெரியவனாய்த் தோன்றி,

 

134. சீருடைய விழுச் சிறப்பின் = புகழுடைய சிறந்த தலைமையையும்,

 

135. விளைந்து முதிர்ந்த விழுமுத்தின் = கடலில் நன்கு விளைந்து முதிர்ந்த நல் முத்துக்களையும்,

 

136. இலங்கு வளை இருஞ்சேரி = விளங்குகின்ற சங்கு குளிப்போர் குடியிருப்புகளையும்,

 

137. கட் கொண்டிக் குடிப்பாக்கத்து = கள்ளையே உணவாகக்கொண்டு குடிப்பவர்களின் இருப்பிடங்களையும் கொண்ட,

 

138.நற் கொற்கையோர் நசைப் பொருந = நல்ல கொற்கை என்னும் ஊரில் உள்ளவர்கள் விரும்பும் வேந்தே!,

 

139-140. தெவ்வர் கலங்கத் தலைச்சென்று அஞ்சுவரத் தட்கும் அணங்குடைத் துப்பின் =  தன்னுடைய பகைக்கு ஆளான பகைவர்கள் கலங்குமாறு அவரிடம் சென்று, அவர்களுக்கு அச்சம் தோன்றுமாறு அங்கு தங்கி, வருத்தும் வலிமையையும்,

 

141. கோழ் ஊன்குறைக் கொழுவல்சி = கொழுத்த இறைச்சியோடு கூடிய சோற்றையும்,

 

142. புலவு வில் பொலி கூவை = புலால் நாற்றமுடைய வில்லையும் பருத்த கூவைக் கிழங்கையும்,

 

143. ஒன்று மொழி ஒலி இருப்பின் = வஞ்சினம் கூறுதலையும் ஆரவாரத்தையுமுடைய  குடியிருப்பினையும் உடையவராகிய,

 

144. தென் பரதவர் போர் ஏறே = தென்திசையில் வாழும் நெய்தல் நில மக்களைப் போர் செய்து அடக்குதலில் சிங்கம் போன்றவனே!


145. அரிய ல்லாம் எளிதினிற் கொண்டு = பிறர்க்கு கிடைத்தற்கரிய பொருள்களை எல்லாம் எளிதாகத் தன்வசம் கொண்டு,

 

146. உரிய எல்லாம் ஓம்பாது வீசி = தனக்குரிய பொருட்களை தானே வைத்துக்கொள்ளாமல், பிறர்க்கு வரையாது வழங்கி,

 

147. நனி புகன்று உறைதும் என்னாது ஏற்று எழுந்து = மிக விரும்பி, தான் ஊரிலேயே இருந்துவிடலாம் என்று எண்ணாது, மேற்கொண்டு சென்று,

 

148. பனிவார் சிமையக் கானம் போகி = பனி ஒழுகும் சிகரங்களுடைய மலைகள் உள்ள காடுகளைக் கடந்து,

 

149. அகநாடு புக்கவர் அருப்பம் வெளவி = பகைவர்களுடைய நாட்டுக்குள் புகுந்து அவர்களுடைய அரண்களைக் கைப்பற்றி,

 

150. யாண்டு பல கழிய வேண்டுபுலத்து இறுத்து = அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்து,


151. மேம்பட மரீஇய வெல்போர்க் குரிசில் = அந்த நாட்டு மக்களோடு கலந்து, அவர்களின் நாடும் அங்குள்ள மக்களும் மேம்படுமாறு போர் செய்த தலைவனே!

 

கருத்துரை:

உன்னோடு நட்பு கொண்டவர்களை உயர்வடையச் செய்வாய்; உன்னோடு பகைத்துக்கொண்டவர்களின் அரசுரிமையை எடுத்துக்கொள்வாய்; இப்பெரிய உலகத்தில்  பெரியோர்களில் மிகப் பெரியவனாய்த் தோன்றி, புகழுடைய சிறந்த தலைமையையும், கடலில் நன்கு விளைந்து முதிர்ந்த நல்முத்துக்களையும், விளங்குகின்ற சங்கு குளிப்போர் குடியிருப்புகளையும், கள்ளையே உணவாகக்கொண்டு குடிப்பவர்களின் இருப்பிடங்களையும் கொண்ட, நல்ல கொற்கை என்னும் ஊரில் உள்ளவர்கள் விரும்பும் வேந்தே!,

 

தன்னுடைய பகைக்கு ஆளான பகைவர்கள் கலங்குமாறு அவரிடம் சென்று, அவர்களுக்கு அச்சம் தோன்றுமாறு அங்கு தங்கி, அவர்களை வருத்தும் வலிமை உடையவனே! இறைச்சியோடு கூடிய சோற்றையும், புலால் நாற்றமுடைய பருத்த கூவைக் கிழங்கையும், வஞ்சினம் கூறுதலையும் ஆரவாரத்தையுமுடைய  குடியிருப்பினையும் உடையவராகிய, தென்திசையில் வாழும் நெய்தல் நில மக்களைப் போர் செய்து அடக்குதலில் சிங்கம் போன்றவனே!


பிறர்க்கு கிடைத்தற்கரிய பொருள்களை எல்லாம் எளிதாகத் தன்வசம் கொண்டு, தனக்குரிய பொருட்களைத் தானே வைத்துக்கொள்ளாமல், பிறர்க்கு வரையாது வழங்கி, மிக விரும்பி, தான் ஊரிலேயே இருந்துவிடலாம் என்று எண்ணாது, மேற்கொண்டு சென்று, பனி ஒழுகும் சிகரங்களுடைய மலைகள் உள்ள காடுகளைக் கடந்து, பகைவர்களுடைய நாட்டுக்குள் புகுந்து அவர்களுடைய அரண்களைக் கைப்பற்றி, அங்கே பல ஆண்டுகள் தங்கியிருந்து,  அந்த நாட்டு மக்களோடு கலந்து, அவர்களின் நாடும் அங்குள்ள மக்களும் மேம்படுமாறு போர் செய்த தலைவனே!

 

பகைவர் நாடு பாழ்பட்ட நிலை


உறு செறுநர் புலம் புக்கு அவர்
கடி காவின் நிலை தொலைச்சி
இழிபு அறியாப் பெருந்தண் பணை
குரூஉக் கொடிய எரி மேய                155


நாடு எனும் பேர் காடாக
ஆ சேந்த வழி மா சேப்ப
ஊர் இருந்த வழி பாழாக
இலங்கு வளை மட மங்கையர்
துணங்கை அம்சீர்த் தழூஉ மறப்ப          160

அவை இருந்த பெரும் பொதியில்
கவை அடிக் கடு நோக்கத்துப்
பேய் மகளிர் பெயர்பு ஆட
அணங்கு வழங்கும் அகல் ஆங்கண்
நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின்          165


அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவக்
கொழும் பதிய குடி தேம்பச்
செழுங் கேளிர் நிழல் சேர
நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக்
குடுமிக் கூகை குராலொடு முரலக் . . .    170

கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கைக்
களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர
நல் ஏர் நடந்த நசைசால் விளைவயல்
பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள
வாழாமையின் வழிதவக் கெட்டுப்          175

பாழாயின நின் பகைவர் தேஎம்

அருஞ்சொற்பொருள்:

152. உறு = மிக்க; செருநர் = பகைவர்; புலம் = நிலம்

 

153. கடி = கடுமை; கா = பொழில் (சோலை); தொலைச்சி = அழித்து

 

154. இழிபு = தன்னிலையில் இருந்து கீழாதல் (வளம் குன்றுதல்); தண்பணை = மருத நிலம்

 

155. குரூஉ = நிறம்; மேய = உண்ண

 

156. பேர் = பெயர்

 

157. ஆ = பசு; சேப்புதல் = தங்குதல்; மா = விலங்கு

 

159. இலங்குதல் = விளங்குதல்

 

160. துணங்கை = ஒருவகைக் கூத்து; தழூஉ = குரவைக் கூத்து

 

161. பொதி = பொதுமன்றம்

 

162. கவை =பிளப்பு

 

163. பெயர்பு ஆட = உலாவி ஆட

 

164. அணங்கு – இங்கு வீட்டில் வாழும் தெய்வங்களைக் குறிக்கிறது

 

165. குழூஉ = திரள்; புதவு = கதவு

 

166. அரந்தை = வருத்தம்; இனைதல் = வருந்துதல்

 

167. கொழும்பதிய = வளமான ஊரில் உள்ள; தேம்பி = விம்மி அழ

 

169. குதிர் = நெற்கூடு; பள்ளி = இடம்

 

170. கூகை = ஆந்தை; குரால் = கோட்டான்; முரல = கதற

 

171. கழுநீர் = செங்கழுநீர் (செங்குவளை); பொலிந்த = மிக்க; பொய்கை = குளம்

 

172. மாய்தல் = மறைதல்; செருந்தி = கோரைப்புல்; கண்பு = சண்பகக்கோரை; ஊர்தர = வளர

 

173.நசைசால் = விரும்புதல் அமைந்த

 

174. பிணவு = பெண்பன்றி; கேழல் = ஆண்பன்றி; உகள = திரிய

 

175. தவ = மிக

 

176. தேஎம் = நாடு

 

பதவுரை:

152-153. உறு செறுநர் புலம் புக்கு அவர் கடி காவின் நிலை தொலைச்சி = மிகுந்த பகையுடையோர் நிலத்தில் புகுந்து, அவர்களின் காவலையுடைய சோலைகளின் நிலையை அழித்து,

 

154-155. இழிபு அறியாப் பெருந் தண்பணைகுரூஉக் கொடிய எரி மேய = வளங்குன்றாத  பெரிய மருதநிலங்களை (செந்)நிறமான தீயால் எரியவிட்டு,

 

156. நாடு எனும் பேர் காடாக  = ”நாடு” என்ற பெயர் பெற்றிருந்த இடங்கள் காடாக,

 

 157. ஆ சேந்த வழி மா சேப்ப = பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்க,

 

158. ஊர் இருந்த வழி பாழாக = ஊராக இருந்த இடமெல்லாம் பாழாக,

 

159-160. இலங்கு வளை மட மங்கையர் துணங்கை அம்சீர்த் தழூஉ மறப்ப  = விளங்குகின்ற வளையல்களை அணிந்த, மடப்பம் பொருந்திய மகளிர் துணங்கைக் கூத்தாடுவதையும், தாளக் கட்டுடன் கூடிய குரவைக் கூத்தாடுவதையும் மறக்க,

 

161-163. அவை இருந்த பெரும் பொதியில் கவையடிக் கடு நோக்கத்துப் பேய் மகளிர் பெயர்பு ஆட = அவையோர் இருந்த பெரிய பொதுவிடத்தில், பிளவுபட்ட அடிகளையும் கொடிய பார்வையையும் உடைய பேய்மகளிர் உலாவி ஆட,

 

164. அணங்கு வழங்கும் அகல் ஆங்கண் = வீடுகளில் வாழும் தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்,


165. நிலத்து ஆற்றும் குழூஉப் புதவின் = நிலத்தில் நின்று தொழில் செய்கின்ற நிலையோடு கூடிய கதவுகளின் அருகிலிருந்து,

 

 166. அரந்தைப் பெண்டிர் இனைந்தனர் அகவ = வருத்தத்தோடு பெண்கள் கதறி அழ,

 

167-168. கொழும் பதிய குடி தேம்பச் செழுங் கேளிர் நிழல் சேர = வளமையான ஊர்களிலிருந்த குடிமக்கள் பசியால் தேம்பி அழ, செழுமையான உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர

 

169-170. நெடுநகர் வீழ்ந்த கரி குதிர்ப் பள்ளிக் குடுமிக் கூகை குராலொடு முரல = பெரிய மாளிகைகளில் வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும் கொண்டையையுடைய கூகைச்சேவல் கோட்டானாடு கூடி ஒலியெழுப்ப,

 

171. கழுநீர் பொலிந்த கண்அகன் பொய்கை = செங்கழுநீர் பூக்கள் நிறையப் பூத்திருந்த பெரிய குளத்தில்,

 

172. களிறுமாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர = யானை நின்றால் மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகக்கோரையும் தழைத்து வளர்ந்திருக்க,


173-174. நல் ஏர் நடந்த நசைசால் விளைவயல் பல்மயிர்ப் பிணவொடு கேழல் உகள = நல்ல ஏர் உழுத, விரும்பத் தக்க விளைநிலங்களில், அடர்ந்த மயிருடைய பெண்பன்றியோடு ஆண்பன்றி ஓடித்திரிய,

 

175-176. வாழாமையின் வழிதவக் கெட்டுப் பாழாயின நின் பகைவர் தேஎம் = உன் சொல்லைக் கேட்டு அடங்கி வாழாததால், வாழும் வழிகெட்டு உன் பகைவர் நாடுகளெல்லாம் பாழாயின.

 

கருத்துரை: 

மிகுந்த பகையுடையோர் நிலத்தில் புகுந்து, நீ அவர்களின் காவற்காடுகளை அழித்தாய்; வளங்குன்றாத  பெரிய மருதநிலங்களை (செந்)நிறமான தீயால் எரித்தாய். ”நாடு” என்ற பெயர் பெற்றிருந்த இடங்கள் காடாயின.  பசுக்கள் இருந்த இடங்களில் விலங்குகள் தங்கின. ஊராக இருந்த இடமெல்லாம் பாழாயின.  விளங்குகின்ற வளையல்களை அணிந்த, மடப்பம் பொருந்திய மகளிர் துணங்கைக் கூத்தாடுவதையும், தாளக் கட்டுடன் கூடிய குரவைக் கூத்தாடுவதையும் மறந்தார்கள். அவையோர் இருந்த பெரிய பொதுவிடத்தில், பிளவுபட்ட அடிகளையும் கொடிய பார்வையையும் உடைய பேய்மகளிர் உலாவி ஆடினர். வீடுகளில் வாழும் தெய்வங்கள் உலாவும் அகன்ற ஊரில்,  நிலத்தில் நின்று தொழில் செய்கின்ற நிலையோடு கூடிய கதவுகளின் அருகிலிருந்து, வருத்தத்தோடு  பெண்கள் கதறி அழுதனர். வளமான ஊர்களிலிருந்த குடிமக்கள் பசியால் தேம்பி அழுது, செழுமையான உறவினரின் பாதுகாப்பில் சென்றுசேர்ந்தனர். பெரிய மாளிகைகளில், வீழ்ந்துகிடக்கும் கரிந்துபோன குதிர்களில் தங்கியிருக்கும் கொண்டையையுடைய கூகைச்சேவல், கோட்டானோடு கூடி  ஒலியெழுப்பியது. செங்கழுநீர் பூக்கள் நிறையப் பூத்திருந்த பெரிய குளத்தில், யானை நின்றால் மறையுமளவிற்கு வாட்கோரையும் சண்பகக்கோரையும் தழைத்து வளர்ந்தன. நல்ல ஏர் உழுத, விரும்பத் தக்க விளைநிலங்களில், அடர்ந்த மயிருடைய பெண்பன்றிகளோடு ஆண்பன்றிகள் ஓடித்திரிந்தன. உன் சொல்லைக் கேட்டு அடங்கி வாழாததால், வாழ வழியில்லாமல் உன் பகைவர்களின் நாடுகளெல்லாம் பாழாயின.

 

 

 

 

 

பகைவரை வென்று அவர்களை அறவழியில் செலுத்துதல்

 

எழாஅத் தோள் இமிழ் முழக்கின்
மாஅத்தாள் உயர்மருப்பின்
கடுஞ்சினத்த களிறு பரப்பி
விரி கடல் வியன் தானையொடு . . .             180

முருகு உறழப் பகைத்தலைச் சென்று
அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழப்
பெயல் உறழக் கணை சிதறிப்
பல புரவி நீறு உகைப்ப
வளை நரல வயிர் ஆர்ப்பப்                       185


பீடு அழியக் கடந்து அட்டு அவர்
நாடு அழிய எயில் வெளவிச்
சுற்றமொடு தூ அறுத்தலின்
செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப
வியன்கண் முதுபொழில் மண்டில முற்றி . . .     190

அரசியல் பிழையாது அறநெறி காட்டிப்
பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது
குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்
வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம்
குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின்          195


தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம்

அருஞ்சொற்பொருள்:

177. எழாஅத் தோள் = புறமுதுகிட்டுத் தோற்று ஓடும் பகைவர்களைத் துரத்தாத வீரம் பொருந்திய  தோள்கள்; இமிழ்தல் = முழங்கல்; முழக்கு = ஒலி

 

178. மா = பெருமை; தாள் = கால்; மருப்பு = கொம்பு

 

181. முருகு = முருகன்; உறழ = ஒத்த (உவம உருபு), போல

 

182. இமிழ = ஒலிக்க

 

183.பெயல் = மழை; உறழ = போல; கணை = அம்பு

 

184. புரவி = குதிரை; நீறு = புழுதி; உகைப்ப = எழ

 

185. வளை = சங்கு; நரல = ஒலிக்க; வயிர் = ஊதுகொம்பு; ஆர்ப்ப = ஒலிக்க

 

186. பீடு = பெருமை; அட்டு = கொன்று

 

187. எயில் = அரண்; வௌவி = கைப்பற்றி

 

188. தூ = வலிமை;

 

189. செற்ற = வெறுத்த; தெவ்வர் = பகைவர்

 

190. வியன் = அகன்ற; கண் = இடம்; முது = பழைய; பொழில் = பெருமை; மண்டிலம் = நாடு

 

193. குட = மேற்குத் திசை

 

 

194. வலம் = வெற்றி; கொற்றம் = ஆட்சி

 

195. குண = மேற்குத் திசை

 

196. ஆக்கம் = செல்வம், பெருமை

 

பதவுரை:

177. எழாஅத் தோள் இமிழ் முழக்கின் = புறமுதுகிட்டுத் தோற்று ஓடும் பகைவர்களைத் துரத்தாத வீரம் பொருந்திய தோளினையும், முழங்குகின்ற ஓசையையும்,

 

178. மாஅத்தாள் உயர்மருப்பின் = பெருமையையுடைய கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய,

179. கடுஞ்சினத்த களிறு பரப்பி = கடிய சினங்கொண்ட யானைகளை எங்கும் பரப்பி,

180. விரி கடல் வியன் தானையொடு = விரிந்து நிற்கும் கடல்போல் அகன்ற படையோடு,

181. முருகு உறழப் பகைத்தலைச் சென்று = முருகன் பகைவர் மேற் செல்வதைப் போல தடையில்லாமல்  பகைவரிடம் சென்று,

182. அகல் விசும்பின் ஆர்ப்பு இமிழ = விரிந்த வானத்தில் ஆரவாரத்தோடு முழங்க,

183. பெயல் உறழக் கணை சிதறிப் = மழைபோல அம்புகளைத் தூவி,

184. பல புரவி நீறு உகைப்ப = பல குதிரைகள் புழுதியை எழுப்ப,

185. வளை நரல வயிர் ஆர்ப்ப = சங்கு முழங்க, ஊதுகொம்புகள் ஒலிக்க,

186. பீடு அழியக் கடந்து அட்ட = பெருமை அழியும்படி வென்று கொன்று,  

187. அவர் நாடு அழிய எயில் வெளவி = பகைவர்களின் நாடுகள் அழியும்படி அவர்களின் அரண்களைக் கைக்கொண்டு,

188. சுற்றமொடு தூ அறுத்தலின் = பகைவருக்கு உதவும் சுற்றத்தாரின் வலிமையையும் பகைவருடைய வலிமையையும் அழித்து ஒழித்துவிட்டதாலே,

189. செற்ற தெவ்வர் நின்வழி நடப்ப = உன்னை வெறுத்த பகைவர்களும் உன் சொல் கேட்டு உன்வழி நடக்க,

190. வியன்கண் முதுபொழில் மண்டிலம் முற்றி = அகன்ற இடத்தையுடைய பழம்பெரும் நாடுகளை முற்றிலும் உனதாக வளைத்துக்கொண்டு,

191. அரசியல் பிழையாது அறநெறி காட்டிப் = அரசியல் நெறிமுறை பிறழாமல் அறவழியைக் காட்டி,

192. பெரியோர் சென்ற அடிவழிப் பிழையாது = பெரியோர்கள் சொல்லிச் சென்ற வழியிலிருந்து விலகாமல்,

193. குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின் =  மேற்குத் திசையில் காணப்படும், பலரும் தொழுகின்ற பிறையைப் போல,

194. வழிவழிச் சிறக்க நின் வலம்படு கொற்றம் = உன் வெற்றி மிகுந்த ஆட்சி வழிமுறை வழிமுறையாகச் சிறக்க. 

195. குணமுதல் தோன்றிய ஆரிருள் மதியின் = கிழக்குத் திசையில் தோன்றி எழுகின்ற,

196. தேய்வன கெடுக நின் தெவ்வர் ஆக்கம் =  தேய்பிறைக் காலத்து நிலவுபோல உன் பகைவரின் பெருமை கெடுவதாக.


கருத்துரை:

புறமுதுகிட்டுத் தோற்று ஓடும் பகைவர்களைத் துரத்தாத வீரம் பொருந்திய தோள்களையுடைய படைவீரர்களுடன், முழங்குகின்ற ஓசையையும்,  பெரிய கால்களையும், உயர்ந்த கொம்பினையும் உடைய கடிய சினங்கொண்ட யானைகளை எங்கும் பரப்பி, விரிந்து நிற்கும் கடல்போல் அகன்ற படையோடு, முருகனைப் போல் பகைவர்களிடம் சென்று, அகன்ற வானத்தில் ஆரவாரத்தோடு முழங்க, மழைபோல அம்புகளைத் தூவி, பல குதிரைகள் புழுதியை எழுப்ப, சங்கு முழங்க, ஊதுகொம்புகள் ஒலிக்க, பகைவர்களின் பெருமை அழியும்படி போரில் அவர்களைக் வென்று கொன்று,  அப்பகைவர்களின் நாடுகள் அழியும்படி அவர்களின் அரண்களைக் கைப்பற்றி, அந்தப் பகைவர்களுக்கு உதவும் சுற்றதார்களின் வலிமையையும்  பகைவருடைய வலிமையையும் அழித்து ஒழித்துவிட்டதால், உன்னை வெறுத்த பகைவர்களும் உன் சொல் கேட்டு உன்வழி நடக்க, அகன்ற இடத்தையுடைய பழம்பெரும் நாடுகளை முற்றிலும் உனதாக வளைத்துக்கொண்டு, அரசியல் நெறிமுறை பிறழாமல் அறவழியைக் காட்டி, பெரியோர்கள் சொல்லிச் சென்ற வழியிலிருந்து விலகாமல்,  மேற்குத் திசையில் காணப்படும், பலரும் தொழுகின்ற பிறையைப் போல, உன் வெற்றி மிகுந்த ஆட்சி வழிமுறை வழிமுறையாகச் சிறக்கட்டும்!  கிழக்குத் திசையில் தோன்றி எழுகின்ற, தேய்பிறைக் காலத்து நிலவுபோல உன் பகைவரின் பெருமை கெடுவதாக!

 

நெடுஞ்செழியனின் சான்றாண்மை


உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும்

பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே
முழங்கு கடல் ஏணி மலர்தலை உலகமொடு
உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் . . .       200

பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே
தென்புல மருங்கின் விண்டு நிறைய
வாணன் வைத்த விழுநிதி பெறினும்
 
பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி
ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே          205


அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ
கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல்
கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம்
கெடாது நிலைஇயர் நின் சேண்விளங்கு நல் இசை


அருஞ்சொற்பொருள்:

199.ஏணி = எல்லை; மலர்தல் = விரிதல்

 

200. தேஎம் = நாடு; விழுமியோர் = தேவர்

 

202. விண்டு = மலை

 

203. வாணன் = ஒரு அசுரன்; விழு நிதி = மிக உயர்ந்த செல்வம்

 

205. இசை = புகழ்; வேட்குவை = விரும்புவாய்

 

207. கொன் = பெருமை; கிளக்குவல் = கூறுவேன்; அண்ணல் = தலைவன்

 

208. அவலம் = மயக்கம், மனக்கலக்கம்

 

பதவுரை:

197. உயர்நிலை உலகம் அமிழ்தொடு பெறினும் = உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும்,

 

198. பொய் சேண் நீங்கிய வாய் நட்பினையே = பொய்யைத் தூர விலக்கி உண்மையோடு நட்பு கொண்டவன் நீ,

 

199. முழங்கு கடல் ஏணி மலர்தலைய உலகமொடு = முழங்கும் கடலை எல்லையாகக் கொண்ட அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு,

 

200. உயர்ந்த தேஎத்து விழுமியோர் வரினும் = உயர்ந்த வானுலகத்துத் தேவர்கள் பகைவராவந்தாலும்,

 

201. பகைவர்க்கு அஞ்சிப் பணிந்து ஒழுகலையே = ந்தப் பகைவர்களுக்கு  அஞ்சிப் பணிந்து நடக்கமாட்டாய்;

 

202. தென்புல மருங்கின் விண்டு நிறைய =  தெற்கு நாட்டிலுள்ள மலைகள் நிறையுமளவு,

 

203. வாணன் வைத்த விழுநிதி பெறினும் = வாணன் எனும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும்,

 

204-205.  பழிநமக்கு எழுக என்னாய் விழுநிதி ஈதல் உள்ளமொடு இசைவேட் குவையே = பிறர் பழிக்கு நீ ஆளாக மாட்டாய். சிறந்த செல்வத்தை வழங்கும் உள்ளத்தோடு புகழையே நீ        விரும்புவாய்

 

206. அன்னாய் நின்னொடு முன்னிலை எவனோ = அத்தகைய தன்மை உடையவனே! உன்னோடு யாரை ஒப்பிட்டுக் கூறமுடியும்?

 

207-208. கொன் ஒன்று கிளக்குவல் அடுபோர் அண்ணல் கேட்டிசின் வாழி கெடுக நின் அவலம் = இவற்றிற்கெல்லாம் மேலான ஒன்றைக் கூறுவேன். கொல்லும் போர்த்தொழிலில் வல்ல தலைவனே! கேட்பாயாக, நீ நெடிது வாழ்க, உன் மனக்கலக்கம் கெடுக!

 

209. கெடாது நிலைஇயர் நின் சேண்விளங்கு நல் இசை = உன்னுடைய உயர்ந்த சிறந்த நல்ல புகழ் கெடாது நிலைபெற்று விளங்கட்டும்!

 

கருத்துரை:

உயர்ந்த நிலையிலுள்ள தேவருலகத்தை அமிழ்தத்துடன் பெற்றாலும், பொய்யைத் தூர விலக்கி உண்மையோடு நட்பு கொண்டவன் நீ. முழங்கும் கடலை எல்லையாகக் கொண்ட அகன்ற இடத்தையுடைய உலகத்தாரொடு, உயர்ந்த வானுலகத்துத் தேவர்கள் பகைவராவந்தாலும், ந்தப் பகைவர்களுக்கு அஞ்சி நீ பணிந்து நடக்கமாட்டாய்; தெற்குத்திசையில் உள்ள மலைகள் நிறையுமளவு, வாணன் என்னும் சூரன் வைத்த சீரிய பெரும்செல்வத்தைப் பெற்றாலும், பிறர் பழிக்கு நீ ஆளாக மாட்டாய். சிறந்த செல்வத்தைப் பிறர்க்கு வழங்கும் உள்ளத்தோடு புகழையே நீ விரும்புவாய். அத்தகைய தன்மை உடையவனே! உன்னோடு யாரை ஒப்பிட்டுக் கூற முடியும்? மேலான ஒன்றைக் கூறுவேன்; கொல்லும் போர்த்தொழிலில் வல்ல தலைவனே! கேட்பாயாக! நீ நெடிது வாழ்க! உன் மனக்கலக்கம் கெடுக! உன்னுடைய உயர்ந்த, சிறந்த நல்ல புகழ் கெடாது நிலைபெற்று விளங்கட்டும்!

 

உலகில் சிறப்பாக ஆட்சிபுரிந்து மறைந்தவர் பலர்

தவாப் பெருக்கத்து அறா யாணர் . . . .            210

அழித்து ஆனாக் கொழுந்து இற்றி
இழித்து ஆனாப் பல சொன்றி
உண்டு ஆனாக் கூர் நறவின்
தின்று ஆனா இன வைகல்
நிலன் எடுக்கல்லா ஓண்பல் வெறுக்கைப்          215


பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர்
நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி
விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்பப்
பாணர் உவப்ப களிறு பல தரீஇக்
கலந்தோ ருவப்ப எயில் பல கடைஇ . . .         220


மறம் கலங்கத் தலைச் சென்று
வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி
நாள் ஈண்டிய நல் அகவர்க்குத்
தேரோடு மா சிதறிச்
சூடுற்ற சுடர்ப் பூவின்                            225


பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின்
விழுமிய பெரியோர் சுற்றம் ஆகக்
கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு
பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்பப்
பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் . .  230

பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறைப்
படுகண் முரசங் காலை இயம்ப
வெடிபடக் கடந்து வேண்டுபுலத்து இறுத்த
பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர்
கரைபொருது இரங்கும் சுனை இரு முந்நீர்த்       235


திரையிடு மணலினும் பலரே உரைசெல
மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே

 

அருஞ்சொற்பொருள்:

210. தவா = மாறாத (கெடாத); பெருக்கம் = செல்வம்; அறா = நீங்காத; யாணர் = புதுவருவாய்

 

211. ஆனா = குறையாத; கொழுந்து= மென்மை; இற்றி = ஊன் (இறைச்சி)

 

212.  இழித்தல் = இறக்குதல் (தின்னுதல்); ஆனா= குறையாத; சொன்றி = சோறு

 

213. கூர் = மிகுதி; நறவு = கள்

 

214. இனம் = தின்பண்ட வகை; வைகல் = தங்குதல்

 

215.எடுக்கல்லா = சுமக்க முடியாத; ஒண்மை = நன்மை; வெறுக்கை = செல்வம் (வளம்)

 

216. அறவு = தொலைதல்; கெழு = பொருந்திய; திருநகர் = செல்வமுள்ள மாளிகை

 

217. நரம்பு – இங்கு நரம்புடைய யாழ் போன்ற இசைக்கருவிகளைக் குறிக்கிறது; முரல் = ஒலித்தல்; நயம் = இனிமை; முரற்சி = இசைப்பாட்டு

 

218.செறிமை = மிகுதி

 

219. உவப்ப = மகிழ; தரீஇ = கொடுத்து

 

220. கலந்தோர் = நட்புக் கொண்டவர்கள்; எயில் = அரண்; கடைஇ = செலுத்தி (கொடுத்து)

 

221. மறம் =- வீரம்; தலை = இடம்

 

222. உழந்து = வருந்தி; தாள் = முயற்சி

 

223. நாள் = அதிகாலை; ஈண்டிய = வந்து திரண்ட; அகவர் = மங்கலம் பாடி மன்னனைத் ததுயிலெழுப்பும் பாணர்கள்,

 

224. மா = குதிரை; சிதறி = மிகுதியாக வழங்கி,

 

225. சூடுற்ற = சூடுதற்கென்று அமைந்த; சுடர்ப் பூ = வஞ்சிப் பூ

 

226. பாடு = படிந்த; புலர்ந்த = உலர்ந்த

 

227. விழுமிய = சிறந்த

 

228. இரும் = பெரிய; பை = பச்சை நிறம்; கலம் = பாத்திரம்

 

229.தேஎம் = நாடு

 

230. திறை = கப்பம்

 

231. பறக்கல்லா = பறக்க முடியாத; பார்வல் = பார்த்தல் (அரணிலிருந்து பகைவர்களின் வருகையைப் பார்ப்பதைக் குறிக்கிறது. இங்கு, பார்வல் ஆகுபெயராக அரணைக் குறிக்கிறது)

 

232. படுதல் = ஒலித்தல்; கண் = நடுவிடம் (இங்கு முரசின் நடுவித்தைக் குறிக்கிறது); இயம்ப = ஒலிக்க

 

233. வெடிபட = கேடுண்டாக, வேண்டுபுலம் = தாம் விரும்பிய இடம்; இறுத்தல் = தங்குதல்

 

234. பணை = வெற்றி முரசு; திறல் = வலிமை

 

235. கனை = நெருக்கம்; முந்நீர் = கடல்

 

236. உரை = புகழ்; செல = பரவ

 

பதவுரை:

210. தவாப் பெருக்கத்து அறா யாணர் = கெடாத செல்வமும்  நீங்காத புதுவருவாயும்,

 
211. அழித்து ஆனாக் கொழுந்து இற்றி =
 எவ்வளவு தின்றாலும் குறையாத மென்மையான  இறைச்சியும்,

 

212. இழித்து ஆனாப் பல சொன்றி = தின்னத் தின் குறையாத சோறும்,

 

213. உண்டு ஆனாக் கூர் நறவின் = குடிக்கக் குடிக்கக் குறையாத மிகுதியான கள்ளும்,

 

214. தின்று ஆனா இன வைகல் = தின்பதால் எந்நாளும் தீராத பலவகையான உணவு வகைகளும்,


215. நிலன் எடுக்கல்லா ஓண்பல் வெறுக்கை = நிலத்தால் சுமக்க முடியாத அளவில் பெருந்திரளான , நல்ல பொருள்களையும்,

 

216. பயன் அறவு அறியா வளம் கெழு திருநகர் = பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய மாளிகையில்,

 

217. நரம்பின் முரலும் நயம்வரு முரற்சி = யாழிசையைப் போல்  இசைபாடும்,

 

218. விறலியர் வறுங்கைக் குறுந்தொடி செறிப்ப = ஆடல் மகளிர் தம் வெறுங்கைகளில் சிறிய வளையல்களை நிறைய அணிவித்து,

 

210. பாணர் உவப்ப களிறு பல தரீஇ = பாணார்கள் மகிழத் தினந்தோறும் யானைகள் பலவற்றையும் கொடுத்து,

 

220. கலந்தோ ருவப்ப எயில் பல கடைஇ = தம்மோடு சேர்ந்தவர்கள் மகிழ பல அரண்களைக் கடந்து பகைவர்களிடனிருந்து பெற்ற பல பொருள்களையும் கொடுத்து,

      

221. மறம் கலங்கத் தலைச் சென்று = பகைவரிடம் சென்று, அவர்களின் வீரமும் திறமையும் நிலைகுலையச் செய்து,

 

222. வாள் உழந்து அதன் தாள் வாழ்த்தி = அவர்களுடன் வாளால் போரிட்டு, அவர்கள் வருந்துமாறு, வாளால் வெற்றிபெற்றதற்கான முயற்சியைப் பாராட்டி,


223. நாள் ஈண்டிய நல் அகவர்க்கு = விடியற்காலையில் திரண்டு வந்து மங்கலம் பாடி மன்னனை வாழ்த்திப்  பாடும் பாணர்களுக்கு,

 

224. தேரோடு மா சிதறிச் = தேரும் குதிரைகளயும் மிகுதியாக வழங்கி,

 

225-227. சூடுற்ற சுடர்ப் பூவின் பாடு புலர்ந்த நறுஞ் சாந்தின் விழுமிய பெரியோர் சுற்றம் ஆக = சூடுதலுக்கேற்ற வஞ்சிப் பூவைச் சூடி, பூசிய மணமுள்ள சந்தனம் உலர்ந்த மேனியோடு, சிறந்த பெரியோரைச் சுற்றமாகக்கொண்டு

 

228. கள்ளின் இரும் பைக்கலம் செல உண்டு = கள் நிறந்த பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக நிறையக் கள்ளைக் குடித்து,

 

229. பணிந்தோர் தேஎம் தம்வழி நடப்ப = தமக்குப் பணிந்தவர்களின் நாடுகள் தம் சொற்படி நடப்ப,

 

230. பணியார் தேஎம் பணித்துத் திறை கொண்மார் = தமக்குப் பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து, அவரிடமிருந்து கப்பம் கொள்வதற்காக,

 

 231. பருந்து பறக்கல்லாப் பார்வல் பாசறை = உயரப் பறக்கும் பருந்துகள் எட்ட முடியாத உயரத்தையுடைய காவலரண்களைக் கொண்ட பாசறையில்,

 

232. படுகண் முரசங் காலை இயம்ப = ஒலிக்கின்ற நடுவிடத்தைக் கொண்ட முரசுகள் காலையில் ஒலிக்க,

 

233. வெடிபடக் கடந்து வேண்டுபுலத்து இறுத்த = கேடு உண்டாகுமாறு கடந்துசென்று, அவர்கள் நாட்டில், தான் விரும்பிய  இடத்தில் தங்கி,

 

234. பணைகெழு பெருந்திறல் பல்வேல் மன்னர் = பெருமையும் வலிமையும் மிக்க, வேற்படையைக்  கொண்ட மன்னர்கள்,

 

235-237. கரைபொருது இரங்கும் சுனை இரு முந்நீர்த் திரையிடு மணலினும் பலரே  உரைசெல மலர்தலை உலகம் ஆண்டு கழிந்தோரே = அலைகள் கரையை மோதி ஒலித்து, கொண்டுவந்து கொட்டும் கடல் மணலிலும் பலர், தங்கள் புகழ் பரவ இந்தப் பெரிய உலகத்தை ஆண்டு பின்னர் இறந்துபோயுள்ளனர்.

 


கருத்துரை:

கெடாத செல்வமும்,  நீங்காத புதுவருவாயும், எவ்வளவு தின்றாலும் குறையாத மென்மையான  இறைச்சியும், தின்னத் தின் குறையாத சோறும், குடிக்கக் குடிக்கக் குறையாத மிகுதியான கள்ளும், தின்பதால் எந்நாளும் தீராத பலவகையான உணவு வகைகளும், நிலத்தால் சுமக்க முடியாத அளவில் பெருந்திரளான பொருள்களையும், பயன் அற்றுப்போதலை அறியாத வளம் நிரம்பிய மாளிகையில் வாழும் மன்னர்கள் பலர் உள்ளனர். அவர்கள் யாழிசையைப் போல் இசைபாடும் ஆடல் மகளிரின் வெறுங்கைகளில் சிறிய வளையல்களை நிறைய அணிவித்து, பாணர்கள் மகிழத் தினந்தோறும் யானைகள் பலவற்றையும் கொடுத்து, தம்மோடு சேர்ந்தவர்கள் மகிழ பல அரண்களைக் கடந்து பகைவர்களிடமிருந்து பெற்ற பல பொருள்களையும் வழங்குவர். அவர்கள் பகைவர்களின் வீரமும் திறமையும் நிலைகுலையச் செய்து,  அவர்கள் வருந்துமாறு வெற்றி பெறுவர். அவர்கள் வாளால் வெற்றிபெற்றதற்கான முயற்சியைப் பாராட்டி, பாணர்கள் விடியற்காலையில் திரண்டுவந்து கூடி மங்கலம் பாடித் துயிலெழுப்புவர். அவர்கள் அந்தப் பாணர்களுக்குத் தேர்களையும் குதிரைகளயும் வழங்கி,  வஞ்சிப் பூவைச் சூட்டி மகிழ்விப்பர்.  அந்த மன்னர்கள் தாம் பூசிய மணமுள்ள சந்தனம் உலர்ந்த உடலோடு, சிறந்த  பெரியோரைச் சுற்றமாகக்கொண்டு, கள் நிறைந்த பெரிய பச்சைக் குப்பிகள் வற்றும்படியாக நிறையக் கள்ளைக் குடித்து, தமக்குப் பணிந்தவர்களின் நாடுகள் தம் சொற்படி நடக்கதமக்குப் பணியாதோர் நாடுகளைப் பணியச்செய்து, அவரிடமிருந்து கப்பம் கொள்வதற்காக, உயரப் பறக்கும் பருந்துகள் எட்ட முடியாத உயரத்தையுடைய காவலரண்களைக் கொண்ட பாசறையில்,  ஒலிக்கின்ற நடுவிடத்தைக் கொண்ட முரசுகள் காலையில் ஒலிக்க, பகைவர்களுக்குக் கேடு உண்டாகுமாறு கடந்துசென்று வெற்றி பெறுவர். அவர்கள் பகைவர்களின்  நாட்டில், தான் விரும்பிய  இடத்தில் தங்கி, பெருமையும் வலிமையும் மிக்க, வேற்படையைக்  கொண்டவர்களாக இருப்பர். அத்தகைய மன்னர்கள் அலைகள் கரையை மோதி ஒலித்து, கொண்டுவந்து கொட்டும் கடல் மணலிலும் பலர். அந்த மன்னர்கள் அனைவரும் வீர்மும் வெற்றியும் பெற்றவர்களாக விளங்கி,  பாணருக்கும், விறலியருக்கும் பெருமளவில் கொடை அளித்து சிறப்பான வாழ்க்கை வாழ்ந்து இந்தப் பெரிய உலகத்தை ஆண்டு பின்னர் இறந்துபோயுள்ளனர்.

 

 

மருத நிலச் சிறப்பு - மருத நிலத்தின்

மழைவளமும், நீர்வளமும், நிலவளமும்

      

அதனால், குணகடல் கொண்டு குடகடல் முற்றி
இரவும் எல்லையும் விளிவு இட ன் அறியாது
அவலும்  மிசையும் நீர்த் திரள்பு ஈண்டிக் . . .            240

கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்பக்
கழைவளர் சாரல் களிற்றின நடுங்க
வரைமுதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து
சிதரற் பெரும்பெயல் சிறத்தலின் தாங்காது
குணகடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி             245


நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றிக்
களிறு மாய்க்கும் கதிர்க் கழனி
ஒளிறு இலஞ்சி அடை நிவந்த
முட் தாள் சுடர்த் தாமரை
கள்  கமழும்  நறு நெய்தல் . . . .                       250

வள் இதழ் அவிழ் நீலம்
மெல் இலை அரி ஆம்பலொடு
வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கைக்

அருஞ்சொற்பொருள்:

238. குணகடல் = கிழக்குக் கடல்; குடகடல் = மேற்குக் கடல்; முற்றி = வளைத்துக்கொண்டு

239.எல்லை = பகல்; விளிவு = முடியும் இடம்

240. அவல் = பள்ளம்; மிசை = மேடு; திரள்பு = திரண்டு; ஈண்டி = வந்து (குவிந்து); திரள்பு ஈண்டி = திரண்டு குவிந்து

241. கவலை = கவலைக்கிழங்கு; குழும்பு = குழி

242. கழை = மூங்கில்

243. வரை = மலை; ஏறு = இடி; வான் = மேகம்; ஞெமிர்ந்து = பரந்து

244. சிதரல் = சிதறுகிற; பெயல் = மழை; சிறத்தல் = மிகுதல்

245. குரூஉ = நிறம்; புனல் = நீர்; இவர்தரும் = செல்லும்; உந்தி= தள்ளி

246. நிவந்து = உயர்ந்து; நீத்தம் = வெள்ளம்; சாற்றி = நிறைத்து

247. மாய்க்கும் = மறைக்கும்; கழனி = வயல்

248. ஒளிறு = ஒளி; இலஞ்சி = மடு, குளம், பள்ளம்; அடை = இலை; நிவந்த = உயர்ந்த

249. தாள் = அடித்தண்டு; சுடர் = ஒளியுடைய

250. கள் = தேன்டு

251. அவிழ்தல் = விரிதல், மலர்தல்

252. அரி = வண்டு

253. இறைகொண்ட = தங்குகின்ற

பதவுரை:

238. அதனால், குணகடல் கொண்டு குடகடல் முற்றி = எனவே, கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து,

239. இரவும் எல்லையும் விளிவு இட ன் அறியாது = இரவும் பகலும் முடிவெய்தும்  காலத்தை அறிந்துகொள்ள இயலாதவாறு,

240. அவலும் மிசையும் நீர்த் திரள்பு ஈண்டி = பள்ளத்திலும் மேட்டிலும் பாய்ந்து பெருக்கெடுத்து வந்து,

241. கவலை அம் குழும்பின் அருவி ஒலிப்ப = கவலைக் கிழங்கு தோண்டி எடுத்த அழகிய குழிகளிலே விழுந்து அருவிபோல் முழங்குவதைக் கேட்டு,

242. கழைவளர் சாரல் களிற்றின நடுங்க = மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கி நிற்க,

243. வரைமுதல் இரங்கும் ஏறொடு வான் ஞெமிர்ந்து = மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடு மேகங்கள் பரவி,

244- 246. சிதரற் பெரும்பெயல் சிறத்தலின் தாங்காது குணகடற்கு இவர்தரும் குரூஉப் புனல் உந்தி நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றி = நீர் சிதறிப் பெய்யும் பெருமழை மிகுதியாகப் பெய்வதால், தாங்காமல், கிழக்குக் கடலை நோக்கிப் பாயும் (கலங்கிய) நிறத்தையுடைய மழைநீர் ஓங்கி உயர்ந்து பெருகி வருவதால் குளங்கள் கொள்ளும்படி நிறைப்ப,

247. களிறு மாய்க்கும் கதிர்க் கழனி = யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிர்களையுடைய வயல்களிலும்,

248-249. ஒளிறு இலஞ்சி அடை நிவந்த முட் தாள் சுடர்த் தாமரை = விளங்குகின்ற மடுக்களில் முட்கள் உள்ள தண்டுகளில்,  இலைகளுக்கு மேலே பூக்கின்ற ஒளி பொருந்திய தாமரை மலர்களையும்,

250. கள் கமழும் நறு நெய்தல் = தேன் மணமுள்ள நெய்தற் பூவையும்,

251. வள் இதழ் அவிழ் நீலம் = வளமான இதழ்களோடு மலர்ந்த நீலப் பூவையும்,

252. மெல் இலை அரி ஆம்பலொடு = மெல்லிய இலைகளையும் வண்டுகளையும் உடைய,

253. வண்டு இறை கொண்ட கமழ்பூம் பொய்கை = வண்டுகள் தங்கும் மணமுள்ள பிற பூக்களையும் உடைய பொய்கைகளிலும்

கருத்துரை:

கீழ்க்கடலில் நீரை முகந்து மேலைக்கடலை வளைத்து, இரவும் பகலும் முடியும்  காலத்தை அறிந்துகொள்ள இயலாதவாறு, பள்ளத்திலும் மேட்டிலும் பாய்ந்து பெருக்கெடுத்து வந்து, கவலைக் கிழங்கு தோண்டி எடுத்த அழகிய குழிகளிலே விழுந்து அருவிபோல் முழங்கும். அந்த ஓசையைக் கேட்டு, மூங்கில் வளர்ந்த மலைச்சரிவுகளில் யானைகள் நடுங்கிநிற்கும்.  மலை அடிவாரத்தில் முழங்கும் இடிகளோடே மேகங்கள் பரவும். நீர் சிதறிப் பெய்யும் பெருமழை மிகுதியாகப் பெய்வதால், ஆறுகள் தாங்காமல், கிழக்குக் கடலை நோக்கிப் பாயும் கலங்கிய நிறத்தையுடைய மழைநீர் ஓங்கி உயர்ந்து பெருகி வருவதால் குளங்கள் கொள்ளும்படி நிறையும். யானைகள் நின்றால் அவற்றை மறைக்கும்படி விளைந்த கதிர்களையுடைய வயல்களிலும், விளங்குகின்ற மடுக்களிலும், முட்கள் உள்ள தண்டுகளில்,  இலைகளுக்கு மேலே பூக்கின்ற ஒளி பொருந்திய தாமரை மலர்களையும், வளமான இதழ்களோடு மலர்ந்த நீலப் பூவையும், மெல்லிய இலைகளையும் வண்டுகளையும் உடைய, வண்டுகள் தங்கும் மணமுள்ள பிற பூக்களும் அங்குள்ள பொய்கைகளில் பூக்கும்.

 

மருத நிலத்தில் உண்டாகும் ஓசைகளும், திருப்பரங்குன்றமும்

கம்புள் சேவல் இன்துயில் இரிய
வள்ளை நீக்கி வயமீன் முகந்து                   255


கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர்
வேழப் பழனத்து நூழி லாட்டுக்
கரும்பின் எந்திரங் கட்பின் ஓதை
அள்ளல் தங்கிய பகடுஉறு விழும்
கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே . . .          260

ஒலிந்த பகன்றை விளைந்த கழனி
வன்கை வினைஞர் அரிபறை இன்குரல்
தளி மழை பொழியும் தண் பரங்குன்றில்
கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம்
தைந்த கோதை தாரொடு பொலியப்              265


புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும்
அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்பக்
குருகு நரல மனை மரத்தான்
மீன் சீவும் பாண் சேரியொடு
மருதஞ் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார்ச் . .    270

அருஞ்சொற்பொருள்:

254. கம்புள் = கம்புள் கோழி (சம்பங்கோழி); இரிதல்= கெடுதல்

 

255. வள்ளை = ஒருவகைக் கொடி; வயம் = வலிமை

 

256. கொள்ளை = விலை; சாற்றுதல் = விற்றல்; முடி = முடிச்சு

 

257. வேழம் = கொறுக்காந்தட்டை, நாணல்; பழனம் = மருதநிலம்; நூழிலாட்டு = கொன்று குவித்து

 

258. எந்திறம் = ஆலை; கட்பு = களைபறித்தல்; ஓதை = பேரொலி

 

259. அள்ளல் = சேறு; பகடு = எருது; விழுமம் = வருத்தம்

 

260. களமர் = உழவர்; ஆர்ப்பு = பேரொலி

 

261. ஒலிந்த = தழைத்த; பகன்றை = ஒருவகைக் கொடி

 

262. வன்கை = வலிய கை; வினைஞர் = தொழில் செய்பவர்கள் (இங்கு, கதிர் அறுக்கும்  வேலையைச் செய்பவர்களைக் குறிக்கிறது); அரிபறை = நெல் அறுக்கும்பொழுது முழங்கப்படும் பறை

 

263. தளி = துளி; தண்பரங்குன்று = குளிர்ந்து திருப்பரங்குன்று

 

264. கலி = மன வெழுச்சி; சும்மை = ஆரவாரம்; கலிகொள் சும்மை = விழா கொண்டாடும் ஆரவாரம்; ஆயம் =மகளிர் கூட்டம்.

 

265. ததைந்த = நெருங்கிய; கோதை = மாலை; தார் = மார்பில் அணியும் மாலை

 

266. இசைத்தல் = ஒலித்தல்

 

267. இமிழ்தல் = முழங்குதல்

 

268. குருகு = ஒருபறவை; நரல = கூப்பிடும்படி (கூவ); மரத்தான் = மரத்தில் வைத்து

 

269. பாண் = பாணர்; சேரி = குடியிருப்பு

 

270. தண்பனை = மருத நிலம்

 

பதவுரை:

254. கம்புள் சேவல் இன்துயில் இரிய = சம்பங்கோழியின் இனிய உறக்கம் கெட,

 

255. வள்ளை நீக்கி வயமீன் முகந்து = வள்ளைக் கொடிகளை நீக்கிவிட்டு, வலிமையான மீன்களை முகந்துகொண்டு;

 

256. கொள்ளை சாற்றிய கொடுமுடி வலைஞர் = தாம் பிடித்த மீன்களை விலை கூறி விற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்,

257. வேழப் பழனத்து நூழிலாட்டுக் = நாணலையுடைய மருத நிலத்தில் மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும்,

258. கரும்பின் எந்திரங் கட்பின் ஓதை = கரும்பைச் சாறு பிழியும் கரும்பாலைகளும், களை பறிக்கும் ஓசையும்,

259-260. அள்ளல் தங்கிய பகடுஉறு விழும் கள் ஆர் களமர் பெயர்க்கும் ஆர்ப்பே = சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகளை வெளியே இழுக்கும் கள்ளை உண்டு களித்திருக்கும் உழவர்களின் ஓசையும்,

261. ஒலிந்த பகன்றை விளைந்த கழனி = பகன்றைக் கொடிகள் தழைத்த நெல் விளைந்த  வயல்களில்,

262. வன்கை வினைஞர் அரிபறை இன்குரல் = வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிய பறையின் இனிய  ஓசையும்,

263. தளி மழை பொழியும் தண் பரங்குன்றில் = துளித்துளியாக மழை பொழியும் மேகங்கள் தவழும்  குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில்,

264. கலி கொள் சும்மை ஒலி கொள் ஆயம் = விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தை உடைய மகளிர்  கூட்டம்,

265. ததைந்த கோதை தாரொடு பொலிய =  தாம் அணிந்திருக்கும் நெருக்கமாக் கட்டிய மாலை தம் கணவர் மார்பின் மாலையொடு அழகுபெறக் கூட,

266. புணர்ந்து உடன் ஆடும் இசையே அனைத்தும் = அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும் ஆகிய அனைத்தும்,

267. அகல் இரு வானத்து இமிழ்ந்து இனிது இசைப்ப = அகன்ற பெரிய வானத்தில் முழங்கி, இனிதாக இசைக்க,

268. குருகு நரல மனை மரத்தான் = வீடுகளில் உள்ள மரங்களிலிருந்து குருகுப்பறவைகள் கூவி ஒலியெழுப்ப,  

269. மீன் சீவும் பாண் சேரியொடு = மீனைச் செதுக்கி(வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன்,

270. மருதஞ் சான்ற தண்பணை சுற்றி ஒரு சார் = ஊடலை உரிப்பொருளாகக்கொண்ட மருத நிலத்தால் சூழப்பட்ட ஒரு பகுதியும்,

கருத்துரை:

அந்தப் பொய்கையில், சம்பங்கோழியின் இனிய உறக்கம் கெடும்படி, வள்ளைக் கொடிகளை நீக்கிவிட்டு, வலிமையான மீன்களை முகந்துகொண்டு, தாம் பிடித்த மீன்களை விலை கூறி விற்கும் கொடிய முடிச்சுக்களையுடைய வலைகளையுடையோர்களின் ஆரவாரம் ஒரு பக்கம் எழும்.  நாணலையுடைய மருத நிலத்தில் மீன்களைக் கொன்றுகுவிக்கும் ஓசையும், கரும்பைச் சாறு பிழியும் கரும்பாலைகளும், களை பறிக்கும் ஓசையும், சேற்றில் மாட்டிக்கொண்ட எருதுகளை வெளியே இழுக்கும் கள்ளை உண்டு களித்திருக்கும் உழவர்களின் ஓசையும் ஒரு பக்கம் எழும். பகன்றைக் கொடிகள் தழைத்த நெல் விளைந்த வயல்களில், வலிய கைகளைக் கொண்ட நெல்லறுப்போரின் அரிய பறையின் இனிய ஓசை ஒரு பக்கம் ஒலிக்கும். துளித்துளியாக மழை பொழியும் மேகங்கள் தவழும்  குளிர்ந்த திருப்பரங்குன்றத்தில் விழாக்கொண்டாடும் ஆரவாரமும், ஆரவாரத்தையுடைய மகளிர் கூட்டம் அணிந்திருக்கும் நெருக்கமாகக் கட்டிய மாலை தம் கணவர் மார்பின் மாலையொடு அழகுபெறக் கூட, அவர்களுடன் சேர்ந்து நீராடும் ஆரவாரமும்  ஒரு பக்கம் ஒலிக்கும்.  இந்த ஓசைகள் அனைத்தும், அகன்ற பெரிய வானத்தில் இனிதாக ஒலிக்கும். இவற்றோடு,  வீடுகளில் உள்ள மரங்களிலிருந்து குருகுப்பறவைகள் கூவும் ஒலியும்,  மீனைச் செதுக்கி (வேண்டாதவற்றை)க் கழிக்கும் பாணர் குடியிருப்புடன், ஊடலை உரிப்பொருளாகக்கொண்ட மருத நிலத்தால் சூழப்பட்ட பகுதி ஒரு பக்கம் இருக்கும்.

 

முல்லைநில வளம்


சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்பக்
கருங்கால் வரகின் இருங்குரல் புலர
ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர
எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்பப்
பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி           275


மடக்கண் பிணையொடு மறுகுவன உகளச்
சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழல்

பாஅ யன்ன பாறை அணிந்து
நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும்
வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து . . .             280

சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய்
மணிமருள் நெய்தல் உறழக் காமர்
துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர
வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப
முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார்          285

 

அருஞ்சொற்பொருள்:

271. கவ்வை = எள்இளங்காய்; கறுப்ப = முற்ற

 

272. இரு = பெரிய; குரல் = கதிர்; புலர = முற்ற

 

273. குழும்பு = குழி; கிளர = விளங்க

 

274. கடறு = காடு; கொழித்தல் = மேலே எழுதல்

 

275. கவின் = அழகு; நௌவி = மான்

 

276. மடம் = அழகு; உகளுதல் = ஓடித் திரிதல்

 

277. தாஅய = பரந்த; நீழல் = நிழல்

 

278. பாஅய் = பரப்பி; அணிந்து = அழகு பெற்று

 

279. மிசை = மேடு, மேலிடம்

 

280. வீ = மலர்

 

281. சுரி = சுருண்ட (முறுக்கிய); முகிழ் = அரும்பு; முசுண்டை = ஒருவகைக் கொடி

 

282. மணி = நீலமணி; மருள் = மயக்கம் (உவமையுருபு); நெய்தல் – நெய்தல் மலர்; உறழ = ஒத்த; காமர் = விருப்பம்

 

283. துணி = தெளிவு; அவல் = பள்ளம்; தொய்யில் = ஒருவகைக் கொடி

 

284. வல்லோன் = வல்லவன் (சாமி ஆடுபவன், பூசாரி); தைஇய = இழைத்த

 

285. சான்ற = அமைந்த; அணிந்து = சூழ்ந்து; புறவு = காடு (நிலம்)

 

பதவுரை:

271. சிறுதினை கொய்யக் கவ்வை கறுப்ப = சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட, எள்ளின் இளங்காய்கள் முற்றிக்கறுக்க,

 

272. கருங்கால் வரகின் இருங்குரல் புலர =ருமையான நிறமுடைய வரகுப் பயிர்களின் கரிய கதிர் முற்ற,

 

273. ஆழ்ந்த குழும்பில் திருமணி கிளர = ஆழமான குழிகளில் அழகிய மணிக்கற்கள் கிடந்து ஒளிவீச,

 

274. எழுந்த கடற்றில் நன்பொன் கொழிப்ப = வளர்ந்த காட்டில் நல்ல பொன்னின் தூள்கள் மேலே எழுந்து பரவுவதுபோல,

 

275. பெருங்கவின் பெற்ற சிறுதலை நெளவி = மிகுந்த அழகும் சிறிய தலையையுமுடைய இளமான்கள்,

 

276. மடக்கண் பிணையொடு மறுகுவன உகள =  தங்கள் துணையாகிய பெண்மான்களுடன் ஓடித் திரிய,

 

277. சுடர்ப்பூங் கொன்றை தாஅய நீழல் = ஒளிவிடும் கொன்றை பூக்கள் பரந்த மரநிழலில்,

 

278. பாஅ யன்ன பாறை அணிந்து = பாய் விரித்துப் பரப்பினதுபோல் பாறைகளில் சூழ்ந்திருக்க,

 

279. நீலத்து அன்ன பைம்பயிர் மிசைதொறும் = நீலமணியைப் போன்ற கரும்பச்சைப் பயிர்கள் விளையும் இடங்களில் எல்லாம்,

 

280. வெள்ளி அன்ன ஒள் வீ உதிர்ந்து = வெள்ளியைப் போன்ற நிறமுடைய, ஒளிபொருந்திய மலர்கள் உதிர்ந்து,

 

281. சுரிமுகிழ் முசுண்டையொடு முல்லை தாஅய் = சுருண்ட அரும்புகளையுடைய முசுண்டைப் பூக்களும், முல்லைப் பூக்களும்பரவிக் கிடக்க,

 

282-283. மணிமருள் நெய்தல் உறழக் காமர்  துணி நீர் மெல் அவல் தொய்யிலொடு மலர =நீலமணி என்று மயங்கச் செய்யும் நெய்தல் பூக்களும், விருப்பத்தையுடைய, தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் பரந்திருக்கும் தொய்யில் கொடியோடு மலர,

 

284. வல்லோன் தைஇய வெறிக்களம் கடுப்ப = பூசாரி நடத்தும் வெறியாட்டக் களத்தைப் போன்று,

 

285. முல்லை சான்ற புறவு அணிந்து ஒருசார் = முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த ஒரு பகுதியும்,

      

கருத்துரை:

பாண்டிய நாட்டில் உள்ள முல்லை நிலத்தில் சிறிய தினைக்கதிர்கள் கொய்யப்பட், எள்ளின் இளங்காய்களும்  கருமையான நிறமுடைய வரகுப் பயிர்களின் கரிய கதிர்களும் முற்றி இருக்கும். ஆழமான குழிகளில் அழகிய மணிக்கற்கள் கிடந்து ஒளிவீசும். தழைத்து வளர்ந்த காட்டில், நல்ல பொன்னின் தூள்கள் மேலே எழுந்து பரவுவதுபோல, மிகுந்த அழகும் சிறிய தலையையுமுடைய இளமான்கள், தங்கள் துணையாகிய பெண்மான்களுடன் ஓடித் திரியும். ஒளிவிடும் கொன்றைப் பூக்கள், பரந்த மரநிழலில் பாய் விரித்துப் பரப்பினதுபோல் பாறைகளில் சூழ்ந்திருக்கும். நீலமணியைப் போன்ற கரும்பச்சைப் பயிர்கள் விளையும் இடங்களில் எல்லாம், வெள்ளியைப் போன்ற நிறமுடைய ஒளிபொருந்திய மலர்கள் உதிர்ந்து, சுருண்ட அரும்புகளையுடைய முசுண்டைப் பூக்களும், முல்லைப் பூக்களும் பரவிக் கிடக்கும். நீலமணி என்று மயங்கச் செய்யும் நெய்தல் பூக்கள், தெளிந்த நீரையுடைய நெகிழ்ந்த பள்ளத்தில் பரந்திருக்க, தொய்யில் கொடியோடு மலர, பூசாரி வெறியாட்டம் நடத்தும் களத்தைப் போல், முல்லை ஒழுக்கம் அமைந்த முல்லைக்காடு சூழ்ந்த பகுதி ஒரு பக்கம் இருக்கும்.

 

 

குறிஞ்சிநிலத்தின் விளைபொருள்களும், அங்கு எழும் ஓசைகளும்

 

நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய
குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி
ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி
இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும்
பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டித் . . .             290

தினைவிளை சாரல் கிளிகடி பூசல்
மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும்
ஆமா கடியும் கானவர் பூசல்
சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின்
வீழ்முகக் கேழல் அட்ட பூசல்                           295


கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர்
நறும் பூக் கொய்யும் பூசல் இருங் கேழ்
ஏறு அடு  வயப்புலிப் பூசலொடு அனைத்தும்
இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்டக்
கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து . . .          300

அருங்கடி மாமலை தழீஇ ஒருசார்


அருஞ்சொற்பொருள்:

286. காழ் = விறகு; நறுங்காழ் = அகில், சந்தன முதலியவை; கோடு = மேட்டுநிலம்

 

287. தோரை = மலையில் விளையும் ஒருவகை நெல்; ஐயவி = வெண்சிறுகடுகு

 

288. ஐவனம் = வெண்மையான நெல்; அரில் = நெருங்கி (பின்னிக்கொண்டு);கொள்பு = கொண்டு;  நீடி = வளர்ந்து

 

289. பை = பசுமை; கறி = மிளகு

 

290. தாரம் = பண்டம்; கல் = கற்றரை (கல்+தரை), ஈண்டி = குவிந்து

 

291. கிளிகடி = கிளிகளை விரட்டும்

 

292.மணிப்பூ = மணி போன்ற பூ; குரூஉ = நிறம், மேயும் = தின்னும்

 

293. ஆமா = காட்டுப் பசு; கடியும் = விரட்டும்

 

294. சேணோன் = மலையில் வாழும் குறவன்; அகழ்ந்த = தோண்டிய; மடிவாய் = மூடிய வாய்; பயம்பு = குழி

 

295. வீழ் முகம் = கீழ் நோக்கிய பார்வை; கேழல் = ஆண்பன்றி; அட்ட = கொன்ற

 

296. இரு = பெரிய; சினை = கிளை; பொங்கர் = மரக்கொம்பு

 

297. கேழ் = நிறம்

 

298. ஏறு = பன்றி; அடுதல் = கொல்லுதல்

 

299. இலங்குதல் = விளங்குதல்; சிலம்பு = மலைச்சாரல்; இரட்ட = ஒலிக்க

 

300. குறிஞ்சி = குறிஞ்சி மலர்; சான்ற = அமைந்த; வெற்பு = மலை; அணிந்து = சூழ்ந்து

 

301. கடி = சிறப்பு; தழீஇ = தழுவிய; ஒருசார் = ஒருபக்கம்

 

பதவுரை:

286-287. நறுங்காழ் கொன்று கோட்டின் வித்திய குறுங்கதிர்த் தோரை நெடுங்கால் ஐயவி = நறுமணமுள்ள அகில் மற்றும் சந்தன மரங்களை வெட்டி மேட்டு நிலத்தில் விதைத்த குறுகிய கதிர்களைக் கொண்ட தோரை நெல்லும், நீண்ட தண்டுகளையுடைய  வெண்சிறுகடுகுச் செடியும்,

 

 288. ஐவன வெண்ணெலொடு அரில் கொள்பு நீடி = ஐவனம் என்னும் வெண்மையான நெல்லோடு பின்னிப் பிணைந்து வளர்ந்து, 

289. இஞ்சி மஞ்சள் பைங்கறி பிறவும் = இஞ்சியும் மஞ்சளும் பச்சை  மிளகும் பிறவும்,

290. பல்வேறு தாரமொடு கல்லகத்து ஈண்டி = பலவகையான வேறுபட்ட பண்டங்களும் கற்றரைகளில் குவிக்கப்பட்டு,

291. தினைவிளை சாரல் கிளிகடி பூசல் = தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும்,

292. மணிப்பூ அவரைக் குரூஉத் தளிர் மேயும் = மணி போன்ற  பூக்களையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும்,

293. ஆமா கடியும் கானவர் பூசல் = காட்டுபசுக்களை விரட்டும் காட்டில் உள்ளவர்களின் ஆரவாரமும்,

 294. சேணோன் அகழ்ந்த மடிவாய்ப் பயம்பின் = மலையில் வாழும் குறவன் தோண்டிய, (பன்றிகளைப் பிடிப்பதற்காக தோண்டப்பட்டு இலைகளால் மூடப்பட்ட) பொய்க்குழிகளில்,

295. வீழ்முகக் கேழல் அட்ட பூசல் = வீழ்ந்த, நன்றாக வளர்ந்த ஆண்பன்றியைக் கொன்ற ஆரவாரமும்,

296. கருங்கால் வேங்கை இருஞ்சினைப் பொங்கர் = கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரிய கிளைகளில் கிளைத்த கொம்புகளில்(பூத்த),

297. நறும் பூக் கொய்யும் பூசல் இருங் கேழ் = மணமுள்ள பூக்களைப் பறிக்கும் பெண்களின் ஆரவாரமும், கரிய நிறத்தையுடைய,

298. ஏறு அடு  வயப்புலிப் பூசலொடு அனைத்தும் = பன்றிகளைக் கொல்லும் வலிமையுடைய புலியின் ஆரவாரத்தோடு கூடிய எல்லா ஆரவாரமும், 

299. இலங்குவெள் அருவியொடு சிலம்பகத்து இரட்ட  = விளங்குகின்ற வெண்மையான அருவி முழக்கத்தோடு மலைகளில் எதிரொலிக்க,

300. கருங்கால் குறிஞ்சி சான்ற வெற்பு அணிந்து = கரிய தண்டுகளையுடைய குறிஞ்சிமலர்கள் நிறைந்த  பக்கமலைகளால் சூழப்பட்ட,

301. அருங்கடி மாமலை தழீஇ ஒருசார் = அரிய சிறப்புடைய பெரிய மலைகள் சூழ்ந்து இருக்கும் குறிஞ்சி நிலம் ஒருபக்கம்

கருத்துரை:

குறிஞ்சி நிலத்தில் நறுமணமுள்ள அகில் மற்றும் சந்தன மரங்களை வெட்டி, மேட்டு நிலத்தில் விதைத்த குறுகிய கதிர்களைக் கொண்ட தோரை நெல்லும், நீண்ட தண்டுகளையுடைய  வெண்சிறுகடுகுச் செடியும், ஐவனம் என்னும் வெண்மையான நெல்லோடு பின்னிப் பிணைந்து வளர்ந்திருக்கும்.  இஞ்சியும் மஞ்சளும் பச்சை மிளகும் பிறவும், பலவகையான வேறுபட்ட பண்டங்களும் கற்றரையில் குவிக்கப்பட்டிருக்கும். ஒருபால் தினை விளையும் மலைப்பக்கத்தில் கிளியை ஓட்டும் ஆரவாரமும், ஒருபால் மணி போன்ற பூக்களையுடைய அவரையின் நிறமிக்க தளிரைத் தின்னும் காட்டுபசுக்களை விரட்டும் காட்டில் உள்ளவர்களின் ஆரவாரமும், ஒருபால் மலையில் வாழும் குறவன் தோண்டிய, (பன்றிகளைப் பிடிப்பதற்காக தோண்டப்பட்டு இலைகளால் மூடப்பட்ட) பொய்க்குழிகளில் வீழ்ந்த ஆண்பன்றியைக் கொன்றதனால் உண்டான ஓசையும் எழும். ஒருபால் கரிய அடிமரத்தைக்கொண்ட வேங்கையின் பெரிய கிளைகளில் கிளைத்த கொம்புகளில்(பூத்த), மணமுள்ள பூக்களைப் பறிக்கும் பெண்களின் ஆரவாரமும், ஒருபால் கரிய நிறத்தையுடைய, பன்றிகளைக் கொல்லும் வலிமையுடைய புலியின் ஆரவாரத்தோடு கூடிய எல்லா ஆரவாரமும்,  விளங்குகின்ற வெண்மையான அருவி முழக்கத்தோடு மலைகளில் எதிரொலிக்கும்.  கரிய தண்டுகளையுடைய குறிஞ்சிமலர்கள் நிறைந்த  பக்கமலைகளால் சூழப்பட்ட, அரிய சிறப்புடைய பெரிய மலைகள் சூழ்ந்துள்ள, குறிஞ்சி ஒழுக்கம் அமைந்த  குறிஞ்சி நிலம் ஒரு பக்கம் இருக்கும்.

 

பாலைநிலத்தின் இயல்பு

 

இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப
நிழத்த யானை மேய்புலம் படரக்
கலித்த இயவர் இயம் தொட்டன்ன
கண்விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து           305


அருவி ஆன்ற அணிஇல் மாமலை
வை கண்டன்ன புல் முளி அம் காட்டுக்
கமழ்சூழ் கோடை விடரகம் முகந்து
கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை
இலைவேய் குரம்பை உழை அதட் பள்ளி . . .            310

உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர்
சிலையுடைக் கையர் கவலை காப்ப
நிழல் உரு இழந்த வேனில் குன்றத்துப்
பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார்

அருஞ்சொற்பொருள்:

302. இரு = பெரிய; வெதிர் = மூங்கில்; பைந்தூறு = பசுமையான புதர்; கூர் = மிகுதி, எரி = நெருப்பு; நைப்ப = சுட

 

303.நிழத்த = ஓய்ந்த

 

304. கலித்தல் = மகிழ்தல்; இயவர் = இசைஞர்கள்; இயம் = இசைக்கருவி; தொட்டன்ன = முழக்கினாற் போன்ற

 

305. கண்விடுபு = கணுக்கள் வெடித்து; உடையூ = உடைந்து; தட்டை = தட்டுவதால் ஒலியெழுப்பும் கருவி; கவின் =அழகு

 

306. ஆன்ற = இல்லாமற்போன

 

307. வை = வைக்கோல்; முளிதல் = உலர்தல்

 

308. கமம் = நிறைவு; கோடை = மேலைக் காற்று; விடரகம் = மலையிலுள்ள குகை

 

309. கால் = காற்று; சும்மை = காற்று ஒலி

 

310. குரம்பை = குடிசை; உழை = மான்; அதள் = தோல்; பள்ளி = படுக்கை

 

311. உவலை = தழை; கண்ணி = மாலை

 

312. சிலை = வில்; கவலை = சந்தி

 

313. நிழல் உரு இழந்த = நிழலில்லாத

 

பதவுரை:

302. இருவெதிர்ப் பைந்தூறு கூரெரி நைப்ப = பெரிய மூங்கிலின் பசிய புதரை அதனிடம் தோன்றிய பெரிய  நெருப்பு சுட்டெரித்ததால்,

 

303. நிழத்த யானை மேய்புலம் படர = ஓய்ந்த (களைத்த) யானைகள் தமது மேய்ச்சலுக்கு வேறு இடங்களைத் தேடிப்போக,

 

304. கலித்த இயவர் இயம் தொட்டன்ன = மகிழ்ச்சி அடைந்த இசைஞர்கள் இசைக்கருவிகளை முழக்கியதுபோல்,

 

305. கண்விடுபு உடையூஉத் தட்டை கவின் அழிந்து =  மூங்கிலின் கணுக்கள் உடைந்து தட்டைகள் அழகு இழந்து,

 

306. அருவி ஆன்ற அணிஇல் மாமலை =அருவிகள் இல்லாததால் அழகில்லாத பெரிய மலையிடத்தில்,

 

307. வை கண்டன்ன புல் முளி அம் காட்டுக் = வைக்கோலைப் போல்  புல் உலர்ந்த காட்டில்,

 

308. கமம்சூழ் கோடை விடரகம் முகந்து = நிறைந்து சூறாவளிக் காற்று குகைகளிலும் மலைப்பிளவுகளிலும் புகுந்ததால்,

 

309. கால் உறு கடலின் ஒலிக்கும் சும்மை = காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும் ஆரவாரத்தையுடைய,

 

310. இலைவேய் குரம்பை உழை அதட் பள்ளி = தழைகளால் வேயப்பட்ட குடிசையிலிருக்கும் மான் தோலாலாலாகிய  படுக்கையையும்,

 

311. உவலைக் கண்ணி வன்சொல் இளைஞர் = தழைகளாலான மாலையையும் உடைய, கடுஞ்சொற்களில் வல்லவரான இளைஞர்கள்,

 

312. சிலையுடைக் கையர் கவலை காப்ப = வில்லையுடைய கையோடு பல வழிகள் கூடுமிடத்தில்  காவல் காக்க,

 

313 - 314. நிழல் உரு இழந்த வேனில் குன்றத்துப் பாலை சான்ற சுரம் சேர்ந்து ஒரு சார் = நிழல் இல்லாமல் இருப்பதற்குக் காரணமான முதுவேனிற் காலத்தையையும்  மலையையும் உடைய, பிரிவை உரிப்பொருளாகக்கொண்ட பாலை நிலம் ஒரு பக்கம்

 

கருத்துரை:

பாலை நிலத்தில் பெரிய மூங்கிலின் பசிய புதரை அதனிடம் தோன்றிய பெரிய  நெருப்பு சுட்டெரித்ததால், ஓய்ந்த (களைத்த) யானைகள் தமது மேய்ச்சலுக்கு வேறு இடங்களைத் தேடிப்போகும். மகிழ்ச்சி அடைந்த இசைஞர்கள் இசைக்கருவிகளை முழக்கியதுபோல், மூங்கிலின் கணுக்கள் திறக்கப்பட்டு உடைவதனால் தட்டைகள் அழகு இழந்து காணப்படும்.  அருவிகள் இல்லாததால் அழகில்லாத பெரிய மலையிடத்தில், வைக்கோலைப் போல்  புல் உலர்ந்த காட்டில், சூறாவளிக் காற்று குகைகளிலும் மலைப்பிளவுகளிலும் புகுந்து, காற்று மிகுந்த கடல்போல் ஒலிக்கும். தழைகளால் வேயப்பட்ட குடிசையிலிருக்கும் மான் தோலாலாலாகிய படுக்கையையும், தழைகளாலான மாலையையும் உடைய, கடுஞ்சொற்களில் வல்லவரான இளைஞர்கள், வில்லையுடைய கையோடு பல வழிகள் கூடுமிடத்தில் காவல் காப்பர்.  நிழல் இல்லாமல் இருப்பதற்குக் காரணமான முதுவேனிற் காலத்தையும்  மலைகளையும் உடைய, பிரிவை உரிப்பொருளாகக்கொண்ட பாலை நிலம் ஒரு பக்கம் இருக்கும்.

 

நெய்தல்நில வளமும், மதுரை நகரத்தின் அமைப்பும்

 

முழங்குகடல் தந்த விளங்கு கதிர் முத்தம்        315

அரம்போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை
பரதர் தந்த பல்வேறு கூலம்
இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்புப்
பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர்
கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல் . . .    320

விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர்
நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார்
புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும்
வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப
நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு        325


ஐம்பால் திணையுங் கவினி அமைவர

அருஞ்சொற்பொருள்:

315. முத்தம் = முத்து

 

316. அரம் = அறுக்கும் கருவி; கண் = இடம்

317. பரதர் = நெய்தல்நில மக்கள்; கூலம் = பலபண்டம்

318. இரு = கரிய. கழி = உப்பங்கழி; செறு = பாத்தி; தீம்புளி = வெல்லக் கட்டியோடு சேர்த்துப் பொரித்த இனிக்கும் புளி

319. வரைப்பு = பரந்து உயர்ந்த மணற்குன்றுகளை எல்லையாகக்கொண்ட கடற்கரைச் சோலை; திமிலர் = படகோட்டுவோர்

320. குறைஇய = அறுத்த; துடி = உடுக்கை; துணியல் = துண்டு

321. விழுமிய = சிறந்த; நாவாய் = மரக்கலம்; பெருநீர் = கடல்; ஓச்சுநர் = செலுத்துவோர்

322. நனந்தலை = அகன்ற இடம்; தேஎம் = நாடு; உய்ம்மார் = செலுத்தும் பொருட்டு

323. புணர்ந்து = கூடி; புரவி = குதிரை

324. வைகல் தோறும் = நாள் தோறும்

325. பயின்று = நெருங்கி

326. ஐம்பால் = குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய ஐந்துவகை நிலங்கள், கவினி = அழகுற்று

பதவுரை:

315. முழங்குகடல் தந்த விளங்கு கதிர் முத்தம் = ஒலிக்கும் கடல்  தந்த, விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்களும்,

      

316. அரம்போழ்ந்து அறுத்த கண் நேர் இலங்கு வளை = அரத்தால் கீறியறுக்கப்பட்டு சிறப்புடையனவாக விளங்கும் வளையல்களும்,

317. பரதர் தந்த பல்வேறு கூலம் = நெய்தல்நில மக்கள் கொண்டு வந்த பல்வேறான பண்டங்கள்,

318. இருங்கழிச் செறுவின் தீம்புளி வெள் உப்பு = கரிய உப்பங்கழிகளில் பாத்தி கட்டி விளைவித்த வெள்ளை உப்பு, வெல்லக் கட்டியோடு சேர்த்துப் பொரித்த இனிக்கும் புளி

319. பரந்து ஓங்கு வரைப்பின் வன்கைத் திமிலர் = பரந்து உயர்ந்த கடற்கரைச் சோலையில் வலிமையான கையினையுடைய திமிலர் (படகோட்டுவோர்),

320.கொழு மீன் குறைஇய துடிக்கண் துணியல் = கொழுவிய மீன்களை, அறுத்த உடுக்கையின் கண் போன்ற (மீன்)துண்டங்களும் (ஏற்றப்பட்ட),

321.விழுமிய நாவாய் பெருநீர் ஓச்சுநர் = சிறந்த மரக்கலங்களைக் கடலில் செலுத்துவோர்,

322. நனந்தலை தேஎத்து நன்கலன் உய்ம்மார் = அகன்ற இடத்தையுடைய நாடுகளினின்றும் நல்ல அணிகலன்களை எடுத்துச்செல்ல,

323. புணர்ந்துடன் கொணர்ந்த புரவியொடு அனைத்தும் = பலருடன் கூடி, தம்முடன் கொண்டுவந்த குதிரைகளோடே முழுவதும்,

324. வைகல் தோறும் வழிவழிச் சிறப்ப = நாள்தோறும் வழிவழியாகச் சிறக்க,

325. நெய்தல் சான்ற வளம்பல பயின்று ஆங்கு = நெய்தல் நிலத்தின் வளம் பலவும் அமைந்து,

326. ஐம்பால் திணையுங் கவினி அமைவர = அங்கு ஐந்துவகை நிலங்களும்  (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை ஆகிய ஐந்துவகை நிலங்களும்)அழகுபெறப் பொருந்துதல் தோன்ற ,

கருத்துரை:

ஒலிக்கும் கடல்  தந்த, விளங்குகின்ற ஒளியினையுடைய முத்துக்கள், அரத்தால் கீறியறுக்கப்பட்டு சிறப்புடையனவாக விளங்கும் வளையல்கள், நெய்தல்நில மக்கள் கொண்டு வந்த பல் வேறான பண்டங்கள், கரிய உப்பங்கழிகளில் பாத்தி கட்டி விளைவித்த வெள்ளை உப்பு, வெல்லக் கட்டியோடு சேர்த்துப் பொரித்த இனிக்கும் புளி, பரந்து உயர்ந்த மணற்குன்றுகளை எல்லையாகக்கொண்ட  கடற்கரைச் சோலையில் வலிமையான கையினையுடைய திமிலர் (படகோட்டுவோர்) கொண்டுவந்து துண்டாக்கிய பெரிய  கொழுவிய மீன்கள், ஆகியவற்றை சிறந்த மரக்கலங்களைக் கடலில் செலுத்துவோர் அகன்ற இடத்தையுடைய நாடுகளிலிருந்து கொண்டு வந்த குதிரைகளுக்கு விலையாகப் பெற்றுக்கொண்டு ஏற்றிச் செல்வார்கள். இவ்வாறு நாள்தோறும் பாண்டிய நாட்டுப் பொருள்கள் ஏற்றுமதியாவதும், வெளிநாட்டுப் பொருள்கள் இறக்குமதியாவதும் இங்கே தொடர்ந்து நடைபெறும். இத்தகைய நெய்தல் நிலத்தில், மணல் குன்றுகள் சூழ்ந்த கானலில் வளம் பலவும் நிறைந்திருக்கும். இவ்வாறு பாண்டிய நாட்டில் ஐந்துவகை நிலங்களும்  (குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை,)அழகுடன் அமைந்திருக்கும்.

 

மதுரை நகரின் அமைப்பும் காட்சிகளும்

முழவு இமிழும் அகல் ஆங்கண்
விழவு நின்ற வியல் மறுகின்
துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி
இன் கலியாணர்க் குழூஉப்பல பயின்று ஆங்குப் . . 330

பாடல் சான்ற நல்நாட்டு நடுவண்

 

அருஞ்சொற்பொருள்:

327. முழவு = முரசு; இமிழ்தல் = ஒலித்தல்; அகல் = அகன்ற; ஆங்கண் = ஊர்

328. விழவு = விழா; வியல் = அகன்ற; மறுகு = தெரு

329. துணங்கை = ஒருவகைக் கூத்து; தழூஉ = குரவைக் கூத்து; சேரி = குடியிருப்பு

330. கலி = செருக்கு; யாணர் = புதுவருவாய்; குழூஉ = குடிமக்களின் கூட்டம்

331. சான்ற = அமைந்த; நடுவண் = நடுவில் (இடையில்)

 

பதவுரை:

327. முழவு இமிழும் அகல் ஆங்கண் = முரசு ஒலிக்கும் அகன்ற ஊரில்,

328. விழவு நின்ற வியல் மறுகின் = விழாக்கள் நடைபெறும் அகன்ற தெருக்களில்,

329. துணங்கை அம் தழூஉவின் மணம் கமழ் சேரி = துணங்கைக் கூத்தினையும், அழகிய குரவைக் கூத்தினையும் உடைய மணம் கமழ்கின்ற சேரியினையும்,

330. இன் கலியாணர்க் குழூஉப்பல பயின்று ஆங்கு = இனிய செருக்கினையுடைய புதுவருவாயினையுடைய குடியிருப்புகளையும் உடைய அங்கே,

331. பாடல் சான்ற நல்நாட்டு நடுவண் = (புலவர்)பாடுதல் நிறைந்த நல்ல நாட்டிற்கு நடுவில்

கருத்துரை:

அங்கு, முரசு ஒலிக்கும் அகன்ற ஊரில், விழாக்கள் நடைபெறும் அகன்ற தெருக்களில், துணங்கைக் கூத்து ஆடுவோரும், ழகிய குரவைக் கூத்து ஆடுவோரும் வாழும் மணம் கமழ்கின்ற சேரியும், புதுவருவாய் உடையோர் வாழும்  குடியிருப்புகளும் அமைந்திருக்கும்.  இத்தகைய சிறப்புடைய, பாடல் பெற்ற நல்ல நாட்டிற்கு நடுவில் மதுரை மாநகரம் உள்ளது.

 

வைகை ஆறும் பாணர் சேரியும்

கலை தாய உயர் சிமையத்து
மயில் அகவும் மலி பொங்கர்
மந்தி ஆட மாவிசும்பு உகந்து
முழங்குகால் பொருத மரம் பயில் காவின்               335


இயங்கு புனல் கொழித்த வெண்டலைக் குவவு மணற்
கான்பொழில் தழீஇய அடைகரை தோறும்
தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய்க்
கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல்
அவிர் அறல் வையைத் துறைதுறை தோறும் . .          340

பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி
அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும்

அருஞ்சொற்பொருள்:

332. கலை = ஆண் கருங்குரங்கு; தாய = தாவும்; சிமையம் = சிகரம்

 

333. அகவும் = கூவும்; பொங்கர் = மரக்கொம்பு

 

334. மந்தி = பெண் கருங்குரங்கு; உகந்து = உயர்ந்து

 

335. கால் = காற்று; பொருத = மோதிய; கா = சோலை

 

336. புனல் = நீர்; கொழித்த = ஒதுக்கிய (கொட்டிய); குவவு = குவிந்த

 

337. கான் = காடு; பொழில் = சோலை; தழீஇய = சூழ்ந்த; அடைகரை = கரைப்பக்கம்;

 

338. கோங்கு = ஒருவகை மரம்; தாஅய் = பரந்து

 

339. கோதை = மாலை; நல்வரல் = நன்றாகிய வருகை

 

340. அவிர் = ஒளி; அறல் = கருமணல்; வையை = வைகை

 

341. தண்டலை = பூந்தோட்டம்

 

342. அழுந்துபடுதல் = தொன்றுதொட்டு வருதல்; இருக்கை = குடியிருப்பு

 

பதவுரை:

332. கலை தாய உயர் சிமையத்து = ஆண்கருங்குரங்குகள் தாவித் திரியும் உயர்ந்த மலையுச்சியில்,

 

333. மயில் அகவும் மலி பொங்கர் = மயில்கள் கூவும் தழைத்த கொம்புகளில்,

334. மந்தி ஆட மாவிசும்பு உகந்து = பெண்கருங்குரங்குகள் ஊசலாட, பெரிய வானத்தில் உயர்ந்து,

335. முழங்குகால் பொருத மரம் பயில் காவின் = ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலையிலும்,      

336. இயங்கு புனல் கொழித்த வெண்டலைக் குவவு மணற் = ஓடுகின்ற நீர் கொழித்துக்கொண்டுவந்த  வெண்மையான  மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய,

337. கான்பொழில் தழீஇய அடைகரை தோறும் = காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீர் வந்து அடையும் கரைகள்தோறும்,

338. தாதுசூழ் கோங்கின் பூமலர் தாஅய் = தாதுக்கள் சூழ்ந்த கோங்க மரத்தின் பூவும், மற்ற மலர்களும் பரந்து,

339. கோதையின் ஒழுகும் விரிநீர் நல்வரல் = மாலையைப் போல் ஒழுகி ஓடும் பெருநீர் நன்றா வருதலையுடைய,

340. அவிர் அறல் வையைத் துறைதுறை தோறும் = விளங்குகின்ற கருமணலையுடைய வைகையின் துறைகள்தோறும்,

341. பல்வேறு பூத்திரள் தண்டலை சுற்றி = பலவகையிலும் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்த,

342. அழுந்துபட்டிருந்த பெரும்பாண் இருக்கையும் = தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் பெரும்பாணர்களின் குடியிருப்புகளையும்,

 

கருத்துரை:

ஆண்கருங்குரங்குகள் தாவித் திரியும் உயர்ந்த மலையுச்சியில், மயில்கள் கூவும் தழைத்த கொம்புகளில் மந்திகள் ஊசலாடும்.  பெரிய வானத்தில் உயர்ந்து, ஆரவாரிக்கின்ற பெருங்காற்று மோதிய மரங்கள் அடர்ந்த சோலைகளும், ஓடுகின்ற நீர் கொழித்துக்கொண்டுவந்த  வெண்மையான  மேற்பரப்பையுடைய திரண்ட மணலையுடைய காடுகளும் சோலைகளும் சூழ்ந்த நீர் வந்து அடையும் கரைகள்தோறும், தாதுக்கள் சூழ்ந்த கோங்க மரத்தின் பூவும், மற்ற மலர்களும் பரந்து, மாலையைப் போல் ஒழுகி ஓடும் பெருநீர் நன்றா வருதலையுடைய, விளங்குகின்ற கருமணலையுடைய வைகையின் துறைகள்தோறும், பலவகையிலும் வேறுபட்ட பூத்திரளையுடைய பூந்தோட்டங்கள் சூழ்ந்திருக்கும்.  அங்கு தொன்றுதொட்டு வாழ்ந்துவரும் பெரும்பாணர்களின் குடியிருப்புகள் உள்ளன.

அகழியும், மதிலும் மாடங்களும்

நிலனும் வளனுங் கண்டு அமைகல்லா
விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள்
அழும்பில் அன்ன நாடு இழந்தனரும்                    345


கொழும்பல் புதிய குடி இழந்தனரும்
தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த
அண்ணல் யானை அடுபோர் வேந்தர்
இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழியப்
பன்மாறு ஓட்டிப் பெயர்புறம்பெற்று . . .                  350


மண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின்
விண் உற ஓங்கிய பல் படைப் புரிசைத்

தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை

நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின்

மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு              355


       வையை அன்ன வழக்குடை வாயில்
       வகைபெற எழுந்து வானம் மூழ்கி
       சில் காற்று இசைக்கும் பல் புழை நல்இல்
       யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில்

அருஞ்சொற்பொருள்:

343.அமைகல்லா = முடிவில்லாத

 

344. மான = மானமும்; விறல் = வெற்றி; வேள் = சிற்றரசன் (குறுநில மன்னன்)

 

345. அழும்பில் = ஒரு ஊர்

 

346. கொழுத்தல் = செழித்தல்; பதி = ஊர்

 

347. கறு = பகை; கறுத்தல் = சினத்தல்; துப்பு = வலிமை

 

348. அண்ணல் = தலைமை;

 

350. பன்மாறு = பலவகை மாறுபாடு; ஓட்டி = நீக்கி

 

351. மண்ணுற = மண்ணுள்ள அளவும்; கிடங்கு = அகழி

 

352. விண்ணுற = விண்ணைத் தொடுமளவு; படை = அடுக்கு; புரிசை = மதில்

 

353. அணங்கு = தெய்வம்; நிலை = கதவு நிலை

 

354. கரிந்த = கருகிய

 

355. நிவந்த = உயர்ந்த

 

356. வையை = வைகை; வழக்கு = போக்குவரத்து

 

358. புழை = சாளரம் (ஜன்னல்)

 

பதவுரை:

343. நிலனும் வளனுங் கண்டு அமைகல்லா = நிலத்தையும் நிலத்தில் விளையும் பொருள்களால் வந்த வளங்களையும்,

 

344. விளங்கு பெருந்திருவின் மான விறல் வேள் = விளங்கும் பெரிய செல்வத்தினை உடைய மான விறல் வேள் என்னும் குறுநில மன்னனுடைய (அல்லது மானமும் வெற்றியும் உடைய ஒரு குறுநில மன்னனுடைய),

345. அழும்பில் அன்ன நாடு இழந்தனரும் = அழும்பில் என்னும் ஊரைச் சார்ந்த நாடுகளை இழந்தவர்களும்,

346. கொழும்பல் புதிய குடி இழந்தனரும் = செழிப்பான பல புதிய குடியிருப்புகளை இழந்தவர்களும்,

347. தொன்று கறுத்து உறையும் துப்புத் தர வந்த = பாழைய பகையை மனத்தில்கொண்டு, வலிமையுடன் வந்த,

348. அண்ணல் யானை அடுபோர் வேந்தர் = தலைமைச் சிறப்புடைய யானைகளுடனும், போர்வீரர்களுடனும் போரிட வந்த வேந்தர்கள், 

349. இன்னிசை முரசம் இடைப்புலத்து ஒழிய = (போரில் வெற்றி பெற முடியாமல்) அவர்களின் இனிய ஓசையையுடைய முரசுகள் இடைவழியில் வீணே வீழ்ந்து கிடக்கும்படி,

350-351. பன்மாறு ஓட்டிப் பெயர்புறம்பெற்று ண்ணுற ஆழ்ந்த மணி நீர்க் கிடங்கின் = அவர்களின் உள்ளத்தில் இருந்த பலவகையான மாறுபாடுகளை அகற்றி, அவர்களை  ஓடச் செய்ததால், அவர்களுடைய முதுகைக் கண்டு, மண்ணுள்ள அளவும் ஆழ்ந்த நீலமணி போன்ற நீரையுடைய அகழியும்

352. விண் உற ஓங்கிய பல் படைப் புரிசை = விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்த பல அடுக்குகளுடன் கூடிய மதில்களும்,

 

353. தொல் வலி நிலைஇய அணங்குடை நெடுநிலை = தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தின் சிலைகளையுடை நெடிய கதவுநிலையையும்,

 

354. நெய்படக் கரிந்த திண்போர்க் கதவின் = நெய் பலகாலும் இடுதலால் கருமையான, வலிமையாகப் பொருத்தப்பட்ட கதவினையும்,

355. மழை ஆடும் மலையின் நிவந்த மாடமொடு = மேகங்கள்  உலாவும் மலைபோல் உயர்ந்த மாடங்களோடு,

356. வையை அன்ன வழக்குடை வாயில் = வைகை நதியைப் போல் (மக்களின் இடையறாத) போக்குவரத்தை உடைய வாயில்,

357-358. வகைபெற எழுந்து வானம் மூழ்கி சில் காற்று இசைக்கும் பல் புழை நல்இல் = பலவிடங்களில் வானத்தைத் தொடும் அளவுக்கு எழுந்து, தென்றற்காற்று வீசும் பல சாளரங்களையுடைய நல்ல வீடுகளையும்,

359. யாறு கிடந்தன்ன அகல் நெடுந் தெருவில் = ஆற்றைப் போல் அகன்று கிடக்கும் தெருக்களில்,

 

கருத்துரை:

நிலத்தையும் நிலத்தில் விளையும் பொருள்களால் வந்த வளங்களையும், விளங்கும் பெரிய செல்வத்தினையும் உடைய மான விறல் வேள் என்னும் குறுநில மன்னனுடைய (அல்லது மானமும் வெற்றியும் உடைய ஒரு குறுநில மன்னனுடைய), அழும்பில் என்னும் வளம் மிக்க ஊரை ஒத்த நாடுகளை இழந்தவர்களும், செழிப்பான பல புதிய குடியிருப்புகளை இழந்தவர்களும், பழைய பகையை மனத்தில்கொண்டு, வலிமையுடன் வந்த, தலைமைச் சிறப்புடைய யானைகளுடனும், போர்வீரர்களுடனும் வேந்தர்கள் போரிட வந்தார்கள். அவர்கள் போரில் வெற்றி பெற முடியாமல், அவர்களின் இனிய ஓசையையுடைய முரசுகள் இடைவழியில் வீணே வீழ்ந்து கிடக்கும். அவர்கள் உள்ளத்தில் இருந்த மாறுபாட்டை நீக்கி, அவர்கள் புறமுதுகிட்டு ஓடச் செய்யும்படி மண்ணுள்ள அளவுக்கு ஆழமான, நீலமணி போன்ற நீருள்ள அகழிகள் இருக்கும். விண்ணைத் தொடுமளவுக்கு உயர்ந்த பல அடுக்குகளுடன் கூடிய மதில்கள் உயர்ந்து இருக்கும். தொன்றுதொட்ட வலிமை நிலைபெற்ற, தெய்வத்தின் சிலைகளையுடை நெடிய கதவுநிலையையும், பலகாலும் நெய் இடுதலால் கருமையான, வலிமையாகப் பொருத்தப்பட்ட கதவையும் உடைய, மேகங்கள்  உலாவும் மலைபோல உயர்ந்த மாடங்களோடு கூடிய வாயில், வைகை நதியைப் போல் (மக்களின் இடையறாத) போக்குவரத்தை உடையதாய், பலவிடங்களில் வானத்தைத் தொடும் அளவுக்கு உயர்ந்து இருக்கும். தென்றற்காற்று வீசும் பல சாளரங்களையுடைய நல்ல வீடுகளும் இருக்கும்.

 

சிறப்புக் குறிப்பு:

அழும்பில் என்ற ஊர் வளம்பொருந்திய ஊர் என்பதைப் பற்றிய குறிப்புகள் அகநானூறு ((44: 14-15), புறநானூறு (283: 1-5), ஆகிய நூல்களிலும் காணப்படுகின்றன. புதுக்கோட்டைப் பகுதியில் இப்பொழுது அம்புக்கோயில் என வழங்கப்படும் ஊரே அழும்பில் என்னும் ஊர் என்ப என்று பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் குறிப்பிடுகிறார்.

 

பல்வேறு குழாஅத்து இசையெழுந்து ஒலிப்ப . . .  360

மா கால் எடுத்த முந்நீர் போல
முழங்கு இசை நன்பணை அறைவனர் நுவலக்
கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை
மகிழ்ந்தோர் ஆடுங் கலிகொள் சும்மை
ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்துச்           365


சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி
வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள
நாள் தோறு எடுத்த நலம்பெறு புனை கொடி
நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு .
புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டிப் . . .    370

புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி
கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல
பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇப்
பெருவரை மருங்கின் அருவியின் நுடங்கப்

அருஞ்சொற்பொருள்:

361. மா = பெரிய; கால் = காற்று; முந்நீர் = கடல்

 

362. பணை = வெற்றி முரசு; அறைவனர் = முரசு முழங்குவோர்; நுவல = சொல்ல

 

363. கயம் = குளம்; இயம் = இசைக் கருவிகள்; இமிழ்தல் = ஒலித்தல்

 

364. கலித்தல் = மகிழ்தல்; சும்மை = ஆரவாரம்

 

365. ஓவுக் கண்டன்ன = ஓவியத்தில் பார்தாற்போல்; நியமம் = கடைத்தெரு

 

366. சாறு = விழா; அயர்தல் = செய்தல்; உருவம் = அழகு

 

367. எயில் =அரண்

 

369. நீர் = கடல்; தானை = படை

 

370. புலவு = புலால் நாற்றம்; மிடைதல் = மிகுந்திடல்; தோல் = யானை; மிடை தோல் = வரிசையாய் நின்ற யானைப்படை

 

371.விறல் = வெற்றி

 

372. களி = களிப்பு; நவிலல் = சொல்லுதல்

 

373. பதாகை = கொடி; நிலைஇ = நிலைபெற்று

 

374. வரை = மலை; மருங்கு = பக்கம்; நுடங்க = அசைய

 

பதவுரை:

360. பல்வேறு குழாஅத்து இசையெழுந்து ஒலிப்ப =ல்வேறு குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க,

361. மா கால் எடுத்த முந்நீர் போல = பெருங்காற்று (புயல்) புகுந்த கடல்போல் ஒலிக்கும்,

362. முழங்கு இசை ன்பணை அறைவனர் நுவல = முழங்கும் ஓசையையுடைய நல்ல முரசை முழக்குபவர்கள், செய்திகளை முரசறைந்து கூற,

363. கயம் குடைந்தன்ன இயம் தொட்டு இமிழ் இசை = குளத்தில் குடைந்து நீரில் விளையாடுபவர்கள் எழுப்பும் ஓசையைப் போல் இசைக்கருவிகளை இயக்கும் ஓசையைக் கேட்டு,

364. மகிழ்ந்தோர் ஆடுங் கலிகொள் சும்மை = மகிழ்ந்தோர் ஆடும் செருக்குடன் கூடிய ஆரவாரத்தை உடைய,

365. ஓவுக் கண்டன்ன இரு பெரு நியமத்து = ஓவியத்தில் கண்டதைப் போல் இரண்டு பெரிய கடைவீதிகளில் (நாளங்காடி அல்லங்காடி ஆகிய இரண்டு பெரிய கடைவீதிகளில்),

366. சாறு அயர்ந்து எடுத்த உருவப் பல்கொடி = விழா கொண்டாடும் இடங்களில் உள்ள பல அழகான கொடிகள்,

367. வேறு பல் பெயர ஆர் எயில் கொளக் கொள = பல்வேறு பெயருடைய பகை மன்னர்களின் அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற,

368. நாள் தோறு எடுத்த நலம்பெறு புனை கொடி = நாள்தோறும் உயர்த்திய நன்மையுடைய அலங்காரமான வெற்றிக்கொடியும்,

369. நீர் ஒலித்தன்ன நிலவுவேல் தானையொடு = கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேற்படையோடு (பகைவரை),

370. புலவுப்படக் கொன்று மிடை தோல் ஓட்டி = புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைப் படைகளையும் அழித்து,

371. புகழ் செய்து எடுத்த விறல்சால் நன்கொடி = புகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும்,

372-374. கள்ளின் களி நவில் கொடியொடு நன்பல பல்வேறு குழூஉக் கொடி பதாகை நிலைஇப் பெருவரை மருங்கின் அருவியின் நுடங்க = கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல்வேறு கொடிகளோடு பெருங்கொடிகளும் நிலைபெற்று, பெரிய மலையிடத்து அருவியைப் போன்று அசைந்து ஆட,

கருத்துரை:

அங்கு, தெருக்களில், ல்வேறு குழுவினரின் ஓசை எழுந்து ஒலிக்க, புயல் புகுந்த கடல்போல் ஒலிக்கும் ஓசையையுடைய நல்ல முரசை முழக்குபவர்கள் செய்திகளை முரசறைந்து கூறுவர். குளத்தில் குடைந்து நீரில் விளையாடுபவர்கள் எழுப்பும் ஓசையைப் போல் இசைக்கருவிகளை இயக்கும் ஓசையைக் கேட்டு, மகிழ்ந்தோர் ஆடும் செருக்குடன் கூடிய ஆரவாரத்தை உடைய, ஓவியத்தில் கண்டதைப் போல் இரண்டு பெரிய கடைவீதிகளில் (நாளங்காடி அல்லங்காடி ஆகிய கடைவீதிகளில்), விழா கொண்டாடும் இடங்கள் உள்ளன. அங்கு பல அழகான கொடிகள், பல்வேறு பெயருடைய பகை மன்னர்களின் அரண்களைக் கைப்பற்றக் கைப்பற்ற நாள்தோறும் உயர்த்திய அலங்காரமான வெற்றிக்கொடியும், கடல் ஒலித்ததைப் போன்ற நிலைபெற்ற வேற்படையோடு (பகைவரைப்), புலால் நாற்றம் உண்டாகக் கொன்று, பின்னர் அணியாய் நின்ற யானைப்படைகளையும் அழித்து, புகழை உண்டாக்கி எடுத்த வெற்றி அமைந்த நல்ல கொடியும், கள்ளின் களிப்பைக் கூறும் கொடியும், (அவற்றுடன்)நன்றாகிய பல்வேறு பெருங்கொடிகளும் நிலைபெற்று, பெரிய மலையிடத்து அருவியைப் போன்று அசைந்து ஆடும்.


நால்வகைப் படைகளும் வருவதும் போவதும்

பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின்               375


வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூக்
கூம்பு முதல் முருங்க எற்றிக் காய்ந்து உடன்
கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ
நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல
இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினம் சிறந்து . . .         380

கோலோர்க் கொன்று மேலோர் வீசி
மென்பிணி வன்தொடர் பேணாது காழ்   சாய்த்துக்
கந்து நீத்து உழிதரும்  கடாஅ யானையும்
அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து
ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும்           385


செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன
குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து
கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும்
கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின்
அடிபடு மண்டிலத்து ஆதி போகிய . . . .                 390

கொடிபடு சுவல டுமயிர்ப் புரவியும்
வேழத்து அன்ன வெருவரு செலவின்
கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும்
அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின்

அருஞ்சொற்பொருள்:

375. பனைமீன் = ஒருவகை மீன்; வளை = சங்கு; பரப்பு = கடல்

 

376. வீங்கு பிணி = இறுகிய பிணிப்பு; நோன்மை = வலிமை; அரீஇ = அறுத்து; இதை = பாய்; புடையூ = கிழித்து; இதைபுடையூ = பாயைக் கிழித்து

 

377. கூம்பு = பாய்மரம்; முதல் = அடி; முருங்க = முறியும்படி; எற்றி = மோதி; காய்ந்து = சினந்து

 

378. கல் – நங்கூரக்கல்லைக் குறிக்கிறது; பொருது = மோதி; உரைஇ = உலாவி

 

379. நாவாய் = மரக்கலம்

 

380. பணிலம் = சங்கு; ஆர்ப்ப = ஒலிக்க

 

381. கோலோர் = அங்குசத்தால் யானையை அடக்கும் பாகர்; மேலோர் = யானை மீது அமர்ந்திருப்பவர்கள்

 

382. தொடர் = சங்கிலி; காழ் = கட்டுத்தறி; சாய்த்து = முறித்து

 

383. கந்து = கட்டுத்தறி; (கம்பம்); உழிதருதல் = சுழலுதல்; கடாஅ யானை = மதம் பிடித்த யானை

 

384. அம் = அழகிய; கண் = இடம்; மால் = பெருமை; விசும்பு = ஆகாயம்; புதைய = மறைய; போழ்ந்து = பிளந்து

 

385. ஊறுதல் = சேருதல்; திரிதரல் = சுழலல் (இங்கு பறத்தலைக் குறிக்கிறது)

 

386. செங்கால் = சிவந்த கால்; அன்ன = போல

 

387. குரூஉ = நிறம்; புரவி = குதிரை; உராஅலின் = ஓடுதலால்; பரிதல் = ஓடுதல்; நிமிர்தல் = ஓடல்; பரி நிமிர்தல் = மிகுந்த ஓட்டம்

 

388. கால் = காற்று; கடுத்தல் = விரைதல்; கவின் = அழகு

 

389. கோலன் = கோலையுடையவன்; கொள்கை = குதிரையின் கதி (குதிரையின் ஐந்து விதமான ஓட்டம்); நவிற்றலின் = பயிற்றுதலால்

 

390. அடிபடு = காலடி படியுமாறு; மண்டிலம் = வட்டமாக ஓடுதல்; ஆதி = குதிரை ஓட்டங்களில் ஒருவகை ஓட்டம் (நேராக ஓடுதல்)

 

391. கொடி = ஒழுங்கு; சுவல் = குதிரைக் கழுத்தின் மயிர்; இடுமயிர் = சவுரி முடி; புரவி = குதிரை

 

392. வெரு = அச்சம்; செலவு = ஓட்டம்

 

393. ஆர்தல் = குடித்தல்; களமர் = வீரர்; இரு = பெரிய; செரு = போர்; மயக்கம் = கலக்கம்

 

பதவுரை:

375. பனைமீன் வழங்கும் வளை மேய் பரப்பின் = பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலில்,

 

376. வீங்கு பிணி நோன் கயிறு அரீஇ இதை புடையூ = இறுகக் கட்டிய வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு, பாய் கிழிய,

377. கூம்பு முதல் முருங்க எற்றிக் காய்ந்து உடன் = பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்,

378. கடுங்காற்று எடுப்பக் கல்பொருது உரைஇ =டுமையாகக் காற்று வீசுவதால் பாறைக் கற்களில் மோதி உராய்ந்து,

379. நெடுஞ்சுழிப் பட்ட நாவாய் போல = நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல,

380. இருதலைப் பணிலம் ஆர்ப்பச் சினம் சிறந்து = இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, சினம் மிகுந்து,

381. கோலோர்க் கொன்று மேலோர் வீசி = அங்குசத்தால் அடக்கும் பாகர்களைக் கொன்று, யானைமேல் அமர்ந்திருப்பவர்களைத் தூக்கி எறிந்து

382. மென்பிணி வன்தொடர் பேணாது காழ்   சாய்த்துக் = மெல்லிய கட்டுக்களால் கட்டப்பட்ட  வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின கட்டுத்தறியை முறித்து,

383.  கந்து நீத்து உழிதரும் கடாஅ யானையும் = கம்பத்தை விட்டுச் சுழலும் மதம் பிடித்த யானையும்,

384. அம் கண் மால் விசும்பு புதைய வளி போழ்ந்து = அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு,

385. ஒண் கதிர் ஞாயிற்று ஊறு அளவாத் திரிதரும் = ஒள்ளிய கதிரையுடைய கதிரவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும்,

386. செங்கால் அன்னத்துச் சேவல் அன்ன = சிவந்த கால்களையுடைய சேவலைப் போல்,

387. குரூஉ மயிர்ப் புரவி உராலின் பரி நிமிர்ந்து = நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிகுந்து,

388. கால் எனக் கடுக்கும் கவின் பெறு தேரும் = காற்றைப் போல் விரைந்து செல்லும் தேரும்,

389. கொண்ட கோலன் கொள்கை நவிற்றலின் =  கோலைக் கையில் கொண்ட வலவன் முறைப்படி ஓட்டுவதால்,

390. அடிபடு மண்டிலத்து ஆதி போகிய = தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதி என்னும் ஒட்டத்தில் ஓடிய,

391. கொடிபடு சுவல டுமயிர்ப் புரவியும் = ஒழுங்கு படுத்தப்பட்ட பிடரி மயிரையும், சவுரி முடியையும்  உடைய குதிரைகளும்,

392. வேழத்து அன்ன வெருவரு செலவின் = யானையைப் போல் அச்சம் தரும் வகையில்  போவதும் வருவதுமாக இருக்கும்,

393. கள் ஆர் களமர் இருஞ்செரு மயக்கமும் = கள்ளை உண்ட  வீரர்களின் கலக்கமும்,

394. அரியவும் பெரியவும் வருவன பெயர்தலின் = அரிய பெரிய நால்வகைப் படைகளும் வந்து போவதால்,

கருத்துரை:

பனைமீன்கள் உலாவும் சங்கு மேய்கின்ற கடலில், இறுகக் கட்டிய வலிய கயிற்றை அறுத்துக்கொண்டு பாய் கிழிய, பாய்மரம் அடியில் முறியும்படி மோதி வெகுண்டு ஒருசேரக்,  கடுமையாகக் காற்று வீசுவதால் நங்கூரக்கல் மற்ற பாறைக் கற்களில் மோதி உராய்ந்து, நெடிய சுழற்காற்றில் அகப்பட்ட மரக்கலத்தைப் போல, இரண்டு பக்கமும் (முன்னும் பின்னும்)சங்குகள் ஒலிக்க, சினம் மிகுந்து,  அங்குசத்தால் அடக்கும் பாகர்களைக் கொன்று, யானைமேல் அமர்ந்திருப்பவர்களைத் தூக்கி எறிந்துமெல்லிய கட்டுக்களால் கட்டப்பட்ட  வலிய சங்கிலிகளைப் பொருட்டாக எண்ணாமல், அவை கட்டின கட்டுத்தறியை முறித்து,  கம்பத்தை விட்டுச் சுழலும் மதம் பிடித்த யானையும், அழகிய இடத்தையுடைய பெரிய வானம் மறையும்படி, காற்றைப் பிளந்துகொண்டு, ஒள்ளிய கதிர்களையுடைய கதிரவனைச் சேரும் அளவாகக் கொண்டதுபோல் பறக்கும், சிவந்த கால்களையுடைய சேவலைப் போல், நிறமிக்க மயிரினையுடைய குதிரைகள் ஓடுதலாலே, ஓட்டம் மிகுந்து, காற்றைப் போல் விரைந்து செல்லும் தேரும், கோலைக் கையில் கொண்ட வலவன் முறைப்படி ஓட்டுவதால், தடம் பதிந்த வட்டமான பாதைகளில் ஆதி என்னும் ஒட்டத்தில் ஓடிய,  ஒழுங்குபடுத்தப்பட்ட பிடரி மயிரையும், சவுரி முடியையும்  உடைய, குதிரைகளும்,  யானையைப் போல் அச்சம் தரும் வகையில்  போவதும் வருவதுமாக இருக்கும் கள்ளை உண்ட  வீரர்களின் கலக்கமும், அரிய பெரிய நால்வகைப் படைகளும் வந்து போகும் மதுரை நகரின் தெருக்களில். பலரும் பல அரிய பண்டங்களை விற்பார்கள்.  

             

பல்வேறு பணியாரங்களை விற்பவர்களின் செயல்கள்


தீம் புழல் வல்சிக் கழற் கால் மழவர்             395

பூந்தலை முழவின் நோன்தலை கடுப்பப்
பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர்
பல வகை விரித்த எதிர் பூங்கோதையர்
பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர்
தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய் . . .   400

நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர்
இருதலை வந்த பகை முனை கடுப்ப
இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து
ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றைப்
பல் வேறு பண்ணியந் தழீஇத் திரி விலைஞர்      405


மலை புரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர

அருஞ்சொற்பொருள்:

395. தீம் = இனிய; புழல் = பணியாரம்; வல்சி = உணவு; மழவர் = வீரர்

 

396. பூந்தலை = பூவைத் தலையில் சூட்டிய; நோன் = வலிய; தலை = இடம் (முரசின் கண் - முரசைக் கோலால் அடிக்கும் இடம் கண் என்று அழைக்கப்படுகிறது); கடுப்ப = போன்ற

397. பிடகை = பூந்தட்டு

399. தொகுபு = கூடி; தாது = நீறு (தூள்)

400. தகை = அழகு; சேறு = களி (கருங்காலி மரத்தைச் சீவி ஊறவைத்துக் காய்ச்சின களி, இதை பாக்குடன் சேர்ப்பதால் களிப்பாக்கு என்று அழைக்கப் படுகிறது); பசுங்காய் = பாக்கு

401. இலை = வெற்றிலை; கோடு = சங்கு; நூறு = சுண்ணாம்பு

402. கடுப்ப = போல

403. வெய்து = வெப்பம்; உயிர்த்தல் = பெருமூச்சு விடுதல்

405. பண்ணியம் = பண்டம்; தழீஇ = உள்ளடக்கிக்கொண்டு (சேர்த்துக்கொண்டு)

406. புரை = போன்ற; கொழு நிழல் = நல்ல நிழல் (குளிர்ந்த நிழல்)

பதவுரை:

395. தீம் புழல் வல்சிக் கழற் கால் மழவர் = இனிய பணியாரங்களை உணவாகக்கொண்ட, கழலணிந்த கால்களையுடைய வீரர்கள்,

 

396. பூந்தலை முழவின் நோன்தலை கடுப்ப = பூவைத் தலையில் சூடிக்கொண்டு அடிக்கும் முரசின் கண்ணைப் போன்ற,

397. பிடகைப் பெய்த கமழ் நறும் பூவினர் = பூந்தட்டுக்களில் இட்டுவைத்த மணக்கின்ற பூக்களை உடையவர்களும்,

398. பலவகை விரித்த எதிர் பூங்கோதையர் = பல வகையான,  ஒன்றொடொன்று மாறுபட்ட பூக்கள் உள்ள பூமாலைகளை உடையவரும்,

399. பலர் தொகுபு இடித்த தாது உகு சுண்ணத்தர் = பலரும் கூடி  இடித்த பூந்துகள்போல்  பறக்கும் சுண்ணாம்பை உடையவரும்,

400. தகை செய் தீம் சேற்று இன் நீர்ப் பசுங்காய் = அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசுமையான பாக்குடன்,

401. நீடுகொடி இலையினர் கோடு சுடு நூற்றினர் = நீண்ட கொடியில் விளையும் வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டுப் பொடியாக்கிய  சுண்ணாம்பையுடையவரும்,

402. இருதலை வந்த பகை முனை கடுப்ப = இரண்டு பக்கத்திலிருந்தும்  படைகள் வந்த போர்க்களத்தைப் போல,

403. இன்னுயிர் அஞ்சி இன்னா வெய்து உயிர்த்து = தங்கள் இனிய உயிருக்கு அஞ்சி, வெப்பத்துடன் கூடிய பெருமூச்சுவிட்டு,

404. ஏங்குவனர் இருந்து அவை நீங்கிய பின்றைப் = ஏங்குபவராயிருந்து, அப்படைகள் சென்ற பின்னர்,

405. பல் வேறு பண்ணியந் தழீஇத் திரி விலைஞர் = பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துவைத்துக்கொண்டு திரிந்து விற்பவரும்,    

406. மலை புரை மாடத்துக் கொழுநிழல் இருத்தர = மலை போன்ற மாடங்களின் குளிர்ந்த நிழலில் இருக்க,

கருத்துரை:

இனிய பணியாரங்களை உணவாகக்கொண்ட, கழலணிந்த கால்களையுடைய வீரர்கள் பூவைத் தலையில் சூடிக்கொண்டு அடிக்கும் முரசின் கண்ணைப் போன்ற பூந்தட்டுக்களில் இட்டுவைத்த, மணக்கின்ற பூக்களை உடையவர்களும், பல வகையான, ஒன்றொடொன்று மாறுபட்ட பூக்கள் உள்ள பூமாலைகளை உடையவரும், பலரும் கூடி  இடித்த துகள் பறக்கும் சுண்ணாம்புபை உடையவரும், அழகு செய்யும் இனிய களி கலந்த இனிய நீரினையுடைய பசுமையான பாக்குடன், நீண்ட கொடியில் விளையும் வெற்றிலையை உடையவரும், சங்கு சுட்டுப் பொடியாக்கிய  சுண்ணாம்பையுடையவரும், யானையும் தேரும் குதிரையும் வீரருமாகிய நாற்படைகள் வந்து மீள்கின்றமையால் தங்கள் இனிய உயிருக்கு அஞ்சி ஏங்குபவராயிருப்பர்.   வெப்பத்துடன் கூடிய பெருமூச்சுவிட்டு, அப்படைகள் நீங்கிய பின்னர், பல வேறுபட்ட பண்டங்களைத் தம்மிடத்தே சேர்த்துக்கொண்டு திரிந்து விற்பவர்கள் மலை போன்ற மாடங்களின் நிழலில் இருப்பார்கள்.

 

பண்டங்களை விற்கும் முதிய பெண்டிரும், மயில் போன்ற பெண்களும், மடமொழியோரும்

இருங்கடல் வான்கோடு புரைய வாருற்றுப்
பெரும் பின்னிட்ட வால்நரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொல் முதுபெண்டிர்
செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை . . .         410

செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன
செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண்
ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று
வார்ந்த வாயர் வணங்கு இறைப்பணைத் தோள்
சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை          415

தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை
மை உக்கன்ன மொய் இருங் கூந்தல்
மயில் இயலோரும் மட மொழியோரும்
கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து
கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப . . .        420

புடை அமை பொலிந்த வகை அமை செப்பில்
காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம்
கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக
 

அருஞ்சொற்பொருள்:

407. இரு = கரிய; வான்கோடு = வெண்ணிறமான சங்கு; புரைய = போல; வாருற்று = வாரி முடித்த

 

408. வால் நரை = நன்கு வெளுத்த

409. நன்னர் = நன்மை; நலம் = அழகு

410. புனைந்த = செய்த (அலங்கரிக்கப்பட்ட)

411. செல்சுடர் = மறையும் கதிரவன்; பசுவெயில் = கதிரவன் மறைவதற்கு சிறிதுநேரம் முன்னர் படரும் மாலை வெயில்

412. செய்யர் = சிவந்த நிறம்; செயிர்த்தல் = வருத்ததைச் செய்தல்; நோக்கினர் = பார்வையையுடையவர்; மடக்கண் = மடப்பத்தையுடைய கண்

413. ஐஇய = வியப்பினையுடைய;கலுழ்தல் = கலங்கல்; மாமை = கருமை; வை = கூர்மை; எயிறு = பல்

414. வார்ந்த = வரிசையாக அமைந்த; இறை = மூட்டு; வணங்கு இறை பணைத்தோள் = வளைந்த மூங்கிலைப் போன்ற தோள்

415. சோர்ந்து = நெகிழ்ந்து; உகுவன்ன = வீழ்ந்து விடுவது போன்ற; வயக்கு = ஒளி; வந்திகை = கையில் தோளுக்குக் கீழ் அணியும் ஆபரணம்

416. தொய்யில் = மகளிர் மார்பகங்களில் சந்தனக்குழம்பால் எழுதுங்கோலம்; சுணங்கு = தேமல்; எதிர் = தோன்றிய

417. உக்கன்ன = ஒழுகுவதைப் போல; மொய் = நெருக்கம்; இரு = கரிய

419. கைஇ = ஒப்பனை செய்து; ஒதுங்குதல் = நடத்தல்; மெல்லிதின் ஒதுங்கி = மென்மையாக நடந்து; கை எறிந்து = கையைத் தட்டி

420. கல்லா = காம இன்பத்தைத் தவிர வேறு எதுவும் அறியாத; நகுவனர் = சிரிப்பவர்கள்; திளைத்தல் = அனுபவித்தல்

421. புடை = பக்கம்

422. காமர் = விருப்பம்; பண்ணியம் = பண்டம்

423. மறுகல் = உலாவுதல்

பதவுரை:

407. இருங்கடல் வான்கோடு புரைய வாருற்று = கரிய கடலில் மிதக்கும் வெண்மையான சங்கைப் போல, வாரி முடித்து,

408. பெரும் பின்னிட்ட வால்நரைக் கூந்தலர் = பெரியதாகப் பின்பக்கத்தில் இட்ட, முழுதும் வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய,

409. நன்னர் நலத்தர் தொல் முதுபெண்டிர் = நல்ல அழகுடைய, மூத்த பெண்டிர்,

410. செந்நீர்ப் பசும்பொன் புனைந்த பாவை = செந்நிறமான பசும்பொன்னால் செய்த பாவை,

411. செல் சுடர்ப் பசுவெயில் தோன்றியன்ன = மறையும் ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற,

412. செய்யர் செயிர்த்த நோக்கினர் மடக்கண் = சிவந்த நிறத்தையுடையவரும், ஆண்களை வருத்தும் பார்வையை உடையவரும், மடப்பத்தையுடைய கண்ணோடு,

413. ஐஇய கலுழும் மாமையர் வை எயிற்று =  காண்பவர்கள் வியந்து கலங்கும் கருமை நிறமுடையவரும், கூர்மையான பற்களோடு,

414. வார்ந்த வாயர் வணங்கு இறைப்பணைத் தோள் = வரிசையாக அமைந்த பற்களுடைய வாயையுடையவரும், வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில் போன்ற தோளினையும்,

415. சோர்ந்து உகுவன்ன வயக்குறு வந்திகை = நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற தோளில் அணியும் அணிகலன்களையும்,

416. தொய்யில் பொறித்த சுணங்கு எதிர் இளமுலை = மார்பகங்களில் கோலங்கள் வரையப்பட்ட தேமல் தோன்றிய இளமுலைகளையும்,

417. மை உக்கன்ன மொய் இருங் கூந்தல் = மை ஒழுகுவதைப் போன்ற அடர்ந்த  கரிய கூந்தலையுடைய,

418. மயில் இயலோரும் மட மொழியோரும் = மயில் போன்ற சாயல் உடையோரும், மடப்பத்தையுடைய  மொழியினையுடையோரும் ஆகிய மகளிர்,

419. கைஇ மெல்லிதின் ஒதுங்கி கை எறிந்து =  தம்மை அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக்,

420. கல்லா மாந்தரொடு நகுவனர் திளைப்ப = கல்லாத இளைஞருடன் மகிழ்ந்து இன்பம் துய்க்க,

421. புடை அமை பொலிந்த வகை அமை செப்பில் = அழகாகச் செய்யப்பட்ட பலவகை செப்புக்களில்,

422. காமர் உருவின் தாம் வேண்டு பண்ணியம் = தாங்கள் விரும்பும் பண்டங்களை ,

423. கமழ் நறும்பூவொடு மனை மனை மறுக = கமழகின்ற பூக்களோடு வீடுகள் தோறும் எடுத்துச்செல்ல,

கருத்துரை:

கரிய கடலில் மிதக்கும் வெண்மையான சங்கைப் போல் வாரி முடித்து, பெரிதாகப் பின்பக்கத்தில் இட்ட, முழுதும் வெளுத்த நரையுள்ள கூந்தலையுடைய, நல்ல அழகுடைய மூத்த பெண்டிர் பொருட்களை விற்கின்றனர்.  அங்கு, செந்நிறமான பசும்பொன்னால் செய்த பாவை, மறையும் ஞாயிற்றின் மாலைவெயிலில் காட்சியளித்தது போன்ற சிவந்த நிறத்தையுடையவராக சில பெண்கள் இருந்தனர். ஆண்களை வருத்தும் பார்வையை உடையவரும், மடப்பத்தையுடைய கண்ணோடு, காண்பவர்கள் வியந்து கலங்கும் கருமை நிறமுடையவர் சிலர் இருந்தனர். கூர்மையான பற்களோடு, வரிசையாக அமைந்த பற்களுடைய வாயையுடையவரும், வளைந்த மூட்டுக்களையுடைய மூங்கில் போன்ற தோளினையும், நெகிழ்ந்து விழுந்துவிடுவது போன்ற மின்னுகின்ற தோளில் அணியும் அணிகலன்களையும், மார்பகங்களில் கோலங்கள் வரையப்பட்ட தேமல் தோன்றிய இளமுலைகளையும், மை ஒழுகுவதைப் போன்ற அடர்ந்த  கரிய கூந்தலையுடைய, மயில் போன்ற சாயல் உடையோரும், மடப்பத்தையுடைய  மொழியினையுடையோரும் ஆகிய மகளிர்,  தம்மை அலங்கரித்து, மெத்தெனெ நடந்து, கையைத்தட்டிக், கல்லாத (காம இன்பத்தைத் தவிர வேறெதுவும் கற்காத) இளைஞருடன் மகிழ்ந்து இன்பம் துய்க்க, அழகாகச் செய்யப்பட்ட பலவகை செப்புக்களில் நுகர்வார்  விரும்பும் பண்டங்களை , கமழ்கின்ற பூக்களோடு வீடுகள் தோறும் எடுத்துச்சென்று உலாவுவார்கள்.


நாளங்காடியில் பெரும் ஆரவாரம்

மழை கொளக் குறையாது புனல் புக மிகாது
கரை பொருது இரங்கும் முந்நீர் போலக்                  425


கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது
கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி
ஆடு துவன்று விழவின்நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல்
நாளங் காடி நனந்தலைக் கம்பலை . . .                  430

அருஞ்சொற்பொருள்:

424.மழை = மேகம்; புனல் = நீர்

 

425. இரங்கல் = ஒலித்தல்; முந்நீர் = கடல்

427. கழுநீர் = கழுவும் நீர்

428. ஆடு = வெற்றி; துவன்று = நிறைந்த; நாடு – ஆகுபெயராக நாட்டு மக்களைக் குறிக்கிறது

429.பிறங்குதல் = விளங்கல்; கூடல் = மதுரை

430. நன ந்தலை = அகன்றவிடம்; கம்பலை = ஆரவாரம்

பதவுரை:

424. மழை கொளக் குறையாது புனல் புக மிகாது = மேகங்கள் அள்ளிக்கொண்டு போனால் குறையாது, ஆற்று வெள்ளம் புகுந்தாலும் நிரம்பி வழியாது,

 

425. கரை பொருது இரங்கும் முந்நீர் போல = கரையை மோதி ஒலிக்கும் கடலைப் போல்,

426. கொளக் கொளக் குறையாது தரத் தர மிகாது = வாங்குவோர் வந்து எடுக்க எடுக்கக் குறையாது,  வணிகர் மேன்மேலும் பொருள்களைக் கொண்டுவரக் கொண்டுவர அப்பொருள்கள் மிகாமல் நிறைவுற்று,

427. கழுநீர் கொண்ட எழுநாள் அந்தி = மக்கள் தங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளும் திருவிழாவின் கடைசி நாளான ஏழாம் நாள் அந்தியில்,

428. ஆடு துவன்று விழவின்நாடு ஆர்த்தன்றே = ஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது மக்கள் ஆரவாரித்ததைப் போன்று,

429. மாடம் பிறங்கிய மலிபுகழ்க் கூடல் = மாடத்தால் விளக்கமுற்ற மிகுந்த புகழையுடைய மதுரையில்,

430. நாளங் காடி நனந்தலைக் கம்பலை  =  நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் எழுந்த பெரிய ஆரவாரம்,

கருத்துரை:

மேகங்கள் அள்ளிக்கொண்டு போனால் குறையாது, ஆற்று  வெள்ளம் புகுந்தாலும் நிரம்பி வழியாது, கரையை மோதி ஒலிக்கும் கடல்போல், கரையைவிட்டு வெளியாறாமல் கரைக்குள் அடங்கியே கடலலைகள் முழங்கிகொண்டிருப்பதைப் போல், வாங்குவோர் வந்து எடுக்க எடுக்கக் குறையாது, வணிகர் மேன்மேலும் பொருள்களைக் கொண்டுவரக் கொண்டுவர அப்பொருள்கள் மிகாமல் நிறைவுற்று, மக்கள் தங்கள் பாவங்களை கழுவிக்கொள்ளும் திருவிழாவின் கடைசி நாளான ஏழாம் நாள் அந்தியில், ஆட்டங்கள் நிறைவுபெறும் விழாவின்போது மக்கள் ஆரவாரித்ததைப் போன்று, மாடங்களால் விளக்கமுற்ற மிகுந்த புகழையுடைய மதுரையில், நாளங்காடியையுடைய அகன்ற இடத்தில் எழுந்த பெரிய ஆரவாரம் இருந்தது,  

விழா காண்பதற்கு செல்வந்தர்களின் வருகை

        செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவிற்
       கண் பொருபு உகூஉம் ஒண் பூங்கலிங்கம்
       பொன்புனை வாளொடு பொலியக் கட்டித்
       திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானைக்                   435


கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி
மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல்
மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை
அணி கிளர் மார்பின் ஆ ரமொடு அளைஇக்
கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇக் . . .440

காலோர் காப்பக் காலெனக் கழியும்
வான வண்கை வளங்கெழு செல்வர்

நாள்மகிழ் இருக்கை காண்மார் ……

அருஞ்சொற்பொருள்:

432. செக்கர் = சிவப்பு, செவ்வானம்; நுணங்கு = நுண்மை

 

433. கண் பொருபு உகூஉம் = கண்களைப் பறிக்கும் (கண்களை வெறியோடச் செய்து சிந்தி விழுமாறு – பொ. வே. சோமசுந்தரனார் உரை);  கலிங்கம் = ஆடை

435. பிரம்பு = தேர்முட்டி ; தானை = முன்றானை

436. கச்சம் = கயிறு

437. மொய்ம்பு = வலிமை; தெரியல் = பூ மாலை (வேப்பம்பூ மாலை)

438. கோதை = மாலை

439. கிளர்தல் = விளங்குதல்; ஆரம் = முத்துமாலை; அளைஇ = கலந்து

440. கால் = காற்று; இயக்கு = காற்றின் செலவு; கடைஇ = செலுத்தி

441. காலோர் = காலாட்படை வீரர்கள்; கழியும் = செல்லும்

442. வானம் = மழை

443. நாள் மகிழ் இருக்கை = நாட்பொழுதில் மகிழ்ச்சியோடு வீற்றிருக்கும் இருக்கை

 

பதவுரை:

431-433. வெயிற் கதிர் மழுங்கிய படர்கூர் ஞாயிற்றுச் செக்கர் அன்ன சிவந்து நுணங்கு உருவிற் கண் பொருபு உகூஉம் ஒண் பூங்கலிங்கம் = வெயிலின் வெப்பம் குறைந்த கதிரவனையுடைய சிவந்த வானத்தைப் போல் சிவந்து, நுண்ணியதாக நெய்யப்பட்டு கண்களைப் பறிக்கும் ஒள்ளிய பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை,

 

434. பொன்புனை வாளொடு பொலியக் கட்டி = பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி,

435. திண் தேர்ப் பிரம்பின் புரளும் தானை = வலிமையான தேரின் பிரம்பில் (தேர்முட்டியில்) புரளுகின்ற முன்றானையையும்,

436.  கச்சம் தின்ற கழல் தயங்கு திருந்து அடி = கயிறு இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் நல்ல கால்களையும்,

437. மொய்ம்பு இறந்து திரிதரும் ஒருபெருந் தெரியல் = உலகத்தில் உள்ளோரின் வலிமையை அழித்து புகழோடு எங்கும் திரியும் ஒப்புயர்வற்ற பெரிய வேப்பம்பூ மாலையையும்,

438. மணி தொடர்ந்தன்ன ஒண் பூங்கோதை = நீலமணி கோத்த ஒளிபொருந்திய பூமாலையையும்,

439. அணி கிளர் மார்பின் ஆரமொடு அளைஇ = அழகாக விளங்கும் மார்பில் முத்துமாலையோடு கலந்து அணிந்து,  

440. கால் இயக்கு அன்ன கதழ் பரி கடைஇ = காற்றைப் போல் விரைந்து செல்லும் குதிரைகளைச் செலுத்தி,

441. காலோர் காப்பக் காலெனக் கழியும் = காலாட்படை வீரர்கள் சூழ்ந்து காக்க, காற்றைப் போல் விரைந்து செல்லும்,

442. வான வண்கை வளங்கெழு செல்வர் = மழையைப் போல் வரையாமற் கொடுக்கும் வண்மையான கையினையுடையவராகிய வளம் நிறைந்த செல்வந்தர்கள்

443. நாள் மகிழ் இருக்கை = நாட்பொழுதில் மகிழ்ந்திருக்கின்ற இருக்கையில் இருந்து விழா காண்பதற்காக                                                                                                                                                            

கருத்துரை:

வெயிலின் வெப்பம் குறைந்த கதிரவனையுடைய சிவந்த வானத்தைப் போல் சிவந்து, நுண்ணியதாக நெய்யப்பட்டு கண்களைப் பறிக்கும் ஒள்ளிய பூவேலைப்பாடுகள் அமைந்த ஆடையை, பொன்னால் அலங்கரிக்கப்பட்ட உடைவாளோடு அழகுபெறக் கட்டி, வலிமையான தேரின் பிரம்பில் (தேர்முட்டியில்) புரளுகின்ற முன்றானையையும், கயிறு இறுக்கித் தழும்பேறிப்போயிருந்த கழல் அசையும் நல்ல கால்களையும், உலகத்தில் உள்ளோரின் வலிமையை அழித்துப் புகழோடு விளங்கும் ஒப்புயர்வற்ற பெரிய வேப்பம்பூ மாலையையும், நீலமணி கோத்த ஒளிபொருந்திய பூமாலையையும், அழகாக விளங்கும் மார்பில் முத்துமாலையோடு கலந்து அணிந்து, காற்றைப் போன்ற விரைந்த குதிரைகளைச் செலுத்தி, காலாட்படை வீரர்கள்  சூழ்ந்து காக்க, மழையைப்  போல் வரையாமற் கொடுக்கும் வண்மையான கையையுடைய வளம் நிறைந்த செல்வந்தர்கள் நாட்பொழுதில் மகிழ்ந்திருக்கின்ற இருக்கையில் இருந்து விழா காண்பார்கள்.

 

பெரும் செல்வந்தரின் பெண்டிரின் செயல்

. .  .  .                            பூணொடு
தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல்
தா அற விளங்கிய வாய்பொன் அவிர் இழை             445


அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர்
மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ
ஒண் குழை திகழும் ஒளிகெழு திருமுகம்
திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம்
தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப . . .           450

நிரை நிலை மாடத்து அரமியம் தோறும்
மழைமாய் மதியின் தோன்றுபு மறைய

அருஞ்சொற்பொருள்:

443. பூணொடு = அணிகலன்களோடு

 

444. தெள்ளரி பொற்சிலம்பு = தெளிந்த மணிகளை உள்ளே கொண்ட பொன்னாலான சிலம்பு; அழல் = நெருப்பு

 

445. தா = குற்றம்; தா அற = குற்றமற்ற; அவிர் = ஒளி

 

449. காழ் = தண்டு; வியல் = அகன்ற; இரு = பெரிய; விலோதம் = கொடி

 

450. வளி = காற்று

 

451. அரமியம் = நிலாமுற்றம்

பதவுரை:

443-445. பூணொடு தெள் அரிப் பொற்சிலம்பு ஒலிப்ப ஒள் அழல் தா அற விளங்கிய வாய்பொன் அவிர் இழை = அணிகலன்களோடு, தெள்ளிய உள்மணிகளையுடைய பொன்னால் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில் இட்டு ,குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னால் செய்த பளபளக்கும் அணிகலன்களை  அணிந்துகொண்டு,   

 

446. அணங்கு வீழ்வு அன்ன பூந்தொடி மகளிர் = வானுலகத்திலிருந்து தெய்வ மகளிர் இறங்கி வந்ததைப் போன்ற, பூவாலான வளையல்களை அணிந்த மகளிரின்

447. மணம் கமழ் நாற்றம் தெருவுடன் கமழ = நறுமணம் தெருவெல்லாம் கமழ,

448. ஒண் குழை திகழும் ஒளிகெழு திருமுகம் = ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம்,

449. திண் காழ் ஏற்ற வியல் இரு விலோதம் = வலிமையான கம்பங்களில் கட்டப்பட்ட பெரிய கொடிகள்,

450. தெண்கடல் திரையின் அசைவளி புடைப்ப  = தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுவதால்,

451. நிரை நிலை மாடத்து அரமியம் தோறும் = வரிசையாக உள்ள  மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும்,

452. மழைமாய் மதியின் தோன்றுபு மறைய = மேகங்களில் மறையும் திங்களைப் போல் தோன்றித்தோன்றி மறைய,

கருத்துரை:

அணிகலன்களோடு, தெள்ளிய உள்மணிகளையுடைய (பரல்களையுடைய) பொன்னால் செய்த சிலம்புகள் ஒலிக்கும்படி, ஒளிரும் நெருப்பில் இட்டு, குற்றமற்று விளங்கிய அழகிய பொன்னால் செய்த பளபளக்கும் அணிகலன்களை அணிந்துகொண்டு, வானுலகத்திலிருந்து தெய்வ மகளிர் இறங்கி வந்ததைப் போன்ற, பூவாலான வளையல்களை அணிந்த மகளிரின், நறுமணம் தெருவெல்லாம் கமழ,  ஒள்ளிய மகரக்குழை விளங்கும் ஒளி பொருந்திய அழகினையுடைய முகம், வலிமையான கம்பங்களில் கட்டப்பட்ட பெரிய கொடிகள், தெளிந்த கடல் அலைகளைப் போல் எழுந்து விழும்படி காற்று மோதுவதால், வரிசையாக உள்ள  மாடங்களின் நிலா முற்றங்கள் தோறும், மேகங்களில் மறையும் திங்களைப்  போல் தோன்றித்தோன்றி மறையும்.

 

அந்தி வேளையில் நடைபெறும் விழா

நீரும் நிலனும் தீயும் வளியும்
மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய
மழுவாள் நெடியோன் தலைவன் ஆக                    455


மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்
வாடாப் பூவின் இமையா நாட்டத்து
நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு
மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார்
அந்தி விழவில் தூரியம் கறங்கத் . . .                    460

 

அருஞ்சொற்பொருள்:

454. இயற்றிய = படைத்த

 

456. மழு = ஆயுதம்

 

458. நாற்றம் = நறுமணம்; உரு = அச்சம்; உருகெழு = அச்சம் பொருந்திய

 

460. தூரியம் = இசைக்கருவிகள்

 

 

 

பதவுரை:

453-454. நீரும் நிலனும் தீயும் வளியும் மாக விசும்போடு ஐந்து உடன் இயற்றிய = நீர்,  நிலம்,  நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்தையும் படைத்த,

 

455. மழுவாள் நெடியோன் தலைவன் ஆக = மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க,

456. மாசற விளங்கிய யாக்கையர் சூழ்சூடர்  = தூய்மையாகத்  திகழும் உடலையுடைய, ஒளி சூழ்ந்த ,

457. வாடாப் பூவின் இமையா நாட்டத்து = வாடாத பூக்களையும் இமைக்காத கண்களையும்,

458. நாற்ற உணவின் உருகெழு பெரியோர்க்கு = நாற்றம் மிகுந்த நல்ல உணவை பலியாகக் கொள்ளும் அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு,

459-460. மாற்றரு மரபின் உயர்பலி கொடுமார் அந்தி விழவில் தூரியம் கறங்க = முறையாக, உயர்ந்த பலிகளைக் கொடுப்பவர்கள் அந்தி விழாவில் எழுப்பும் இசைக்கருவிகள் முழங்க

கருத்துரை:

நீர்,  நிலம்,  நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம் ஆகிய ஐந்தையும் படைத்த,  மழுவாகிய வாளையுடைய பெரியோனாகிய சிவபெருமான் தலைவனாய் இருக்க, தூய்மையாகத்  திகழும் உடலையுடையவர்கள், ஒளி சூழ்ந்த, வாடாத பூக்களையும் இமைக்காத கண்களையுமுடைய, நாற்றம் மிகுந்த நல்ல உணவைப் பலியாகக் கொள்ளும் அச்சம் பொருந்திய தெய்வங்களுக்கு, முறையாக, உயர்ந்த பலிகளைக் கொடுக்கும்பொழுது, அந்தி விழாவில் இசைக்கருவிகள் முழங்கும்.

 

பௌத்தப் பள்ளியும் அந்தணர்கள் வழிபடும் இடமும்

 

திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை
ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித்
தாது அணி தாமரைப் போது பிடித்தாங்குத்
தாமும் அவரும் ஓராங்கு விளங்கக்
காமர் கவினிய பேரிளம் பெண்டிர்          465


பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சிச்
சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும்
சிறந்த வேதம் விளங்கப் பாடி
விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து
நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி. . .          470


உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும்
அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின்
பெரியோர் மேஎய் இனிதின் உறையும்
குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும்

அருஞ்சொற்பொருள்:

461. மதாணி = பதக்கம், ஆபரணம், கழுத்தில் அணியும் ஆபரணம்; குறுமாக்கள் = சிறுபிள்ளைகள்

 

462. ஓம்புதல் = பாதுகாகத்தல்; தழீஇ = அணைத்து; முயங்கி = தழுவி

 

463. போது = மலரும் பருவத்தரும்பு

 

465. கவினிய = அழகிய

 

466.பழிச்சுதல் = போற்றுதல், புகழ்தல், வாழ்த்துதல்

 

467. புறங்காத்தல் = பாதுகாத்தல்; பள்ளி = பௌத்தர் கோவில்

 

473. மேஎய் = பொருந்தி

 

474. குயின்ற = குடைந்த

 

பதவுரை:

461. திண்கதிர் மதாணி ஒண் குறுமாக்களை = திண்ணியதாய் ஒளிரும் ணிகலன்களையுடைய இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளை,

 

462. ஓம்பினர்த் தழீஇத் தாம் புணர்ந்து முயங்கித் = பாதுகாப்பவர்களாய் அவர்களைத் தழுவி, தாம் மேலும் இறுக அவர்களை மார்புற அணைத்து,

463. தாது அணி தாமரைப் போது பிடித்தாங்குத் = தாது சேர்ந்த தாமரைப்பூ அதன் மொட்டைத் தம் கையாற் பிடித்தாற்போல,

464. தாமும் அவரும் ஓராங்கு விளங்க = தாமும் ம் மக்களும் ஓரிடத்தே சேர்ந்து நின்று திகழும்படி,

465. காமர் கவினிய பேரிளம் பெண்டிர் = விரும்பத் தகுந்த அழகுடைய இளமை முதிர்ந்த மகளிர்,

466. பூவினர் புகையினர் தொழுவனர் பழிச்சி = பூவும் புகையும் கொண்டுசென்று, புகழ்ந்து வாழ்த்தி,

467. சிறந்து புறங்காக்குங் கடவுட் பள்ளியும் = சிறப்பாக அவர்களால் பாதுகாக்கப்படும் கடவுளின் பௌத்தப் பள்ளியும்,

468. சிறந்த வேதம் விளங்கப் பாடி = சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி,

469. விழுச்சீர் எய்திய ஒழுக்கமொடு புணர்ந்து = சிறந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு,

470. நிலம் அமர் வையத்து ஒருதாம் ஆகி = இந்த நிலவுலகில், தம்மை உணர்ந்து, தனித்திருந்து,

471. உயர்நிலை உலகம் இவண் நின்று எய்தும் = உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே இருந்து அடையும்,

472. அறநெறி பிழையா அன்புடை நெஞ்சின் = அறத்தின் வழியிலிருந்து தவறாது  அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய,

473. பெரியோர் மேஎய் இனிதின் உறையும் = பெரியோர் பொருந்தி இன்புற்று வாழும்,

474. குன்று குயின்றன்ன அந்தணர் பள்ளியும் = மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருப்பிடமும்

கருத்துரை:

திண்ணியதாய் ஒளிரும் ணிகலன்களையுடைய, இயற்கையாகவே அழகுள்ள சிறுபிள்ளைகளைப் பாதுகாப்பவர்களாய், அவர்களைத் தழுவி, தாம் மேலும் இறுக அவர்களை மார்புற அணைத்து,  தாது சேர்ந்த தாமரைப்பூ அதன் மொட்டைப் தம் கையாற் பிடித்தாற்போல, தாமும் ம் மக்களும் ஓரிடத்தே சேர்ந்து நின்று திகழும்படி, விரும்பத் தகுந்த அழகுடைய இளமை முதிர்ந்த மகளிர், பூவும் புகையும் கொண்டுசென்று, புகழ்ந்து வாழ்த்தி, சிறப்பாக அவர்களால் பாதுகாக்கப்படும் கடவுளின் பௌத்தப் பள்ளி ஒருபக்கம் இருக்கும். சிறந்த வேதங்களைத் திருத்தமாக ஓதி, சிறந்த ஒழுக்கங்களை மேற்கொண்டு, இந்த நிலவுலகில், தம்மை உணர்ந்து, தனித்திருந்து, உயர்ந்த நிலையையுடைய வீடுபேற்றை இவ்வுலகிலேயே இருந்து அடையும், அறத்தின் வழியிலிருந்து தவறாது  அருள் நிரம்பிய நெஞ்சினையுடைய, பெரியோர் பொருந்தி இன்புற்று வாழும், மலையைக் குடைந்ததைப் போன்ற அந்தணர்கள் இருப்பிடம்  ஒருபக்கம் இருக்கும்.

 

சமணப் பள்ளியும் அறங்கூறும் அவையத்தார் வாழும் தெருவும்


வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப்                       475
பூவும் புகையும் சாவகர் பழிச்சச்
சென்ற காலமும் வரூஉம் அமயமும்
இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து
வானமும் நிலனும் தாம் முழுது உணரும்
சான்ற கொள்கைச் சாயா யாக்கை . . .                          480


ஆன்று அடங்கு  அறிஞர் செறிந்தனர் நோன்மார்
கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப்
பல்புரிச் சிமிலி நாற்றி நல்கு வரக்
கயம் கண்டன்ன வயங்குடை நகரத்துச்
செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து                        485


நோக்குவிசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி
இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையுங்
குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற
அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச்
செற்றமும் உவகையும் செய்யாது காத்து . . .                   490


ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகிச்
சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும்

அருஞ்சொற்பொருள்:

475.பழுநிய = முதிர்ந்த; ஆர்தல் = நிறைதல்

 

476. சாவகர் = விரதத்தை மேற்கொண்டவர்கள் (சமணர்கள்); பழிச்சுதல் = வாழ்த்துதல்

 

477. அமயம் =சமயம்

 

480. சாயா = இளைக்காத

 

481. செறிந்து = நெருங்கி; நோன்மார் = நோற்றற்கு

 

482. பொளிந்தன்ன = குடைந்ததைப் போன்ற; இட்டுவாய் =ஒடுங்கிய வாய் ; கரண்டை =  கமண்டலம் (நீர் கொண்டுபோவதற்கு பயன் படுத்தப்படும் பாத்திரம்)

 

483. சிமிலி = உறி; நாற்றி = தொங்கவிட்டு; நல்குதல் = அருளுதல்

 

484. வயங்குதல் = விளங்குதல்

 

486. விசை = வேகம்

 

487. இறும்பூது = வியப்பு; சேக்கை = சேர்ந்து இருப்பது (சமணப்பள்ளி)

 

488. குழீஇ = திரண்டு

 

490. செற்றம் = சினம்

 

491. ஞெமன்கோல் = தராசுக்கோல்

 

பதவுரை:

475. வண்டுபடப் பழுநிய தேனார் தோற்றத்துப் = வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய,

 

476. பூவும் புகையும் சாவகர் பழிச்சச் = பூக்களையும், புகையினையும் கொண்டு சென்று விரதங்கொண்டோர் வாழ்த்திநிற்ப,

477. சென்ற காலமும் வரூஉம் அமயமும் = சென்ற காலத்தையும் வருகின்ற எதிர் காலத்தையும்,

478. இன்று இவண் தோன்றிய ஒழுக்கமொடு நன்கு உணர்ந்து = இன்று இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கங்களையும்  நன்றாக உணர்ந்து,

479. வானமும் நிலனும் தாம் முழுது உணரும் = வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும்,

480. சான்ற கொள்கைச் சாயா யாக்கை  =  (தமக்கு)அமைந்த விரதங்களையும், இளைக்காத உடம்பையும்,

481. ஆன்று அடங்கு  அறிஞர் செறிந்தனர் நோன்மார் = நிறைந்து அடங்கின அறிவையும் உடையவர்கள் நெருங்கி இருந்து நோற்றற்கு,

482. கல் பொளிந்தன்ன இட்டுவாய்க் கரண்டைப் = கல்லைக் குடைந்ததைப் போல் ஒடுங்கிய வாயை உடைய கமண்டலம்,

483. பல்புரிச் சிமிலி நாற்றி நல்கு வரக் = பல வடங்களையுடைய நூலுறியில் தொங்கவிட்டு, அருளுதலையுடைய,

484. கயம் கண்டன்ன வயங்குடை நகரத்துச் = குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து,

485. செம்பு இயன்றன்ன செஞ்சுவர் புனைந்து = செம்பால் செய்ததைப் போலச் சிவந்த சுவர்களில் ஓவியமெழுதி,

486. நோக்குவிசை தவிர்ப்ப மேக்கு உயர்ந்து ஓங்கி = கண்பார்வையைத் தவிர்க்கும்படி மேல்நிலம் உயர்ந்து ஓங்கி,

487. இறும்பூது சான்ற நறும் பூஞ்சேக்கையும் = வியக்கத் தக்க நறுமனமுள்ள பூக்களையுடைய சமணப் பள்ளியும்,

488. குன்றுபல குழீஇப் பொலிவன தோன்ற = மலைகள் பலவும் திரண்டு பொலிவபோலத் தோன்ற,

489. அச்சமும் அவலமும் ஆர்வமும் நீக்கிச் = அச்சத்தையும், வருத்தத்தையும், பற்றுள்ளத்தையும் போக்கி,

490. செற்றமும் உவகையும் செய்யாது காத்து = பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்து,

491. ஞெமன் கோலன்ன செம்மைத்து ஆகிச் = துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய்,

492. சிறந்த கொள்கை அறங்கூறு அவையமும் = சிறந்த கொள்கைகளையுடைய அறங்கூறவையமும்,

கருத்துரை:

வண்டுகள் படியும்படி பருவம் முதிர்ந்த தேன் நிறைந்த தோற்றத்தையுடைய பூக்களையும், புகையினையும் கொண்டுசென்று விரதங்கொண்டோர் வாழ்த், சென்ற காலத்திலும் வருகின்ற எதிர் காலத்திலும், இன்றும் இவ்வுலகில் தோன்றி நடக்கின்ற ஒழுக்கங்களையும் நன்றாக உணர்ந்து, வானுலகத்தையும் நிலவுலகத்தையும் தாம் முழுவதும் உணருகின்றவரும், (தமக்கு)அமைந்த விரதங்களையும், இளைக்காத உடம்பினையும், நிறைந்து அடங்கின அறிவினையும் உடையவர்கள் நெருங்கி இருந்து நோற்றற்கு, கல்லைக் குடைந்ததைப் போல் ஒடுங்கிய வாயை உடைய கமண்டலத்தைப் பல வடங்களையுடைய நூலுறியில் தொங்கவிட்டு, அருளுதலையுடைய, குளத்தைக் கண்டதைப் போல விளங்குதலுடைய கோயிலிடத்து, செம்பால் செய்ததைப் போலச் சிவந்த சுவர்களில் ஓவியமெழுதி, கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு மேலாக உயர்ந்து ஓங்கி, வியக்கத் தக்க நறுமணமுள்ள பூக்களையுடைய சமணப் பள்ளி, மலைகள் பலவும் திரண்டு பொலிவனபோலத் தோன்றும்.

 

நடுவுநிலைமையுடன் கூறுவார்களா அல்லது கூறமாட்டார்களா என வந்தவர்களின் அச்சத்தையும் வருத்தத்தையும் ஆர்வத்தையும் நீக்கி, பகைமையையும், மகிழ்ச்சியையும் கொள்ளாமல் தம்மைப் பாதுகாத்து, துலாக்கோலைப் போன்ற நடுவுநிலைமை உடையதாய், சிறந்த கொள்கைகளையுடைய அறங்கூறவையம் தோன்றும்.

காவிதிப் பட்டம்  பெற்றவர்கள் வாழும் தெரு, பொருட்களை விற்பவர் வாங்குவோரின் ஆரவாரம், நாற்பெருங்குழுவினர் வாழும் தெரு

நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து
ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து
மா விசும்பு வழங்கும் பெரியோர் போல                  495


நன்றும்  தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி
அன்பும் அறனும் ஒழியாது காத்துப்
பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த
செம்மை சான்ற காவிதி மாக்களும்
அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி . . .         500


குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன
பருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்இல்
பல்வேறு பண்டமொடு ஊண்மலிந்து கவினி
மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும்
பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு   505


சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும்
மழை ஒழுக்கு அறாப் பிழையா விளையுள்
பழையன் மோகூர் அவையகம் விளங்க
நான்மொழிக் கோசர் தோன்றியன்ன
தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் . . .         510

அருஞ்சொற்பொருள்:

493. நீவிய = தடவிய; கேழ் = நிறம், ஒளி ; கிளர்தல் = விளங்குதல்; அகலம் = மார்பு

 

494. ஆவுதி = வேள்வி; மண்ணி = செய்து; அவிர் =ஒளி; துகில் = நல்லாடை (மெல்லிய ஆடை)

 

495. மா = பெரிய (அகன்ற); பெரியோர் = தேவர்

 

498. ஒரீஇ = நீங்கி, விலகி; பாய்தல் = பரவுதல்

 

499. காவிதி = வேளாளர் ஆகியோருக்கு பண்டிய மன்னன் அளிக்கும் பட்டம்

 

501. குறும் = நெருங்கிய

 

502. உகத்தல் = உயரப் பறத்தல்

 

508. கவினி = அழகு பெற்று

 

506. பண்ணியம் = பண்டங்கள்; பகர்நர் = விற்போர்

 

508. பழையன் = ஒரு மன்னனின் பெயர்; மோகூர் = ஓரூர்

 

510. மேஎந் தோன்றிய = மேலாகத் தோன்றிய

 

பதவுரை:

493. நறுஞ் சாந்து நீவிய கேழ் கிளர் அகலத்து = மணமுள்ள சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய்,

 

494. ஆவுதி மண்ணி அவிர் துகில் முடித்து = வேள்விகளைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி,

495. மா விசும்பு வழங்கும் பெரியோர் போல = அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போல்,

496. நன்றும்  தீதும் கண்டு ஆய்ந்து அடக்கி = நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி,

497. அன்பும் அறனும் ஒழியாது காத்து = அன்பையும் அறத்தையும் தவறாமல் பாதுகாத்து,

498. பழி ஒரீஇ உயர்ந்து பாய் புகழ் நிறைந்த = பழியை வெறுத்து ஒதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுபெற்ற,

499. செம்மை சான்ற காவிதி மாக்களும் = தலைமை அமைந்த காவிதிப்பட்டம் பெற்றவர்களும்  (அமைச்சர்களும்)

500. அறநெறி பிழையாது ஆற்றின் ஒழுகி = அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடந்து,

501. குறும்பல் குழுவின் குன்று கண்டன்ன = நெருக்கமாக அமைந்த பல சிறுமலைகளைக் கண்டாற் போல்,

502. பருந்து இருந்து உகக்கும் பன்மாண் நல்இல் = பருந்துகள் இருந்து இளைப்பாறிப் பின்னர் உயர்ந்தெழும் சிறந்த பல நல்ல இல்லங்களில்,

503. பல்வேறு பண்டமொடு ஊண்மலிந்து கவினி = பலவகையான பண்டங்களோடு பல உணவுகளும் மிகுந்த அழகுடன் இருந்து,

504. மலையவும் நிலத்தவும் நீரவும் பிறவும் = மலையில் வளர்ந்தவையும், , நிலத்தில் விளைந்தவையும், நீரில் (கடலில்) பிறந்தவையும் இன்னும் இது போன்ற பலவகைப் பொருட்களும்,

505. பல்வேறு திருமணி முத்தமொடு பொன்கொண்டு = பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு,

506. சிறந்த தேஎத்துப் பண்ணியம் பகர்நரும் = சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை விற்போரும்,

507. மழை ஒழுக்கு அறாப் பிழையா விளையுள் = மழை பெய்தல் அற்றுப்போகாத பொய்க்காத விளைச்சலையுடைய,

508. பழையன் மோகூர் அவையகம் விளங்க = பழையன் என்னும் மன்னன் ஆண்ட மோகூரில்,  அரசவை திகழுமாறு,

509. நான்மொழிக் கோசர் தோன்றியன்ன = நான்கு வகையான கோசர்கள் வீற்றிருந்தைப் போல்,

510. தாம் மேஎந் தோன்றிய நாற்பெருங் குழுவும் = தாம் மேலாக விளங்கிய நாற்பெருங்குழுவும்,

 

கருத்துரை:

மணமுள்ள சந்தனத்தைப் பூசிய நிறம் விளங்கும் மார்பினையுடையவராய், வேள்விகளைச் செய்து, பளிச்சிடும் மெல்லிய ஆடையைச் சுற்றிக் கட்டி, அகன்ற வானத்தில் நடமாடும் தேவர்களைப் போல், நன்மை தீமைகளைத் தம் அறிவால் கண்டு ஆராய்ந்து, மனத்தை அடக்கி, அன்பையும் அறத்தையும் தவறாமல் பாதுகாத்து, பழியை வெறுத்து ஒதுக்கி உயர்ந்து, பரவுகின்ற புகழால் நிறைவுபெற்ற, தலைமை அமைந்த காவிதி என்ற பட்டம் பெற்றவர்கள்(அமைச்சர்கள்) வாழும் தெருவிலும், அறத்தின் வழியினின்றும் தவறாது, நல்வழியே நடக்கும் மக்கள் வாழும் தெருவிலும் உள்ள வீடுகளை,  நெருக்கமாக அமைந்த பல சிறுமலைத்தொடர் என்று நினைத்து, பருந்துகள் வந்து தங்கி இளைப்பாறிப் பின்னர் உயரப் பறக்கும். அத்தகைய சிறந்த பல நல்ல இல்லங்களில், பலவகையான பண்டங்களோடு பல உணவுகளும் மிகுந்த அழகு நிறிறைந்து காணப்படும். அங்கே, அந்த வீடுகளில், மலையில் வளர்ந்தவையும், நிலத்தில் விளைந்தவையும், நீரில் (கடலில்) பிறந்தவையும் இன்னும் இது போன்ற பலவகைப் பொருட்களையும், பல் வேறான அழகிய மணிகளையும், முத்துக்களையும், பொன்னையும் வாங்கிக்கொண்டு, சிறந்த அயல் நாட்டுப் பண்டங்களை விற்கவும் வாங்கவும் வருவோரின் கூட்டத்தின் ஆரவாரம் நிலைத்திருக்கும்.  மழை பெய்தல் அற்றுப்போகாத, பொய்க்காத விளைச்சலையுடைய, பழையன் என்னும் மன்னன் ஆண்ட மோகூரில்,  அரசவை திகழுமாறு, நான்கு வகையான கோசர்கள் வீற்றிருந்தைப் போல், மேலாக விளங்கிய நாற்பெருங்குழுவினர் வாழும் இடங்களும் இருக்கும்.

 

சிறப்புக் குறிப்பு: கோசர் என்பவர்கள் சங்க காலதில் துளுநாட்டில் வாழ்ந்தனர்.  அவர்கள் தமிழ்நாட்டின் சிலபகுதிகளை ஆண்ட சிற்றரசர்களாக இருந்ததாகவும், மூவேந்தர்களுக்கு உறுதுணையாகப் போர் புரிந்ததாகவும் வரலாற்றாசிரியர்கள் கருதுகின்றனர்.  ”நான்மொழிக் கோசர்“ என்பது கோசர்களுள் நான்கு கிளைகள் இருந்தன என்பதைக் குறிக்கிறது. 

 

 

பல்வேறு தொழிலாளர்களும் உணவு வகைகளும்

 

கோடு போழ் கடைநரும் திருமணி குயினரும்
சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும்
பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும்
செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும்
பூவும் புகையும் ஆயும் மாக்களும்
                        515


எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி
நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின்
கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடித்
தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பல்
குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்துச் . . .           520

சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ
நால்வேறு தெருவினும் கால் உற நிற்றரக்
கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும்
தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை

பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇ                 525


விழைவு கொள் கம்பலை கடுப்பப் பலவுடன்
சேறு நாற்றமும் பலவின் சுளையும்
வேறுபடக் கவினிய தேமாங் கனியும்
பல்வேறு உருவிற் காயும் பழனும்
கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி . . .           530


மென்பிணி அவிழ்ந்த குறு முறி அடகும்
அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும்
புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும்

கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்
இன்சோறு தருநர் பல்வயின் நுகர                535

 

அருஞ்சொற்பொருள்:

511. கோடு = சங்கு; போழ்தல் =பிளத்தல்; கடைநர் = கடைபவர்கள் ; குயினர் = துளையிடுவோர்

 

512. புனைநர் = செய்பவர்கள்

 

513. கலிங்கம் = ஆடை; பகர்நர் = விற்கும் வணிகர்

 

514. கொண்மர் = கொள்பவர்கள்; வம்பு = கச்சு, நூற்கயிறு, பிணிக்கை; முடிநர் = கட்டுபவர்

 

516. செய்தி = தொழில்

 

517. நுழை = நுண்மை

 

518. கண்ணுள் வினைஞர் = ஓவியர்

 

519. அவிர் = ஒளி;அறல் = கருமணல்

 

520. மடி = மடிப்பு

 

521. கம்மியர் = நெசவாளர்

 

523. கோடியர் = கூத்தர்; கடும்பு = சுற்றம்

 

527. சேறு = பலாச்சுளையிலிருந்து வடியும் தேன்

 

530. கொண்டல் = மேகம், மழை; கவினி = அழகுற்று

 

531.முறி = தளிர், கொழுந்து;அடகு = இலை (கீரை)

 

532. அமிர்து = தேவர்களின் உணவு; கடிகை = கற்கண்டு

 

535. இன்சோறு = பால்சோறு

 

பதவுரை:

511. கோடு போழ் கடைநரும் திருமணி குயினரும் = சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளில் துளையிடுவாரும்,

 

512. சூடுறு நன்பொன் சுடர் இழை புனைநரும் = சூடான நல்ல பொன்னை விளங்கும் அணிகலன்களாகச் செய்வோரும்,

 513. பொன்னுரை காண்மருங் கலிங்கம் பகர்நரும் = பொன்னை உரைத்து, அதன் மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும்,

514. செம்புநிறை கொண்மரும் வம்புநிறை முடிநரும் = செம்பை நிறுத்து வாங்குபவர்களும், வேலையை முடித்து வீடு திரும்புவதால்  மூட்டைகளை கயிறுகளால் இறுகக் கட்டுவோரும்,

515. பூவும் புகையும் ஆயும் மாக்களும் = பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும்,

516. எவ்வகைச் செய்தியும் உவமம் காட்டி = பல வகையாகச் செய்யப்பட்ட பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டி,

517-518. நுண்ணிதின் உணர்ந்த நுழைந்த நோக்கின் கண்ணுள் வினைஞரும் பிறரும் கூடி =  எல்லவற்றையும் நுண்மையாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய ஓவியரும், பிறரும் கூடி,

519. தெண் திரை அவிர் அறல் கடுப்ப ஒண்பல் = தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல,

520. குறியவும் நெடியவும் மடி தரூஉ விரித்து = சிறியதும் பெரியதுமான மடிப்பு உடைய துணிகளைக் கொண்டுவந்து விரித்து,     

521. சிறியரும் பெரியரும் கம்மியர் குழீஇ = சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு,

522. நால்வேறு தெருவினும் கால் உற நிற்றர = நான்கு  தெருக்களிலும் (ஒருவர் காலொடு ஒருவர்)கால் நெருங்க நிற்க,

523.. கொடும்பறைக் கோடியர் கடும்புடன் வாழ்த்தும் = வளைந்த கண்களைக்கொண்ட பறையினையுடைய கூத்தர்கள் சுற்றத்தாரோடு சேர்ந்துவந்து  வாழ்த்தும்,

524. தண் கடல் நாடன் ஒண் பூங்கோதை = குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனம்பூ மாலை அணிந்த சேரனுடைய,

525. பெருநாள் இருக்கை விழுமியோர் குழீஇஅரசவையில் சிறந்த அறிஞர்களெல்லாம் கூடி,

526. விழைவு கொள் கம்பலை கடுப்பப் பலவுடன்  = விருப்பத்தோடு  அவர்கள் எழுப்பும் ஆரவாரத்தை ஒப்ப, பலவுடன்,

527. சேறு நாற்றமும் பலவின் சுளையும் = சாறும், மணமும் (கொண்ட)பலாப்பழத்தின் சுளைகளையும்,

528. வேறுபடக் கவினிய தேமாங் கனியும் = வெவ்வேறு விதமான, அழகிய மாம்பழங்களையும்,

529. பல்வேறு உருவிற் காயும் பழனும் = பலவிதமான, வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும் பழங்களையும்,

530. கொண்டல் வளர்ப்பக் கொடி விடுபு கவினி  = மழை வளத்தால் தழைத்துக்  கொடிவிட்டு அழகுடன்,

531. மென்பிணி அவிழ்ந்த குறு முறி அடகும் = மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும்,

532. அமிர்து இயன்றன்ன தீம்சேற்றுக் கடிகையும் = அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும்,

533. புகழ்படப் பண்ணிய பேர் ஊன் சோறும் = புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும்,

534. கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும் = கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற உண்ணும் பொருட்களையும்,

535. இன்சோறு தருநர் பல்வயின் நுகர = பால்சோற்றைத் தந்து உண்ணச் செய்பவர்கள் (செய்யும் ஆரவாரம் மதுரையில் நிறைந்திருக்கும்)      

கருத்துரை:

சங்கினை அறுத்துக் கடைவாரும், அழகிய மணிகளில் துளையிடுவாரும், சூடான நல்ல பொன்னை விளங்கும் அணிகலன்களாகச் செய்வோரும், பொன்னை உரைத்து, அதன் மாற்றைக் காண்பாரும், துணிகளை விற்பாரும், செம்பை நிறுத்து வாங்குபவர்களும், வேலை முடித்து வீடு திரும்புவதால் தம் மூட்டைகளை கயிறுகளால் இறுகக் கட்டுவோரும், பூக்களையும் சாந்தினையும் நன்றாக ஆய்ந்து விற்பாரும், பல வகையாகச் செய்யப்பட்ட பொருள்களையும் ஒப்பிட்டுக் காட்டி, எல்லாவற்றையும் நுண்மையாக உணர்ந்த கூரிய அறிவினையுடைய ஓவியரும், பிறரும் கூடி, தெளிந்த ஓடைநீரில் பளபளக்கும் கருமணலை ஒப்ப, ஒளிருகின்ற பற்பல, சிறியதும் பெரியதுமான மடிப்பு உடைய துணிகளைக் கொண்டுவந்து விரித்து, சிறியோரும் பெரியோருமாகிய நெசவாளர்கள் திரண்டு, நான்கு  தெருக்களிலும் (ஒருவர் காலொடு ஒருவர் கால்) நெருங்கி நிற்க, வளைந்த கண்களைக்கொண்ட பறையினையுடைய கூத்தர்கள் சுற்றத்தாரோடு சேர்ந்துவந்து  வாழ்த்தும், குளிர்ந்த கடல் சேர்ந்த நாட்டையுடையனாகிய, ஒளிரும் பனம்பூ மாலை அணிந்த சேரனுடைய, அரசவையில் சிறந்த அறிஞர்களெல்லாம் கூடி, விருப்பத்தோடு  எழுப்பும் ஆரவாரத்தைப் போல், பல ஆரவாரத்துடன், சாறும், மணமும் கொண்ட பலாப்பழத்தின் சுளைகளையும், வெவ்வேறு விதமான, அழகிய மாம்பழங்களையும், பலவிதமாக  வேறுபட்ட வடிவினையுடைய காய்களையும், பழங்களையும், மழை வளத்தால் தழைத்துக்  கொடிவிட்டு அழகுபெற்று, மெல்லிய சுருள் விரிந்த சிறிய கொழுந்துகளையுடைய கீரைகளையும், அமிழ்தினால் செய்தது போன்ற இனிய சாற்றையுடைய கற்கண்டுத்துண்டுகளையும், பலரும் புகழ்ந்து கூறுமாறு சமைத்த பெரிய இறைச்சிகள் கலந்த சோற்றையும், கீழே போகுமாறு வளர்ந்த கிழங்குடன், பிற உண்ணும் பொருட்களையும், பால்சோற்றைத் தந்து பிறரை உண்ணச் செய்பவர்கள் செய்யும் ஆரவாரம் மதுரையில் நிறைந்திருக்கும்.

 

 

 

அல்லங்காடியின் ஆரவாரம்


        வால் இதை எடுத்த வளிதரு வங்கம்
       பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து
       ஒல்லென் இமிழிசை மானக் கல்லென
       நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப்
       பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை ஓதம் . .            540

       இருங்கழி மருவிப் பாயப் பெரிது எழுந்து
       உருகெழு பானாள் வருவன பெயர்தலின்
       பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே

       அல் அங்காடி அழிதரு கம்பலை


அருஞ்சொற்பொருள்:

536.  வால் = நன்மை, வெண்மை; இதை = பாய்;வளி = காற்று;  வங்கம் = மரக்கலம்

 

537. இழிதரும் = எடுத்துச் செல்லும்

 

538. மான = போல

 

539. நனந்தலை = அகன்ற இடம்; வினைஞர் = வணிகர்; மறுகுதல் = உலாவுதல், கலங்குதல்

 

540. குட்டம் =ஆழம்; ஓதம் = கடலலை

 

541. இருங்கழி = கரிய கழி; மருவி = தழுவி

 

542. உரு = அச்சம்; பானாள் = நள்ளிரவு

 

544. அழிதரு = பெருகுதல் (மிகுதியாதல்); கம்பலை = ஆரவாரம்

 

பதவுரை

536. வால் இதை எடுத்த வளிதரு வங்கம் = வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள் கொணர்ந்த,

 

537. பல்வேறு பண்டம் இழிதரும் பட்டினத்து = பலவகையான சரக்குகள் (பல நாடுகளிலிருந்து  வந்த சரக்குகள்) வந்திறங்கும் பட்டினத்துக் கடற்கரையில்,

538. ஒல்லென் இமிழிசை மானக் கல்லென = ஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போல், கல்லென்ற முழக்கத்தோடு,

539. நனந்தலை வினைஞர் கலம் கொண்டு மறுகப் = அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் (இங்குச் செய்த)அணிகலன்களை (வாங்கி)எடுத்துச்செல்ல,

540. பெருங்கடற் குட்டத்துப் புலவுத்திரை ஓதம்  = பெரிய கடலின் ஆழத்திலிருந்து வரும் புலால் நாறும் அலைகளின் எழுச்சி,

541. இருங்கழி மருவிப் பாயப் பெரிது எழுந்து = கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து,

542. உருகெழு பானாள் வருவன பெயர்தலின் = அச்சம் பொருந்திய நள்ளிரவில் பாய்ந்து மீள்வதால்,

543. பல்வேறு புள்ளின் இசை எழுந்தற்றே = பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போன்றது,

544. அல் அங்காடி அழிதரு கம்பலை = அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம்,

கருத்துரை:

வெண்மையான பாய் விரித்த, காற்றுக் கொண்டுவந்த மரக்கலங்கள் கொணர்ந்த, பலவகையான சரக்குகள் (பல நாடுகளிலிருந்து  வந்த சரக்குகள்) வந்திறங்கும் பட்டினத்துக் கடற்கரையில், ஒல்லென முழங்குகின்ற ஓசையைப் போல், கல்லென்ற முழக்கத்தோடு, அகன்ற இடத்தையுடைய (பிறநாட்டு)வணிகர் இங்குச் செய்த அணிகலன்களை வாங்கி எடுத்துச்செல்ல, பெரிய கடலின் ஆழத்திலிருந்து வரும் புலால் நாறும் அலைகளின் எழுச்சி, கரிய கழியில் தழுவிப் பாய்வதற்காக மிகுந்து எழுந்து, அச்சம் பொருந்திய நள்ளிரவில் பாய்ந்து மீள்வதால், பல வேறுபட்ட பறவைகளின் ஓசை எழுந்ததைப் போல் அந்திக்காலத்துக் கடையில் மிகுதியைத் தருகின்ற ஆரவாரம் இருக்கும்.

 

மதுரை நகரத்தில் மாலைக்கால வரவும் நிகழ்ச்சிகளும்

ஒண்சுடர் உருப்பொளி மழுங்கச் சினம் தணிந்து   545


சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு
குடமுதல் குன்றம் சேரக் குணமுதல்
நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு
பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர்
காதல் இன்துணை புணர்மார் ஆய் இதழ்த் . . .     550

தண் நறுங் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ
நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைய
நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக
மென் நூல் கலிங்கம் கமழ்புகை மடுப்பப்
பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர்          555


நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர்
எல்லை எல்லாம் நோயொடு புகுந்து
கல்லென் மாலை நீங்க
 . . . .

 

அருஞ்சொற்பொருள்:

545. உருப்பு = வெப்பம்

 

549. நயந்தோர் = விரும்பியோர்

 

550. புணர்மார் = கூடுமாறு

 

551. கழுநீர் = செங்கழுநீர்; துணைத்தல் = தொடுத்தல்

 

552. விரை = கலவைச்சாந்து, வாசனைப் பண்டம்

 

553. நரந்தம் = கஸ்தூரி; மறுக் = அரைக்க

 

554. கலிங்கம் = ஆடை; மடுப்ப = ஊட்ட

 

555. பிணை = பெண்மான்

 

556. கொளீஇ = கொளுத்தி

 

பதவுரை:

545. ஒண் சுடர்பு ஒளி மழுங்கச் சினம் தணிந்து = ஒளி பொருந்திய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து,

 

546. சென்ற ஞாயிறு நன்பகற் கொண்டு = (மேற்றிசையில்)சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதைக் கொண்டு,

547. குடமுதல் குன்றம் சேரக் குணமுதல் = மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கீழ் வானத்தில்,

548. நாள் முதிர் மதியம் தோன்றி நிலா விரிபு =  (பதினாறு) நாள் முதிர்ந்த நிறைமதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுவதால்,

549. பகல் உரு உற்ற இரவு வர நயந்தோர் = பகலை ஒத்த இராக்காலம் வருவதை விரும்பிய,

550. காதல் இன்துணை புணர்மார் ஆய் இதழ் = தாம் காதலிக்கும் தம்முடைய இனிய துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய,

551. தண் நறுங் கழுநீர் துணைப்ப இழை புனையூஉ = குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்களை மாலையாகத் தொடுத்து, அணிகளை அணிந்து,

552. நல் நெடுங் கூந்தல் நறுவிரை குடைய = நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க,

553. நரந்தம் அரைப்ப நறுஞ்சாந்து மறுக = கத்தூரியை அரைத்து, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க,

554. மென் நூல் கலிங்கம் கமழ்புகை மடுப்ப = மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்ட,

555. பெண் மகிழ்வுற்ற பிணைநோக்கு மகளிர் = பெண்டிரே விரும்பும் பெண்மானைப் போன்ற  நோக்கினையுடைய மகளிர்,

556. நெடுஞ்சுடர் விளக்கம் கொளீஇ நெடுநகர் = நீண்ட சுடர்விடும் விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின்,

557. எல்லை எல்லாம் நோயொடு புகுந்து = எல்லைக்குட்பட்ட இடமெல்லாம் தம் கணவரோடு கூடுவதை விரும்பிய மளிர்க்கு நோயைச் செய்தலோடே புகுந்து,

558. கல்லென் மாலை நீங்க = கல்லெனும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்க,

கருத்துரை:

ஒளி பொருந்திய கதிர்களின் வெப்பமும் ஒளியும் மழுங்க, சினம் குறைந்து, மேற்குத்திசையில் சென்ற ஞாயிறு நல்ல பகற்பொழுதை கொண்டு, மேற்கு அடிவானத்தில் மலையினைச் சேர, கீழ் வானத்தில், (பதினாறு) நாள் முதிர்ந்த நிறைமதி எழுந்து, நிலவுக்கதிர் பரவுவதால், பகலை ஒத்த இராக்காலம் வருவதை விரும்பிய மகளிர் தாம் காதலிக்கும் தம்முடைய இனிய துணைவரைக் கூடும்பொருட்டு, ஆராய்ந்த இதழ்களையுடைய, குளிர்ந்த நறிய செங்கழுநீர் மலர்களை மாலையாகத் தொடுத்து, அணிகளை அணிந்து, நல்ல நீண்ட கூந்தலில் மணமிக்க நறுமணத் தைலத்தை ஊடுருவித்தேய்க்க, கத்தூரியை அரைக்க, நறிய சந்தனத்தைத் தேய்த்துக் கூழாக்க, மெல்லிய நூலால் செய்த ஆடைகளுக்கு மணக்கின்ற அகிற்புகையை ஊட்டி, பெண்டிரே விரும்பும் பெண்மானைப் போன்ற  நோக்கினையுடைய மகளிர், நீண்ட சுடர்விடும் விளக்கினை ஏற்றி, பெரிய ஊரின், எல்லைக்குட்பட்ட இடமெல்லாம், தம் கணவரோடு கூடுவதை விரும்பிய மகளிர்க்கு காதல்நோயைச் செய்யுமாறு புகுந்து, கல்லெனும் ஆரவாரத்தையுடைய மாலைக்காலம் நீங்கி,  தங்கள் கணவன் வரவுக்குக் காத்திருந்தனர்.

 

மதுரை நகரத்தில் முதல் யாமத்தில் குலமகளிர் செயல்

……. …. ….    …….              நாணுக்கொள
ஏழ் புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ்
தாழ்பு அயல் கனை குரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து . .560

       வீழ்துணை தழீஇ . . . .


அருஞ்சொற்பொருள்:

559. ஏழ் = ஏழு; புணர் = கூடிய; தொடை = யாழ் முதலியவற்றின் நரம்பு; சீறியாழ் = சிறிய யாழ்

 

560. தாழ்பு = தாழ்ந்து; கடுப்ப = போல

 

561. வீழ்தல் = விரும்புதல்; வியல் = அகன்ற; விசும்பு = ஆகாயம்

 

பதவுரை: 

558. நாணுக்கொள = நாணம் கொண்டு,

 

559. ஏழ் புணர் சிறப்பின் இன்தொடைச் சீறியாழ் = இசை ஏழும் கூடிசிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை,

560. தாழ்பு அயல் கனை குரல் கடுப்பப் பண்ணுப் பெயர்த்து = இசைக்கேற்ப இயைந்த தனது இனிய குரைலைப் போல பண்களை மாறிமாறி இசைத்து (சுருதி கூட்டி),

561. வீழ்துணை தழீஇ வியல் விசும்பு கமழ = தம்மை விரும்புகின்ற துணைவரை முயங்கி, அகன்ற விண்ணில் சென்று மணக்கும்படி,

கருத்துரை:

தங்கள் கணவர் வந்தவுடன், நாணம் கொண்டு, இசை ஏழும் கூடிசிறப்பினையுடைய இனிய நரம்பினையுடைய சிறிய யாழை, இசைக்கேற்ப இயைந்த தனது இனிய குரலைப் போல பண்களை மாறிமாறி இசைத்து, சுருதி கூட்டித் தம்மை விரும்புகின்ற துணைவரைத் தழுவி இருந்தனர்.

 

மதுரை நகரத்தில் முதல் யாமத்தில் பரத்தையரின் செயல்கள்

 

. . . . . . . . . . .  வியல் விசும்பு கமழ

நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு
ஆய் கோல் அவிர்தொடி விளங்க வீசிப்
போது அவிழ் புதுமலர் தெரு உடன் கமழ
மேதகு தகைய மிகுநலம் எய்திப்                 565


பெரும் பல்குவளைச் சுரும்புபடு பன்மலர்
திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்துக்
கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து

நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி
மாயப்பொய் பல கூட்டிக் கவவுக்கரந்து            570


சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த
இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி
நுண் தாது உண்டு வறும் பூத் துறக்கும்
மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர்
நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து                575


பழம் தேர் வாழ்க்கைப் பறவை போலக்
கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய
மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல்இல்
ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர்
ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி . . .    580

நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும்
வானவ மகளிர் மானக் கண்டோர்
நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர்
யாம நல்யாழ் நாப்பண் நின்ற
முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப்           585


பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென் தளிர்க்
கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர
நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி
மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயரக்

 

அருஞ்சொற்பொருள்:

561. வியல் விசும்பு கமழ = அகன்ற ஆகாயத்தில் சென்று மணக்கும்படி

 

562. கோதை = மாலை; பிறக்கு = பின்புறம் (கொண்டை)

 

563. ஆய் = அழகிய; கோல் = திரட்சி; அவிர் = விளங்குகின்ற; தொடி = வளையல்

 

564. போது = மொட்டு

 

565. மேதகு = மேன்மையான

 

566. சுரும்பு = வண்டு

 

567. மோந்தன்ன = மோந்து (முகர்ந்து) பார்த்ததைப் போல

 

568. கொண்டல் = மேகம், மழை; புதல் = புதர்; மான = போல; வேய்ந்து = சூடி

 

569. நுண் = நுண்மையான; பூண் = அணிகலன்; ஆகம் = மார்பு; முயங்குதல் = தழுவுதல்

 

570. கவவு = விருப்பம்; கரத்தல் = மறைத்தல்

 

572. தப = கெட; வாங்கி = கவர்ந்து

 

573. துறக்கும் = விலகும்

 

574.  மான = போல

 

575. ஏமாப்ப = வருந்த (கலக்கமுறும்படி)

 

577. மேஎய = பொருந்தியுள்ள

 

579. அவிர் = ஒளி; பாசிழை = பசுமையான அணிகலன்கள்

 

580. துவன்றி = நெருங்கி

 

582. மான = போல

 

583. கொண்டி மகளிர் = விலை மகளிர்

 

584. யாமம் = நள்ளிரவு; நாப்பண் = நடுவே

 

585. குண்டு நீர் = ஆழமான நீர்

 

586. குவவு மணல் = குவிந்த மணல்; முனைஇ = வெறுத்து

 

587. கொழுதி = பறித்து; மேவருதல் = பொருந்துதல்

 

588. வடிம்பு = விளிம்பு; அடைச்சி = செருகி

 

589. பொய்தல் = மகளிர் விளையாட்டு

 

பதவுரை:

562. நீர் திரண்டன்ன கோதை பிறக்கு இட்டு = நீர் திரண்டாற் போன்ற வெண்மையான  பூக்களால் செய்த மாலைகளை கொண்டையில் சூடி,

 

563. ஆய் கோல் அவிர்தொடி விளங்க வீசி = அழகிய திரண்ட ஒளிரும் வளையல்கள் பளபளக்கக் கையை வீசி நடந்து,

564. போது அவிழ் புதுமலர் தெரு உடன் கமழ = மொட்டுக்கள் மலரும் புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ,

565. மேதகு தகைய மிகுநலம் எய்தி = பெருமை தருகின்ற அழகினையுடைய மிகுதியாக நன்மையுண்டாக ஒப்பனைசெய்து,

566. பெரும் பல்குவளைச் சுரும்புபடு பன்மலர் = பல பெரிய செங்கழுநீர்ப்  பூக்களில் வண்டுகள் மொய்க்கும் பல பூக்களை,

567. திறந்து மோந்தன்ன சிறந்து கமழ் நாற்றத்து = கையால் திறந்து மலரச்செய்து மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்து மணக்கும் வாசனையுடன்,

568. கொண்டல் மலர்ப் புதல் மானப் பூ வேய்ந்து = மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல  மற்ற பூக்களையும் சூடி,

569. நுண் பூண் ஆகம் வடுக்கொள முயங்கி = தம்மைப் புணர்வோரின் நுண்ணிய அணிகலன்களையுடைய மார்பைத் தம் மார்பில் வடுப்படும்படியாகத் தழுவி,

570. மாயப்பொய் பல கூட்டிக் கவவுக்கரந்து = வஞ்சனையுடைய பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, தம் மனதில் உள்ள எண்ணத்தை மறைத்து,

 

571. சேயரும் நணியரும் நலன் நயந்து வந்த = தொலைவிலுள்ளாரும் அருகிலுள்ளாரும்  தம் அழகை விரும்பி வந்த,

572. இளம்பல் செல்வர் வளம் தப வாங்கி = இளவயதினராகிய பல செல்வந்தர்களை (அவருடைய)செல்வம் எல்லாம் கெடும்படியாகக் கவர்ந்துகொண்டு,

573. நுண் தாது உண்டு வறும் பூத் துறக்கும் = பூவின் நுண்ணிய தாதை உண்டு, பின்னர் தாதற்ற வறிய பூவை விட்டு விலகும்,

574. மென்சிறை வண்டின மானப் புணர்ந்தோர் = மெல்லிய சிறகையுடைய வண்டுகளைப் போல், தம்மை அனுபவித்தவர்களின்,

575. நெஞ்சு ஏமாப்ப இன்துயில் துறந்து = நெஞ்சு கலக்கமுறும்படி இனிய தூக்கத்தைக் கைவிட்டு,

576. பழம் தேர் வாழ்க்கைப் பறவை போல = பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல,

577. கொழுங்குடிச் செல்வரும் பிறரு மேஎய = வளவிய குடியிற் பிறந்செல்வரும், பிறரும் தரும் பொருந்தியுள்ள,

578. மணம் புணர்ந்து ஓங்கிய அணங்குடை நல்இல் = புதிய மணத்தால் உயர்ச்சிபெற்ற, இல்லுறை தெய்வங்களையுடைய நல்ல இல்லங்களில்,சென்று,

579. ஆய்பொன் அவிர்தொடிப் பாசிழை மகளிர் = ஆராய்ந்த பொன்னாலான ஒளிரும் வளையல்களையும் சுமையான  அணிகளையும் உடைய மகளிர்,

580. ஒண்சுடர் விளக்கத்துப் பலருடன் துவன்றி = ஒளிரும் சுடரையுடைய விளக்கின் ஒளியில் பலரும் சேர நெருங்கி,

581. நீல் நிற விசும்பில் அமர்ந்தனர் ஆடும் = நீல நிறத்தையுடைய வானத்தின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும்,

582. வானவ மகளிர் மானக் கண்டோர் = தெய்வமகளிர்போல, (தம்மைக்) கண்டோருடைய,

583. நெஞ்சு நடுங்குறூஉக் கொண்டி மகளிர் = நெஞ்சு நடுக்கமடையும் வரைவின் மகளிர்,

584. யாம நல்யாழ் நாப்பண் நின்ற = நள்ளிரவுக்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே, அவற்றின் இசையோடு இயைந்து நின்ற,

585. முழவின் மகிழ்ந்தனர் ஆடிக் குண்டுநீர்ப் = முழவின் முழக்கத்திற்கு மகிழ்ந்தனராய் ஆடி, ஆழமான நீரினையுடைய,

586. பனித்துறைக் குவவுமணல் முனைஇ மென் தளிர்க் = குளிர்ந்த நீர்த்துறையிடத்துக் குவிந்த மணலில் ஆடி, அதன் பின் அதை வெறுத்து, மெல்லிய தளிர்களைக்,

587. கொழுங்கொம்பு கொழுதி நீர்நனை மேவர = கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரில் உள்ள அரும்பொடு சேர்த்துக் கட்டிய,

588. நெடுந்தொடர்க் குவளை வடிம்புற அடைச்சி = நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை விளிம்பிலே செருகி,

589. மணம் கமழ் மனைதொறும் பொய்தல் அயரக் = மணம் கமழும் (தம்)இல்லங்களிலெல்லாம் விளையாடுதலைச் செய்ய,

 

கருத்துரை:

அகன்ற விண்ணில் மணக்கும்படி, நீர் திரண்டாற் போன்ற  பூக்களால் செய்த மாலையைக் கொண்டையில் சூடி, அழகிய திரண்ட ஒளிரும் வளையல்கள் பளபளக்கக் கையை வீசிப் பரத்தையர் நடப்பார்கள். மொட்டுக்கள் மலரும் புதிய பூக்கள் தெருவெங்கும் கமழ, மீண்டும் அழகு மிகுதியாகுமாறு ஒப்பனைசெய்து, பல பெரிய குவளை மலர்களையும்,  வண்டுகள் மொய்க்கும் பல பூக்களையும், கையால் திறந்து மலரச்செய்து மோந்து பார்த்ததைப் போன்ற மிகுந்த மணக்கும் வாசனையுடன், மழைக்கு மலர்ந்த மலர்களின் குவியலைப் போல மற்ற பூக்களையும் சூடி, நுண்ணிய அணிகலன்களை அணிந்த பரத்தையர், தம் மார்பில் வடுப்படும்படியாக தங்கள் அழகை விரும்பும் இளவயதினராகிய பல செல்வந்தர்களைத் தழுவுவார்கள். அவர்களிடம் வஞ்சனையுடைய பொய்வார்த்தை பலவற்றைப் பேசி, தம் மனதில் உள்ள எண்ணத்தை மறைத்து, அவருடைய செல்வம் எல்லாவற்றையும் கவர்ந்துகொள்வார்கள். பூவின் நுண்ணிய தாதை உண்டு, பின்னர் தாதற்ற வறிய பூவை விட்டு விலகும், மெல்லிய சிறகையுடைய வண்டுகளைப போல்தம்மை அனுபவித்தவர்களின், நெஞ்சு கலக்கமுறும்படி அவர்களை விட்டு விலகுவார்கள். பழத்தைத் தேடியலையும் வாழ்க்கையையுடைய பறவைகளைப் போல, புதிதாகத் திருமணம் நிகழ்ந்த செல்வந்தர்களின் நல்ல இல்லங்களில் தெய்வங்களுக்குச் சிறப்புச் செய்யும்பொழுது, தம்மோடு உறவுகொள்ள விரும்புவோரைத் தேடிச் செல்வார்கள். அழகிய பொன்னால் செய்த, விளங்குகின்ற வளையல்களையும் புதிய அணிகலன்களையும் அணிந்த பெண்கள், ஒளியுடைய சுடரின் ஒளியில் பலரும் ஒருசேர நெருங்கி, நீல நிறமுடைய வானின்கண் நெஞ்சமர்ந்து விளையாடும் மகளிர்போலத் தம்மைக் கண்டோருடைய, நெஞ்சு நடுக்கமடையச் செய்யும்  பரத்தையர், நள்ளிரவுக்குரிய நல்ல யாழ்களுக்கு நடுவே, அவற்றின் இசையோடு இயைந்த முழவின் முழக்கத்திற்கு ஏற்ப ஆடி, ஆழமான நீரினையுடைய, பனித்துறையின் குளிர்ந்த நீர்த்துறையிடத்துக் குவிந்த மணலில் ஆடிப் பின்னர் அதை வெறுத்து, மெல்லிய தளிர்களைக், கொழுவிய கொம்புகளிலிருந்து கொய்து, நீரில் உள்ள அரும்பொடு சேர்த்துக் கட்டிய,  நெடிய தொடராகவுள்ள குவளை மலர்களை விளிம்பிலே செருகி, மணம் கமழும் இல்லங்களிலெல்லாம் பொய்தல் என்னும் விளையாட்டை விளையாடுவர்.

 

ஓண நன்னாளில் யானைப்போர், பிள்ளைகளைப் பெற்ற மகளிர் நீராட,ல், கடுஞ்சூல் மகளிரின் கடவுள் வழிபாடு


கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்         590

மாயோன் மேய ஓண நன்னாள்
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை
மறம் கொள் சேரி மாறுபொரு செருவில்
மாறாது உற்ற வடுப்படு நெற்றிச்                  595


சுரும்பார் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட
நெடுங்கரைக் காழக நிலம் பரல் உறுப்பக்
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதரக்
கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து . . .           600

பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊறப்
புலவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு
வளமனை மகளிர் குளநீர் அயரத்
திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணிக்
குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி           605

நுண்ணீர் ஆகுளி இரட்டப் பலவுடன்
ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு
நல்மா மயிலின் மென்மெல இயலிக்
கடுஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது
பெருந்தோள் சாலினி மடுப்ப  . . .610

அருஞ்சொற்பொருள்:

590. கணம் = கூட்டம் ; அவுணர் = அசுரர்; கட்ந்த = வென்ற;  பொலன் = பொன்; தார் = மாலை

 

591. மாயோன் = திருமால்; மேய = பிறந்த; ஓண = திருவோண நட்சத்திரத்தில்

 

592. கோணம் = தோட்டி (அங்குசம்)

 

593. சாணம் = தழும்பு; சமம் = போர்; தடக்கை = பெரிய கை

 

594. மறம் = வீரம்; செரு = போர்

 

596. சுரும்பு = வண்டு; கண்ணி = போர்ப்பூ; புகலுதல் = விரும்புதல்

 

598. காழகம் = கருமை; உறுப்ப = உறுத்த

 

599. தேறல் = கள்ளின் தெளிவு

 

601. பணைத்து ஏந்து இளமுலை = பருத்து உயர்ந்த இளமுலை; அமுதம் = பால்; ஊற = சுரக்க

 

602. புலவு = புலால் நாற்றம்; புனிறு = ஈன்றணிமை (பிள்ளை பெற்ற தீட்டு)

 

604. திவவு = யாழில் உள்ள வார்க்கட்டு

 

606. ஆகுளி = சிறுபறை; இரட்ட = ஒலிக்க

 

607. மடை = சோறு

 

608.இயலி =இயங்கி;

 

609. சூல் = கர்ப்பம்

 

610. சாலினி =தேவராட்டி (தெய்வம் ஏறிய பெண்); மடுத்தல் = உண்ணுதல்

 

பதவுரை:

590. கணங்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார் =  கூட்டமாக இருந்த அசுரர் கூடங்களைக் கொன்ற,பொன்னால் செய்த மாலையையுடைய,

591. மாயோன் மேய ஓண நன்னாள் = திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில்,     

592. கோணம் தின்ற வடு ஆழ் முகத்த = வளைந்த வாள் போன்ற ஆயுதத்தால் வெட்டின வடு அழுந்தின முகத்தை உடையனவும்,

593. சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை = தழும்பேறி, போரைத் தாங்கும் பெரிய கையையும்,

594. மறம் கொள் சேரி மாறுபொரு செருவில் = வீரத்தைத் தம்மிடத்தே கொண்ட மறவர்கள் வாழும் சேரிகளில் வாழ்பவர்கள்  தம்முள் மாறுபட்டுச் செய் போரில்,

595. மாறாது உற்ற வடுப்படு நெற்றி = ஆறாத தழும்பையுடைய நெற்றியையுடைய,

596. சுரும்பார் கண்ணிப் பெரும் புகல் மறவர் = வண்டுகள் நிறைந்த போர்ப்பூவையும், யானைப்போரில் வெல்லுவதில் பெரிய விருப்பத்தையுமுடைய மறவர்கள்,

597. கடுங்களிறு ஓட்டலின் காணுநர் இட்ட = கடிய களிறுகளை  ஒன்றோடொன்று போரிடுமாறு செலுத்துவதால், அந்த யானைப்போரைக காணவந்தவர்கள் அங்குள்ள மக்கள் மேல் யானைகள் வராமல் இருக்க இட்ட,    

598. நெடுங்கரைக் காழக நிலம் பரல் உறுப்பக் = நீண்ட கரையாகிய கரிய இடத்தில் பரல் கற்கள் கால்களை உறுத்த

599. கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர = கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிகுந்து திரிய,

600. கணவர் உவப்பப் புதல்வர்ப் பயந்து = தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று,

601. பணைத்து ஏந்து இளமுலை அமுதம் ஊற = பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,

602. புவுப் புனிறு தீர்ந்து பொலிந்த சுற்றமொடு = புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு,

603. வளமனை மகளிர் குளநீர் அயர = வளப்ப மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்து,

604. திவவு மெய்ந்நிறுத்துச் செவ்வழி பண்ணி = இறுகக் கட்டிய நரம்புகளையுடைய யாழை மீட்டி, செவ்வழிப் பண்பாடி,

605. குரல் புணர் நல்யாழ் முழவோடு ஒன்றி = குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி,

606. நுண்ணீர் ஆகுளி இரட்டப் பலவுடன் = நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, பல பொருள்களோடு,

607. ஒண்சுடர் விளக்கம் முந்துற மடையொடு = ஒளிரும் சுடரையுடைய விளக்கை ஏற்றி, உண்டிகளோடு,

608. நல்மா மயிலின் மென்மெல இயலிக் = நல்ல பெரி மயில்போல மெள்ள மெள்ள நடந்து,

609-610. கடுஞ்சூல் மகளிர் பேணிக் கைதொழுது பெருந்தோள் சாலினி மடுப்ப = முதன்முதலாகக் கருவுற்ற  மகளிர் தெய்வத்தைக் கைகுவித்துத் தொழுது,

பெரிய தோள்களையுடைய தேவராட்டியுடன் இருந்து தெய்வம் தொழுவர்.      

கருத்துரை:

அசுரர் கூட்டங்களைக் கொன்ற, பொன்னால் செய்த மாலையையுடைய, திருமால் பிறந்த திருவோணமாகிய நல்ல நாளில் விழா நடைபெறும்.  அங்கு, வீரத்தைத் தம்மிடத்தே கொண்ட மறவர்கள் வாழும் சேரிகளில் வாழ்பவர்கள்  தம்முள் மாறுபட்டுச் செய் போரில், வண்டுகள் நிறைந்த போர்ப்பூவை விரும்பிச் சூடிய  மறவர்கள், வளைந்த வாள் போன்ற ஆயுதத்தால் வெட்டின வடு அழுந்தின முகமும், தழும்பேறி, போரைத் தாங்கும் துதிக்கையும், ஆறாத தழும்பையுடைய நெற்றியையுடைய, கடிய களிறுகளை  ஒன்றோடொன்று போரிடுமாறு செலுத்துவதால், அதைக் காணவந்தோர் இட்டுச்செய்த, நெடிய கரையாகிய கரிய இடமுடைய நிலத்தின்கண் பரற்கற்கள் தம் கால்களை உறுத்தும்படி, கடிய கள்ளினது தெளிவை உண்டு களிப்பு மிகுந்து திரிவர்.  தம் கணவர் மகிழும்படி குழந்தையைப் பெற்று, பருத்து உயர்ந்த இளைய முலை பால் சுரக்க,  புலால் நாற்றமுள்ள ஈன்றணிமை தீர்ந்து பொலிவுற்ற சுற்றத்தாரோடு, வளப்பம் மிக்க செல்வத்தையுடைய இல்லத்து மகளிர் குளத்து நீரில் குளித்து நீராடுவர். இறுகக் கட்டிய நரம்புகளையுடைய யாழை மீட்டி, செவ்வழிப் பண்பாடி, குரல் என்னும் நரம்பு கூடின நல்ல யாழுடன் முழவும் பொருந்தி, நுண்ணிய தன்மையுள்ள சிறுபறை ஒலிப்ப, ஒளிரும் சுடரையுடைய விளக்கை ஏற்றி, தெய்வத்துக்குப் படைக்கும் உண்டிகளோடு, நல்ல பெரி மயில்போல மெள்ள மெள்ள நடந்து, முதன்முதலாகக் கருவுற்ற  சூல்கொண்ட மகளிர், பெரிய தோள்களையுடைய தேவராட்டியுடன் இருந்து தெய்வம் தொழுவர்.

 

சிறப்புக் குறிப்பு:

இன்று சிறப்பாகக் கேரளத்தில் கொண்டாடப்படும் ஓணத் திருவிழா பழந்தமிழகத்தில் மதுரையில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதை இப்பாடல் வரிகள் தெளிவாக எடுத்துரைக்கின்றன.

 

வேலன் வழிபாடும் குரவைக் கூத்தும், முதல் யாமம் முடிவு பெறுதல், இரண்டாம் யாம நிகழ்ச்சிகள்

    . . . . . . . . . . . . . . . . . . .    ஒருசார்                 610

அருங்கடி வேலன் முருகொடு வளைஇ                 
அரிக்கூட் இன் இயம் கறங்கநேர் நிறுத்துக்
கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின்
சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ
மன்றுதொறும் நின்ற குரவை சேரி தொறும்              615


உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ
வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப்
பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்
சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு
முந்தை யாமம் சென்ற பின்றைப் . . .                   620

பணிலங் கலி அவிந்து அடங்கக் காழ் சாய்த்து
நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர்
ஒள் இழை மகளிர் பள்ளி அயர
நல்வரி இறாஅல் புரையு மெல் அடை
அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம்                 625

கவவொடு பிடித்த வகையமை மோதகம்
தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க
விழவின் ஆடும் வயிரியர் மடியப்
பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரையப்
பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்பப் . . .                    630


அருஞ்சொற்பொருள்:

610. ஒருசார் = ஒருபக்கம்

 

611. கடி = அச்சம்; வளைஇ = வளைத்து

 

612. அரிக்கூடு இன்னியம் கறங்க = அரித்தெழுகின்ற ஓசையைக் கூட்டும் இனிய இசைக்கருவிகள் ஒலிக்க

 

613. கடம்பு = கடம்ப மரம்

 

614. சீர் = புகழ்; நெடுவேள் = முருகன்; பேணி = வழிபட்டு; தழூஉ = தழுவி; பிணையூஉ = கைகோத்து

 

615. மன்று = மன்றம் (பொதுவிட ம்); குரவை = ஒருவகைக் கூத்து

 

616. விரைஇ = கலந்து

 

617. கம்பலை = ஆரவாரம்; கொள்பு = கொண்டு

 

618. நன்னாள் = பிறந்த நாள்

 

619. ஆர்ப்பு = ஆரவாரம்

 

620. முந்தை யாமம் = (மாலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரை)

 

621. பணிலம் = சங்கு; கலி = ஒலி; காழ் = சட்டக்கால் (கடையின் தட்டியைத் தூக்கி அதைத் தாங்குமாறு நிறுத்தும் கால்)

 

622. நொடை = விலை; நவிலுதல் = கூறுதல்; மடமதர் = அழகோடு கூடிய செருக்கு

 

624. இறாஅல் = தேன் கூடு

 

625. அயிர் = கண்ட சருக்கரை (கற்கண்டு); உருப்பு = வெப்பம்; ஆடுஅமை = சமைத்த; விசயம் = பாகு

 

626. கவவு = உள்ளீடு; மோதகம் = கொழுக்கட்டை

 

627. கூவியர் = அப்பம் விற்பவர்

 

628. வயிரியர் = கூத்தர்; மடிய = உறங்க

 

629. பாடு = ஒலி; புரைய = போல

 

630. பாயல் = படுக்கை

 

பதவுரை:

611. அருங்கடி வேலன் முருகொடு வளைஇ = தாங்க முடியாத அச்சத்தைத்  தரும் வேலன் (பூசாரி) வெறியாட்டமாடிக் கேட்பவர்களை  வளைத்துக்கொண்டு,

 

612. அரிக்கூடு  இன் இயம் கறங்கநேர் நிறுத்துக் = அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, (முருகனை)முன்னிலையாக்கி,

613. கார்மலர்க் குறிஞ்சி சூடிக் கடம்பின் = கார்காலத்தில் மலரும் குறிஞ்சிப் பூவைச் சூடி, கடம்பமரத்தில்,

614. சீர்மிகு நெடுவேள் பேணித் தழூஉப் பிணையூஉ = புகழ் மிக்க முருகனை வழிபடுதலால், தழுவிக் கைகோத்து,

615. மன்றுதொறும் நின்ற குரவை சேரி தொறும் = பொதுவிடங்களிலெல்லாம் முதல் யாமத்தில்  (மாலை 6 மணி முதல் 9 மணி வரை) ,  குடியிருப்புகள்தோறும்

616. உரையும் பாட்டும் ஆட்டும் விரைஇ = புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட)கூத்துக்களும் (தம்முள்)கலந்து,

617. வேறுவேறு கம்பலை வெறிகொள்பு மயங்கிப் = வேறு வேறான ஆரவாரத்தோடு ஆவேசம்கொண்டு கலந்து,

618. பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள் = பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில்,

619. சேரி விழவின் ஆர்ப்பு எழுந்தாங்கு  = சேரிகளில் உள்ளவர்களின் விழாவில் ஆரவாரம் எழுந்தாற்போல்,

620. முந்தை யாமம் சென்ற பின்றை = முதல் யாமம் கழிந்த பிறகு ( இரவு 9 மணிக்கு மேல்),

621. பணிலங் கலி அவிந்து அடங்கக் காழ் சாய்த்து = சங்கொலிகளால் எழுந்த ஆரவாரம்  ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை நிறுத்தி,

622. நொடை நவில் நெடுங்கடை அடைத்து மடமதர் = பண்டங்களை விலைகூறி விற்கும் நெடிய கடையை அடைத்து, அழகையும் செருக்கையும்,

623. ஒள் இழை மகளிர் பள்ளி அயர = ஒளிவிடும் அணிகலன்களையும் உடைய மகளிர் தூங்கப் போக,

624. நல்வரி இறாஅல் புரையு மெல் அடை = நல்ல வரிகளையுடைய தேன்கூட்டை ஒத்த (அடையும்) அப்பமும்,

625. அயிர் உருப்பு உற்ற ஆடு அமை விசயம் = கற்கண்டோடு வெப்பமாக்கிய பாகைக் கூட்டிச் சமைத்த ,

626. கவவொடு பிடித்த வகையமை மோதகம் = உள்ளீடுகளோடு பிடித்த கொழுக்கட்டைகளையும்,

627. தீஞ்சேற்றுக் கூவியர் தூங்குவனர் உறங்க = இனிய கூழினையும் உடைய அப்ப வாணிகரும் உறங்கப் போக,

628. விழவின் ஆடும் வயிரியர் மடியப் = திருவிழாக் காலங்களில் வந்து கூத்தாடும் கூத்தர்களும் உறங்கப் போக,

629. பாடு ஆன்று அவிந்த பனிக்கடல் புரைய = ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல்போல,

630. பாயல் வளர்வோர் கண்ணினிது மடுப்ப = படுக்கையில் துயில்கொள்வோர் கண் இனிதாகத் தூங்கும் (இரண்டாம் யாமத்தில் இரவு 9 மணி முதல் 12 மணிவரை),

கருத்துரை:

தாங்க முடியாத அச்சத்தைத்  தரும் வேலன் (பூசாரி),  உனக்கு வந்துள்ள இத் துன்பம்  முருகனால் வந்தது என்று கூறி, வெறியாட்டமாடிக் கேட்பவர்களை  வளைத்துக்கொண்டு, அரித்தெழும் ஓசையையுடைய இனிய இசைக்கருவிகள் முழங்க, முருகனை முன்னிலையாக்கி, கார்காலத்தில் மலரும் குறிஞ்சிப் பூவைச் சூடி, கடம்பமரத்தில், வாழும் புகழ் மிக்க முருகனை வழிபட்டு, மகளிர் தம்முள் தழுவிக் கைகோத்து, பொதுவிடங்களிலெல்லாம் முதல் யாமத்தில்  (மாலை 6 மணி முதல் 9 மணி வரை) குரவைக் கூத்து ஆட,  குடியிருப்புகள்தோறும்  புனைந்துரைகளும் பாட்டுக்களும் (பலவகைப்பட்ட) கூத்துக்களும் கலந்து, வேறு வேறான ஆரவாரத்தோடு ஆவேசம்கொண்டு, பெரிய புகழையுடைய நன்னனுடைய பிறந்தநாளில், சேரிகளில் உள்ளவர்கள் விழாவில் ஆரவாரம் எழுந்தாற்போல், முதல் யாமம் கழிந்தது.

சங்கொலிகளால் எழுந்த ஆரவாரம்  ஒழிந்து அடங்கிக் கிடக்க, சட்டக்காலை நிறுத்தி, பண்டங்களை விலைகூறி விற்கும் நெடிய கடையை அடைத்து, அழகையும் செருக்கையும், ஒளிவிடும் அணிகலன்களையும் உடைய மகளிர் தூங்கப் போக, நல்ல வரிகளையுடைய தேன்கூட்டை ஒத்த மெல்லிய அடையையும், கற்கண்டை வெப்பமாக்கிய பாகைக் கூட்டிச் சமைத்த , உள்ளீடுகளோடு பிடித்த கொழுக்கட்டைகளையும், இனிய பாகுடன்  செய்த அப்பம் விற்பவர்களும் உறங்கப் போக, திருவிழாக் காலங்களில் வந்து கூத்தாடும் கூத்தர்களும் உறங்கப் போக, ஒலி நிறைந்து அடங்கிய குளிர்ந்த கடல்போல, படுக்கையில் துயில்கொள்வோர்  இனிதாகத் தூங்கும், இரண்டாம் யாமம் கழிந்தது.

சிறப்புக் குறிப்பு:

சங்க காலக் குறிநில மண்னர்களில் பெரும்புகழ் படைத்த நன்னன், மலைபடுகடாம் என்ற இன்னொரு பத்துப்பாட்டு நூலின் பாட்டுடைத் தலைவன் ஆவான். செங்கண்மா (இன்றைய செங்கம்) என்ற ஊரைத் தலைநகராகக்கொண்டு ஏழில்குன்றம் என்ற மலைநாட்டை நன்னன் ஆண்டான். கொடையிலும் வீரத்திலும் சிறந்த இவனுடைய பிறந்த நாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டதைப் ”பேரிசை நன்னன் பெரும்பெயர் நன்னாள்” என்ற வரி குறிப்பிடுகிறது. நற்றிணை, குறுந்தொகை, அகநானூறு, புறநானூறு ஆகிய நூல்களிலும் நன்னன் பற்றி குறிப்புகள் உள. நன்னன் என்ற பெயரில் பல மன்னர்கள் இருந்ததாகவும் கருதுவர்.

 

மூன்றாம் யாமத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகள்

பானாட் கொண்ட கங்குல் இடையது

பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல்
கூற்றக் கொல்தேர் கழுதொடு கொட்ப
இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு
கல்லும்  மரனும் துணிக்குங் கூர்மைத்            635


தொடலை வாளர் தொடுதோல் அடியர்
குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச்
சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல்
நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர்
மென் நூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் . . . 640

நிலன் அகழ் உளியர் கலனசைஇக் கொட்கும்
கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி
வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத்
துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர்
அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த  645


நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி
ஊர்காப்பாளர் ஊக்க அருங்கணையினர்
தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக
மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும்
அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் . . .650


கடவுள் வழங்கும் கையாறு கங்குலும்
அச்சம் அறியா ஏமம் ஆகிய
மற்றை யாமம் பகலுறக் கழிப்பிப்

அருஞ்சொற்பொருள்:

631. பானாள் = நள்ளிரவு; கங்குல் = இரவு,

 

632. ஆய்கோல் = ஆராய்ந்த நெறி பிறழாத செங்கோல்

 

633. கழுது = பேயில் ஒருவகை; கொட்ப = சுழல, திரிய

 

634. இரும்பிடி = கரிய பெண்யானை; மேஎந்தோல்= மேல் தோல்; சேர்பு = சேர்ந்து

 

635. துணித்தல் = வெட்டுதல்

 

636. தொடலை = தொங்க விடுதல்; தொடுதோல் = செருப்பு

 

637. குறங்கு = தொடை; குறும்பிடி = உடைவாள் (உடையில் செருகிய வாள்)

 

638. நுணங்கு = நுண்மை; அறல் = கருமணல்

 

639. கவர்பு = கவர்ந்து

 

640. மாண் = மடங்கு

 

641.கொட்கும் = சுழன்று திரியும்

 

642. கண்மாறு ஆடவர் = கள்வர்; ஒடுக்கம் = மறைவிடம்; ஒற்றி = உளவரிந்து

 

643. வய = வலிய

 

646. நுணங்கு = நுட்பமான

 

647. ஊக்குதல் = தப்புதல்

 

649. அரைநாள் = நள்ளிரவு

 

650. அசைதல் = சோம்பல்; அசைவிலர் = சோம்பல் இல்லாதவர்கள்

 

651. கையறு = செயல் அற்ற; கங்குல் = இருள்

 

652.ஏமம் = காவல்

 

653. மற்றை யாமம் – இங்கு மூன்றாம் யாமத்தைக் குறிக்கிறது; பகல் உற = பிரிவை உண்டாக்கி

 

பதவுரை:

631. பானாள் கொண்ட கங்குல் இடையது = நடுநிசியைக் கழித்த இரவின் இடையாமத்தே (மூன்றாம் யாமத்தில், அதாவது12 மணி முதல் 3 மணிவரை)

 

632. பேயும் அணங்கும் உருவு கொண்டு ஆய்கோல் = பேய்களும், வருத்தும் தெய்வங்களும் (காணத்தக்க)உருவங்களைக் கொண்டு, ஆராய்ந்த நெறி பிறழாத,

633. கூற்றக் கொல்தேர் கழுதொடு கொட்ப = கூற்றுவன் கொலை செய்வதற்காக ஊர்ந்து வரும் தேராகிய பேய்களுடன் சுழன்றுதிரிய,

634. இரும்பிடி மேஎந்தோல் அன்ன இருள் சேர்பு = கரிய பெண்யானையின் தோலை ஒத்த கருமையுடைய இருளைச் சேர்ந்து,

635. கல்லும் மரனும் துணிக்குங் கூர்மை = கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய;

636. தொடலை வாளர் தொடுதோல் அடியர் = தொங்கிய வாளையுடையவராய்; செருப்புக்கோத்த அடியினையுடையவராய்;

637. குறங்கிடைப் பதித்த கூர்நுனைக் குறும்பிடிச் = தொடையை ஒட்டினாற்போல் இடுப்பில் செருகிய கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும்,

638. சிறந்த கருமை நுண்வினை நுணங்கு அறல் = மிக்க கருமையான, நுணுக்கமான வேலைப்பாடு(கொண்ட), நுண்ணிய கருமணலின்,

639. நிறம் கவர்பு புனைந்த நீலக் கச்சினர் = நிறத்தை வாங்கிச் செய்ததைப் போன்ற நீலநிறக் கச்சினையும் உடையவராய்;

640. மென் நூல் ஏணிப் பன்மாண் சுற்றினர் = மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பைச்சுற்றிப் பல முறை சுற்றியவர்களாய்,

641. நிலன் அகழ் உளியர் கலன் நசைஇக் கொட்கும் = நிலத்தை அகழும் உளியினை உடையவராய்; பேரணிகலன்களை விரும்பிச் சுற்றித்திரியும்,

642. கண்மாறு ஆடவர் ஒடுக்கம் ஒற்றி = கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சியினின்றும் விரைவில் மறையும் கள்வர் துங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து,

643. வயக்களிறு பார்க்கும் வயப்புலி போலத் = வலிய களிற்றை(இரையாக)ப் பார்க்கும் வலிய புலியைப் போல,

644. துஞ்சாக் கண்ணர் அஞ்சாக் கொள்கையர் = உறக்கம் கொள்ளாத கண்களையுடையவராய்; அஞ்சாத கோட்பாட்டையுடையவராய்,

 

645- 646. அறிந்தோர் புகழ்ந்த ஆண்மையர் செறிந்த நூல்வழிப் பிழையா நுணங்கு நுண் தேர்ச்சி = அறிந்தவர்கள் புகழும் ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய, நூல்கள் கூறும் வழிமுறைகளிலிருந்து தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின் தெளிவினையுடையவராய் உள்ள,

647. ஊர்காப்பாளர் ஊக்க அருங்கணையினர் = ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய்,

648. தேர் வழங்கு தெருவில் நீர் திரண்டு ஒழுக = தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி,

649. மழை அமைந்து உற்ற அரைநாள் அமயமும் = மழை நின்று பெய்த (இரவின்)நடுநாளாகிய பொழுதினும்,      

650. அசைவிலர் எழுந்து நயம் வந்து வழங்கலின் = சோம்பலற்றவராய் விருப்பத்தோடு உலாவுவதால்,

651.கடவுள் வழங்கும் கையறு கங்குலும் = தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிலும்,

652. அச்சம் அறியா ஏமம் ஆகிய = அச்சத்தை அறியாமல் காவலையுடைய,

653. மற்றை யாமம் பகலுறக் கழிப்பி = மூன்றாம் யாமத்தில் மக்கள் பயமின்றி உறக்கம் கொள்வர்.

கருத்துரை:  

பேய்களும், வருத்தும் தெய்வங்களும் காணத்தக்க உருவங்களைக் கொண்டு, உயிர்களின் வாழ்நாட்களை ஆராயும் நெறி பிறழாத கூற்றுவன் கொலை செய்வதற்காக ஊர்ந்து வரும் தேராகிய பேய்களுடன் சுழன்றுதிரிய, கரிய பெண்யானையின் தோலை ஒத்த கருமையுடைய இருளிடத்தில் சேர்ந்து, கல்லையும் மரத்தையும் வெட்டும் கூர்மையுடைய, தொங்கிய வாளையுடையவராய், செருப்புக்கோத்த அடியினையுடையவராய், தொடையை ஒட்டினாற்போல் இடுப்பில் செருகிய கூரிய முனையையுடைய குறுகிய பிடியமைந்த உடைவாளையும், செருப்பையும் அணிந்து, மிக்க கருமையான, நுணுக்கமான வேலைப்பாடு கொண்ட, நுண்ணிய கருமணலின் நிறத்தால் செய்ததைப் போன்ற நீலநிறக் கச்சினையும் உடையவராய், மெல்லிய நூலாற் செய்த ஏணியை இடுப்பைச்சுற்றிப் பல முறை சுற்றியவர்களாய், நிலத்தை அகழும் உளியினை உடையவராய், பேரணிகலன்களை விரும்பி அவற்றைத் திருடுவதற்காகச்  சுற்றித்திரியும், கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சியினின்றும் விரைவில் மறையும் கள்வர் துங்கியிருக்கின்ற இடத்தை ஒற்றியறிந்து, வலிய களிற்றை இரையாகப் பார்க்கும் வலிய புலியைப் போல, உறக்கம்  கொள்ளாத கண்களையுடையவராய், அஞ்சாத கோட்பாட்டையுடையவராய், களவுத் தொழிலை அறிந்தவர்கள் புகழும் ஆண்மையையுடையவராய்; பொருட்செறிவுடைய, நூல்கள் கூறும் வழிமுறைகளிலிருந்து தப்பாத நுட்பமான நுணுகிய ஆராய்ச்சியின் தெளிவினையுடையவராய் உள்ள ஊர்க் காவலர்கள், தப்புதற்கு அரிய அம்பினையுடையவராய், தேர் ஓடும் தெருவில் நீர் திரண்டு ஒழுகும்படி, மழை மிகவும் பெய்த இரவின் நடுப்பொழுதிலும், சோம்பலற்றவராய் விருப்பத்தோடு உலாவுவதால், தெய்வங்கள் உலாவும் செயலற்ற இருளிலும், அச்சத்தை அறியாமல் காவலையுடைய, மூன்றாம் யாமத்தில் மக்கள் பயமின்றி உறக்கம் கொள்வர்.      

 

விடியற்காலத்தில் மதுரை நகரம்

போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத்
தாது உண் தும்பி போது முரன்றாங்கு             655

ஓதல் அந்தணர் வேதம் பாடச்
சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி
யாழோர் மருதம் பண்ணக் காழோர்
கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப்
பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்டப் . . .660

பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்பக்
கள்ளோர் களி நொடை  நுவல இல்லோர்
நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சிப்
புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக்
கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய       665


ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலித்
திண்சுவர் நல்இல் கதவங் கரைய

உண்டு மகிழ் தட்ட மழலை நாவிற்

பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்றச்
சூதர் வாழ்ந்த மாகதர் நுவல . . . .                670

வேதாளிகரொடு நாழிகை இசைப்ப
இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்பப்
பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப
யானையங் குருகின் சேவலொடு காமர்
அன்னங் கரைய அணிமயில் அகவப்              675


பிடிபுணர் பெருங்களிறு முழங்க முழுவலிக்
கூட்டு உறை வயமாப் புலியொடு குழும
வானம் நீங்கிய நீல் நிற விசும்பின்
மின்னு நிமிர்ந்தனையராகி நறவு மகிழ்ந்து
மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த . . .           680

பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு
பொன்சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன
அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும்
தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப
மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப            685


இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை

 

அருஞ்சொற்பொருள்:

654. போது = மொட்டு

 

655. முரலுதல் = பாடுதல்

 

656. தும்பி = வண்டு; முரன்றாங்கு = பாடியதைப் போல்

 

658. காழோர் = யானயை மிரட்டும் குத்துக்கோலையுடையவர்கள்

 

659. கைப்ப = ஊட்ட

 

660. பணைநிலை = வரிசை, பந்தி; தெவிட்ட ல் = அசைபோடுதல்

 

661. பண்ணியம் = பண்டங்கள்; மெழுக்கு உறுப்ப = மெழுக

 

662. நொடை = விலை; நுவலுதல்

 

665. கண் பொரா = கண்ணைப் பறிக்கும்; நுவலுதல் = சொல்லுதல்

 

663. கவவுதல் = கையால் தழுவுதல்

 

666. தெழிப்ப = ஒலிப்ப; இயலி = நடந்து

 

667. கரைய = ஒலிக்க

 

668. தட்ட = தடுத்துக்கொண்ட; மழலை = குளறுமொழி

 

669. செருக்கு = மகிழ்ச்சி; தழங்குதல் = முழங்குதல் (உறுமுதல்)

 

670. சூதர் = நின்று (அரசனைப்) பாராட்டுவோர் ; மாகதர் = இருந்து ஏத்துவோர் (உட்கார்ந்திருந்து அரசனைப் பாராட்டுவோர்); நுவல = கூற

 

671. வேதாளிகர் = வைதாளிகர் ( புகழுரை புகல்வோர்); நாழிகை இசைப்ப = நாள் பொழுதை அறிவிக்க

 

672. இமிழ்தல் = ஒலித்தல்; இரங்கல் = ஒலித்தல்; ஏறு = எருது; மாறு = மாறுபட்டு; சிலைப்ப = ஒலிக்க

 

673. வாரணம் = சேவல்; இயம்ப = ஒலிக்க (கூவ)

 

674. யனையங்குருகு = யானையின் குரல்போலக் கூவும் வண்டாங்குருகு (ஒருவகைக் குருகு); காமர் = விருப்பம்

 

675. கரைய = அழைக்க; அகவ = கூவ

 

676. பிடி = பெண்யானை; களிறு = ஆண்யானை

 

677. வய = வலிய; கூட்டுறை வயமா = கூட்டினுள் அடைக்கப்பட்ட (அல்லது குகையினுள் உள்ள) வலிமையான விலங்கு

 

678. விசும்பு = ஆகாயம்

 

679. நறவு = கள்

 

680. புலத்தல் = ஊடுதல்; பரிதல் = அறுத்தல்

 

681. பரூஉ = பருமை; ஆரம் = முத்துமாலை (அணிகலன்); முத்தம் = முத்து

 

682. உக்கென்ன = சிந்தினாற்போல

 

683. குரும்பை = பாக்கு; படுபு = விழுந்த

 

684. தருமணல் = கொண்டுவந்து போடப்பட்ட மணல்; அரி = வண்டு; ஞிமிறு = தேனீ; ஆர்ப்ப = ஒலிக்க

 

685. செம்மல் = வாடிய் பூ; சீப்ப = பெருக்க (கூட்டித் தள்ள)

 

686. தலைப்பெயர்தல் = இடத்திலிருந்து நீங்குதல்; ஏமம் = காவல்

 

பதவுரை:

654. போதுபிணி விட்ட கமழ்நறும் பொய்கைத் = மொட்டுக்கள்  தளையவிழ்ந்து  மணம் கமழும் நறுமணமுடைய  பொய்கைகளில்

 

655. தாது உண் தும்பி போது முரன்றாங்கு = தாதை உண்ணும் வண்டுகள் பூக்களில் பாடுவதைப் போல,

656. ஓதல் அந்தணர் வேதம் பாடச் = ஓதுவதைத் தொழிலாகக்கொண்ட அந்தணர் வேதத்தைப் பாட,

657. சீர் இனிது கொண்டு நரம்பு இனிது இயக்கி = தாளத்துக்கேற்ப நரம்பை இனிதாகத் தெரித்து,

658 - 660. யாழோர் மருதம் பண்ணக் காழோர் கடுங்களிறு கவளங் கைப்ப நெடுந்தேர்ப் பணை நிலைப் புரவி புல் உணாத் தெவிட்ட = யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைக்க, யானையை மிரட்டும் குத்துக்கோலையுடையவர்கள், கடிய களிறுக்குக் கவளம் ஊட்ட, நெடிய தேருக்கான கொட்டிலில் நிற்கும் குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மெல்ல,

661. பல்வேறு பண்ணியக் கடை மெழுக்கு உறுப்பக் = ல்வேறு பண்டங்களை விற்பவர்கள் தங்கள் கடைகளைக் கூட்டி மெழுக,

662 - 664. கள்ளோர் களி நொடை  நுவல இல்லோர் நயந்த காதலர் கவவுப் பிணித் துஞ்சிப் புலர்ந்து விரி விடியல் எய்த விரும்பிக் = கள் விற்போர் களிப்பைத் தரும்  கள்ளிற்கு விலைசொல்ல , மகளிர் தாம் விரும்பிய தம் கணவருடன் கூடித் தழுவியபடி உறங்கும்பொழுது, பொழுது புலர்ந்து கதிரவனின் கதிர்கள் விரிகின்ற விடியற் காலம் வந்ததை உணர்ந்து, தாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து,

665. கண் பொரா எறிக்கும் மின்னுக்கொடி புரைய = கண்களைப் பறிக்கும் மின்னல் கொடியைப் போன்ற,

666. ஒண் பொன் அவிர் இழை தெழிப்ப இயலித் = ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற நகைகள் (சிலம்பு) ஒலிக்க, மகளிர் எழுந்து வந்து,

667. திண்சுவர் நல்இல் கதவங் கரைய = திண்மையான சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகளை திறப்பதால், அக்கதவுகள் ஒலிக்க,

668. உண்டு மகிழ் தட்ட மழலை நாவிற் = முந்தின இரவில் கள்ளை உண்டதால் வந்த  களிப்பைத் தடுத்துக்கொண்டு, குழறும் சொற்களையுடைய,


669. பழஞ்செருக்காளர் தழங்கு குரல் தோன்ற = பழைய களிப்பினையுடையாருடைய உறுமுகின்ற குரல்கள் தோன்
,

670. சூதர் வாழ்ந்த மாகதர் நுவல = நின்று புகழ்வோர் வாழ்த்த, உட்கார்ந்து வாழ்த்துவோர் புகழைச் சொல்ல,      

671.வேதாளிகரொடு நாழிகை இசைப்ப = நாழிகைக் கணக்கர்கள் நாழிகை அறிவிக்க,

672. இமிழ் முரசு இரங்க ஏறுமாறு சிலைப்ப = இமிழ்கின்ற முரசு ஒலிக்க, ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்க,

673. பொறிமயிர் வாரணம் வைகறை இயம்ப = புள்ளிகள் உள்ள சிறகுகளையுடைய சேவற்கோழி விடியற்காலத்தை அறிந்து கூவ,

674 - 675. யானையங் குருகின் சேவலொடு காமர் அன்னங் கரைய அணிமயில் அகவப் = யானையின் குரல்போலக் கூவும் வண்டாங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு, விருப்பத்தையுடைய அன்னச்சேவல்களும் (தம் பேடைகளை)அழைக்க, அழகிய மயில்கள் கூவ,     

676. பிடிபுணர் பெருங்களிறு முழங்க =  பெண்யானைகளைக்  கூடின பெரிய ஆண்யானைகள் முழங்க,

 677. முழுவலிக் கூட்டு உறை வயமாப் புலியொடு குழும = மிகுந்த வலிமையான, குகைகளில் வாழும் வலிமையான  விலங்குகள் புலியுடன் முழங்க,

678. வானம் நீங்கிய நீல் நிற விசும்பின் = வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமான மேகங்களில்,

679-680. மின்னு நிமிர்ந்தனையராகி நறவு மகிழ்ந்து  மாணிழை மகளிர் புலந்தனர் பரிந்த = மின்னலைப்  போன்ற கொடியிடையும்,   மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுமுடைய மகளிர் தம் கள் உண்ட கணவரோடு ஊடியதால் அறுத்து எறிந்த

681. பரூஉக்காழ் ஆரம் சொரிந்த முத்தமொடு = பருத்த முத்துமாலையிலிருந்த வீழ்ந்த முத்துக்களோடு,

682. பொன்சுடு நெருப்பின் நிலம் உக்கென்ன = மற்ற அணிகலன்கள் பொன்னை உருக்குகின்ற நெருப்புத் துண்டுகள் நிலத்தில் சிந்தியதுபோல்,

683. அம்மென் குரும்பைக் காய்படுபு பிறவும் = மற்ற மரங்களிலிருந்து வீழ்ந்த காய்களும் மெமையான இளம்பாக்குக் காய்களும் பிறவும் விழுந்து கிடக்க,

684. தருமணல் முற்றத்து அரி ஞிமிறு ஆர்ப்ப = கொண்டுவந்து இட்ட மணலையுடைய முற்றத்தே வண்டுகளும் தேனீக்களும் ஆரவாரிப்ப,

685. மென் பூஞ்செம்மலொடு நன்கலம் சீப்ப = மெல்லிய பூவின் வாடல்களுடன் நல்ல பூண்களையும் கூட்டித்தள்ள,

686. இரவுத்தலைப் பெயரும் ஏம வைகறை = இரவுப்பொழுது கழிந்து, விடியற் காலைப்பொழுது எல்லார்க்கும் காவலாக மலர,

கருத்துரை:

மொட்டுக்கள் தளையவிழ்ந்து மணம் கமழும் நறுமணமுள்ள பொய்கைகளில், தாதை உண்ணும் வண்டுகள் பூக்களில் பாடுவதைப் போல, ஓதுவதைத் தொழிலாகக்கொண்ட அந்தணர் வேதத்தைப் பாடுவர். தாளத்துக்கேற்ப நரம்பை இனிதாகத் தெரித்து, யாழ் வாசிப்பவர்கள் மருதப் பண்ணை இசைப்பர். யானையை மிரட்டும் குத்துக்கோலையுடையவர்கள், கடிய களிறுக்குக் கவளம் ஊட்டுவர். நெடிய தேருக்கான, கொட்டிலில் நிற்கும் குதிரைகள் புல்லாகிய உணவை மெதுவாக அசைபோட்டு மென்று தின்னும்.  ல்வேறு பண்டங்களை விற்பவர்கள் தங்கள் கடைகளைக் கூட்டி மெழுகுவர். கள் விற்போர் களிப்பைத் தரும் கள்ளிற்கு விலை கூறுவர். விரும்பிய தம் கணவருடன் மகளிர் கூடித் தழுவியபடி உறங்கும்பொழுது, பொழுது புலர்ந்து கதிரவனின் கதிர்கள் விரிகின்ற விடியற் காலம் வந்ததை உணர்ந்து, தாம் செய்ய வேண்டிய வேலைகளை நினைத்து,  கண்களைப் பறிக்கும் மின்னல் கொடியைப் போன்ற, ஒளிரும் பொன்னாலான மின்னுகின்ற நகைகள் (சிலம்பு) ஒலிக்க, மகளிர் எழுந்து வந்து, திண்மையான சுவர்களையுடைய நல்ல இல்லங்களின் கதவுகளைத் திறப்பதால், அக்கதவுகள் ஒலிக்கும். 

 

முந்தின இரவில் கள்ளை உண்டவர்கள் , அந்தக் கள்ளால் வந்த களிப்பைத் தடுத்துக்கொண்டு, குழறும் சொற்களைக் கூறுவர். நின்று அரசனைப் புகழ்வோர்  நின்று வாழ்த்துவர்.   உட்கார்ந்து வாழ்த்துவோர் உட்கார்ந்து அரசனின் புகழைக் கூறுவர். நாழிகைக் கணக்கர்கள் நாழிகை அறிவிப்பர்.  முரசு ஒலிக்கும். ஏறுகள் (தம்முள்)மாறுபட்டு முழங்கும். புள்ளிகள் உள்ள சிறகுகளையுடைய சேவற்கோழி விடியற்காலத்தை அறிந்து கூவும். யானையின் குரல்போலக் கூவும் வண்டாங்குருகு எனும் நாரையின் சேவல்களோடு, அன்னச்சேவல்களும் தம் பேடைகளை அழைக்கும். அழகிய மயில்கள் கூவும். பெண்யானைகளைக் கூடிய பெரிய ஆண்யானைகள் முழங்கும். குகைகளில் வாழும் வலிமையான விலங்குகள் புலியுடன் முழங்கும். வானத்தில் கடந்து செல்லும் நீல நிறமான மேகங்களில் தோன்றும் மின்னலைப்  போன்ற கொடியிடையும்,   மாட்சிமைப்பட்ட அணிகலன்களையுமுடைய மகளிர் தம் கள் உண்ட கணவரோடு ஊடியதால் அறுத்து எறிந்த பருத்த முத்துமாலையிலிருந்த வீழ்ந்த முத்துக்களோடு, மற்ற அணிகலன்கள் பொன்னை உருக்குகின்ற நெருப்புத் துண்டுகள் நிலத்தில் சிந்தியதுபோல், மற்ற மரங்களிலிருந்து வீழ்ந்த காய்களும் மென்மையான இளம்பாக்குக் காய்களும் பிறவும் விழுந்து கிடக்கும் மணலையுடைய முற்றத்தில் வண்டுகளும் தேனீக்களும் ஆரவாரிக்கும்.  அவற்றோடு மெல்லிய பூவின் வாடல்களையும் நல்ல அணிகலன்களையும் பெண்கள் கூட்டித்தள்ள, இரவுப்பொழுது கழிந்து, விடியற் காலைப்பொழுது எல்லார்க்கும் காவலாக மலர்ந்தது.

 

மதுரை மாநகரம்

 

மைபடு பெருந்தோள் மழவர் ஓட்டி
இடைப்புலத்து ஒழிந்த ஏந்துகோட்டு யானை
பகைப்புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி
வேல் கோல் ஆக ஆள் செல நூறிக் . . .          690


காய் சின முன்பின் கடுங் கட்கூளியர்
ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும்
நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி
நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி
நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும்           695


கங்கை அம் பேரியாறு கடற் படர்ந்தாங்கு
அளந்து கடை அறியா வளங்கெழு தாரமொடு
புத்தேள் உலகம் கவினிக் காண்வர
மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரைச்

அருஞ்சொற்பொருள்:

687. மை = தீவினை; படு = மிகுதிக் குறிப்பு; மழவர் = வீரர்; ஓட்டி = விரட்டி அடித்து

 

688. ஒழிந்த = விட்டுச் சென்ற; கோடு = கொம்பு

 

689. புரவி = குதிரை

 

690. நூறி = வெட்டி

 

691. முன்பு = வலிமை; கூளியர் = வீரர்கள்

 

692. ஆயம் = பசுக்களின் கூட்டம்

 

693. எயில் = அரண்; தோட்டி = கதவு

 

694. பழிச்சி = வாழ்த்தி

 

695. விழு = சிறந்த; கலம் = கப்பல்

 

697. தாரம் = அரிய பண்டம்

 

698. புத்தேள் = தேவர்; கவினி = அழகுற

 

பதவுரை:

687. மைபடு பெருந்தோள் மழவர் ஓட்டி = மிகுந்த தீவினைகள் செய்த பெரிய தோள்களையுடைய பகை வீரர்களை விரட்டி அடித்து,

 

688. இடைப்புலத்து ஒழிந்த ஏந்துகோட்டு யானை = போர்க்களத்தின் நடுவழியில் (அவர்கள் விட்டுச் சென்ற) உயர்த்திய கொம்புகளையுடைய யானைகளையும்,

689. பகைப்புலம் கவர்ந்த பாய் பரிப் புரவி = பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளையும்,

690. வேல் கோல் ஆக ஆள் செல நூறிக்  = தம் கையிலிருந்த வேலை பசுக்களை ஓட்டும் கோலாகக்கொண்டு, அங்கு பசுக்களைக் காத்திருந்த வீரர்களை  வெட்டி,

691. காய் சின முன்பின் கடுங்கண் கூளியர் = நெருப்பைப் போன்ற கோபமும் வலிமையும் மிக்க வீரர்கள்,

692. ஊர்சுடு விளக்கின் தந்த ஆயமும் = பகைவர் ஊரை அழித்து அங்கிருந்து கவர்ந்து வந்த பசுக்கூட்டமும்,

693. நாடுடை நல்லெயில் அணங்குடைத் தோட்டி = பகைவர்  நாட்டைச் சூழ்ந்துள்ள காப்பரண்களும், அதன் வலிய கதவுகளும்,

694. நாள்தொறும் விளங்கக் கைதொழூஉப் பழிச்சி = நாள் தோறும், தமக்குச் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்று கையால் தொழுது வாழ்த்தி,

695. நாள் தர வந்த விழுக்கலம் அனைத்தும் = அன்றாடம் வந்த  அரும்பொருட்களைக் கொண்டுவந்த சிறந்த அணிகலன்களும், பிறவும்,

696. கங்கை அம் பேரியாறு கடற் படர்ந்தாங்கு = கங்கையாகிய அழகிய பெரிய ஆறு கடலுள் படர்ந்து சென்றாற்போல,

697. அளந்து கடை அறியா வளங்கெழு தாரமொடு = அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்திய பண்டங்களோடு,

698. புத்தேள் உலகம் கவினிக் காண்வர = தேவருலகம்போல் பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக,

699. மிக்குப் புகழ் எய்திய பெரும்பெயர் மதுரை = மிகுந்த புகழைப் பெற்ற பெரிய சிறப்புடைய மதுரையில்,

கருத்துரை:

மிகுந்த தீவினைகள் செய்த பெரிய தோள்களையுடைய பகை வீரர்களை அழித்து, போர்க்களத்தின் நடுவழியில் (அவர்கள் விட்டுச் சென்ற) நிமிர்ந்த கொம்புகளையுடைய யானைகளும், பகைவர் நாட்டில் கைக்கொண்ட பாய்ந்து செல்லும் குதிரைகளும், தம் கையிலிருந்த வேலை, பசுக்களை ஓட்டும் கோலாகக்கொண்டு, அங்கு பசுக்களைக் காத்திருந்த வீரர்களை  வெட்டி, நெருப்பைப் போன்ற கோபமும் வலிமையும் மிக்க வீரர்கள், பகைவர் ஊரை அழித்து அங்கிருந்து கவர்ந்து வந்த பசுக்கூட்டமும், வெற்றியின் சின்னமாகப் பகை மன்னர்களின் நாட்டைச் சூழ்ந்துள்ள காப்பரண்களில் உள்ள வலிய கதவுகளும், நாள் தோறும், தமக்குச் செல்வம் நிலைத்திருக்க வேண்டும் என்று கையால் தொழுது வாழ்த்தி, தோற்ற மன்னர்கள் அன்றாடம் திறையாகக் கொண்டு வந்த  சிறந்த அணிகலன்களும், பிறவும், கங்கையாகிய அழகிய பெரிய ஆறு கடலுள் படர்ந்து சென்றாற்போல, அளந்து முடிவு அறியாத வளப்பம் பொருந்திய பண்டங்களோடு, தேவருலகம் போன்று பொலிவெய்தி, காட்சிக்கு இனிமையுண்டாக, மிகுந்த புகழைப் பெற்ற பெரிய சிறப்புடைய மதுரையை வந்துசேரும்.

 

இரவில் மன்னன் உறங்குவதும் உறங்கி விழிப்பதும்

சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ . . .               700

ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில்
சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று
இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன
தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை
நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து                   705


மயில் ஓரன்ன சாயல் மாவின்
தளிர் ஏர் அன்ன மேனித் தளிர்ப்புறத்து
ஈர்க்கின் அரும்பிய திதலையர் கூர் எயிற்று
ஒண் குழை புணரிய வண் தாழ் காதின்
கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரைத் . . .      710

தாதுபடு பெரும்போது புரையும் வாள்முகத்து
ஆய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து
கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சித்
திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து

அருஞ்சொற்பொருள்:

700. சினை = கிளை; மணந்த = கூடிய; சுரும்பு = வண்டு

 

701. பிண்டி = அசோக மரம்; அவிழ்தல் = மலர்தல்; கா = சோலை

 

703. இலங்குதல் = விளங்குதல்

 

704. தமனியம் = பொன்; தா = குற்றம்

 

705. மேதக = மேன்மையாக; பொலிந்து = அழகுடன் விளங்கி

 

706. மயில் ஓர் = மயில் போன்ற; சாயல் = மென்மை; மா = மாமரம்

 

707. ஏர் = அழகு; தளிர் ஏர் = தளிரின் அழகு

 

708. ஈர்க்கு = ஓலையின் நரம்பு; திதலை = தேமல்; எயிறு = பல்

 

709. வண்தாழ் = வளைந்து தாழ்ந்த

 

710. கயம் = குளம்; அமன்ற = நெருங்கிய

 

711. புரையும் = போலும்; வாள் = ஒளி

 

713. கோதை  = மாலை; சேக்கை = படுக்கை; துஞ்சி = உறங்கி

 

714. திருந்து துயில் = உடலுக்கு நன்மை விளைவிக்கும் உறக்கம்

 

பதவுரை:

700-701.சினைதலை மணந்த சுரும்புபடு செந்தீ ஒண் பூம்பிண்டி அவிழ்ந்த காவில் = மரக்கிளைகளில் ஒன்றுகூடின வண்டுகள் மொய்க்கும், சிவந்த நெருப்பைப்போல்

 ஒளியுடன் காட்சியளிக்கும் பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள சோலையில்,

702. சுடர் பொழிந்து ஏறிய விளங்கு கதிர் ஞாயிற்று = ஒளியைச் சொரிந்து, உச்சிக்கு ஏறிய பளிச்சிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின்,

703. இலங்கு கதிர் இளவெயில் தோன்றியன்ன = மேற்கில் இறங்கிய பின்னர் மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று,

704. தமனியம் வளைஇய தாவில் விளங்கிழை = பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுப் பளபளக்கும் பேரணிகலன்களால்,

705. நிலம் விளக்குறுப்ப மேதகப் பொலிந்து = நிலம் பிரகாசமடைந்து மேன்மையாகப் பொலிவுபெற்று,

706. மயில் ஓரன்ன சாயல் = மயிலைப் போன்ற மென்மையையும்,  

707. மாவின் தளிர் ஏர் அன்ன மேனி = மாமரத்தின் தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும்

708. தளிர்ப்புறத்து ஈர்க்கின் அரும்பிய திதலையர் = தளிரினது புறத்தில் உள்ள நரம்புகளைப் போன்ற தேமலை உடையவர்களாய்,

709. கூர் எயிற்று ஒண் குழை புணரிய வண் தாழ் காதின் = கூரிய பற்களையும், ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளைந்து தாழ்ந்த காதினையும்,

710. கடவுட் கயத்து அமன்ற சுடர் இதழ்த் தாமரை = இறைத்தன்மையுள்ள பொற்றாமரைக் குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின்,

711. தாதுபடு பெரும்போது புரையும் வாள்முக = தாதுகள் உள்ள பெரிய பூவைப் போன்ற ஓளியுடைய முகத்தினையும்,

712. ஆய்தொடி மகளிர் நறுந்தோள் புணர்ந்து = ஆராய்ந்த வளையல்களையும் உடைய மகளிருடைய மணமுள்ள தோளைத் தழுவி,

713. கோதையின் பொலிந்த சேக்கைத் துஞ்சி = பூமாலைகள் புனைந்த படுக்கையில் உறங்கி,

714. திருந்து துயில் எடுப்ப இனிதின் எழுந்து = உடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்ல உறக்கத்திலிருந்து (சூதர் இசை பாடியதால்) இனிதாக எழுந்து,

கருத்துரை:

மரக்கிளைகளில் ஒன்றுகூடின வண்டுகள் மொய்க்கும், சிவந்த நெருப்பைப் போன்ற, ஒளியுடன் கூடிய பூக்களையுடைய அசோக மரங்கள் மலர்ந்துள்ள சோலையில், ஒளியைச் சொரிந்து, உச்சிக்கு ஏறிய பளிச்சிடும் கதிர்களையுடைய ஞாயிற்றின், மேற்கில் இறங்கிய பின்னர் மென்மையாக ஒளிவிடும் கதிர்களின் இளவெயில் தோன்றினாற் போன்று, பொன்னின் ஒளி சூழ்ந்து குற்றமற்றுப் பளபளக்கும் பேரணிகலன்களால், நிலம் பிரகாசமடைந்து மேன்மையாகப் பொலிவுபெற்று, மயிலைப் போன்ற மென்மையையும்,  மாமரத்தின் தளிரினது அழகை ஒத்த நிறத்தினையும்தளிரினது புறத்தில் உள்ள நரம்புகளைப் போன்ற தேமலையும், கூரிய பற்களையும், ஒளிவிடும் மகரக்குழை பொருந்திய வளைந்து தாழ்ந்த காதினையும், இறைத்தன்மையுள்ள பொற்றாமரைக் குளத்தில் நெருங்கி வளர்ந்த, சுடர்விடும் இதழ்களையுடைய தாமரையின் தாதுகள் உள்ள பெரிய பூவைப் போன்ற ஓளியுடைய முகத்தினையும் உடைய, ஆராய்ந்த வளையல்களை அணிந்த மகளிருடைய மணமுள்ள தோளைத் தழுவி, பூமாலைகள் புனைந்த படுக்கையில் உறங்கி, உடலுக்கு நன்மை விளைவிக்கும் நல்ல உறக்கத்திலிருந்து (புகழ்ந்து பாடுவோர் இசை பாடியதால்) துயில் நீங்கி இனிதாக எழுந்து,

 

திண் காழ் ஆரம் நீவிக் கதிர்விடும்                715


ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின்             
வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப
எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல்
பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம்
வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் . .    720


சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம்
உடையணி பொலியக் குறைவின்று கவைஇ
வல்லோன் தைஇய வரிப்புனை பாவை
முருகு இயன்றன்ன உருவினை ஆகி
வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து          725


ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர்
வாள்வலம் புணர்ந்த நின் தாள்வலம் வாழ்த்த

அருஞ்சொற்பொருள்:

715. காழ் = வயிரம்; ஆரம் = சந்தனம்; நீவி = தடவி

 

716. காழ் = முத்து; கவைஇய = அகத்திட்ட (சூழ்ந்த)

 

717. பிரசம் = தேனீ, மூசல் = மொய்த்தல், மூசுவன = வண்டுகள்

 

718. எருத்தம் = கழுத்து; தெரியல் = மாலை

 

719. பொலம் = பொன்; விளக்கம் = மோதிரம்

 

721. சோறு அமைவுற்ற நீர் = சோற்றுக் கஞ்சி; கலிங்கம் = ஆடை

 

722. கவைஇ = சூழ்ந்து (உடுத்தி)

 

723. தைஇய = செய்யப்பட்ட (செதுக்கிய); வரிப்புனை பாவை = எழுதிக் கை செய்த பாவை

 

724. முருகு = அழகு, முருகன்

 

725 கல்சிறை = கல்லணை; இடை அறுத்து = நடுவே தடுத்து

 

726. ஒன்னார் = பகைவர்; ஓட்டிய = விரட்டிய; செரு = போர்; புகலுதல் = சொல்லுதல்

 

727. வாள் வலம் = வாளால் பெற்ற வெற்றி; தாள் = முயற்சி

 

பதவுரை: 

715 – 716. திண் காழ் ஆரம் நீவிக் கதிர்விடும் ஒண் காழ் ஆரம் கவைஇய மார்பின் = திண்ணிய வயிரத்தையுடைய சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும் ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில்,

 

717. வரிக் கடைப்பிரசம் மூசுவன மொய்ப்ப = வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனீக்களும் வண்டுகளும் மொய்க்க,

 

718. எருத்தம் தாழ்ந்த விரவுப் பூந்தெரியல் = கழுத்திலிருந்து தாழ்ந்த, பல்விதமா பூக்களைத் தெரிவுசெய்து கலந்து கட்டிய மாலையினையும்,

719. பொலஞ்செயப் பொலிந்த நலம்பெறு விளக்கம் = பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் பதிக்கப்பட்ட மோதிரங்களும்,

720. வலிகெழு தடக்கைத் தொடியொடு சுடர்வரச் = வலிமை பொருந்திய பெரிய கையில் வீர வளையல்கள் ஒளிவீச,

721. சோறு அமைவுற்ற நீருடைக் கலிங்கம் = கஞ்சி இட்ட ஆடையை,

722. உடையணி பொலியக் குறைவின்று கவைஇ = உடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு குறையில்லாமல் உடுத்தி,

723- 724. வல்லோன் தைஇய வரிப்புனை பாவை முருகு இயன்றன்ன உருவினை ஆகி = சிற்பத்துறையில் வல்லவன் செதுக்கிய அழகிய  ஆபரணம் தரித்த சிலையில் முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி,

725. வருபுனல் கற்சிறை கடுப்ப இடையறுத்து = வருகின்ற ஆற்றுநீரைக் கல் அணை தாங்கினாற் போலப் பகைவர் படையை நடுவே தடுத்து,

726. ஒன்னார் ஓட்டிய செருப்புகல் மறவர் = அப் பகைவரை விரட்டிய, போரை விரும்பும் படைத்தலைவர்,

737. வாள்வலம் புணர்ந்த நின் தாள்வலம் வாழ்த்த =  வாளால் பெற்ற வெற்றிக்கான உன் முயற்சியைப் பாராட்டி வாழ்த்த,

கருத்துரை:

சந்தனத்தைப் பூசி, ஒளிவிடும் ஒள்ளிய வடமாகிய முத்துச் சூழ்ந்த மார்பினில், வரிகளுள்ள பின்பகுதியையுடைய தேனீக்களும் வண்டுகளும் மொய்க்க, கழுத்திலிருந்து தாழ்ந்த, பல்விதமா பூக்களைத் தெரிவுசெய்து கலந்து கட்டிய மாலையினையும், பொன்னாற் செய்ததினால் பொலிவு பெற்ற மணிகள் பதிக்கப்பட்ட மோதிரங்களும், வலிமை  பொருந்திய பெரிய கையில் வீர வளையல்கள் ஒளிவீச, கஞ்சி இட்ட ஆடையை, உடைக்கு மேலணியும் அணிகலன்கள் பொலிவுறுமாறு குறைவில்லாமல் உடுத்தி, சிற்பத்துறையில் வல்லவன் செதுக்கிய, அழகிய ஆபரணம் அணிந்த  சிலையில் முருகன் குடிகொண்டதைப் போன்ற வடிவத்தைப்பெற்றவன் ஆகி, வருகின்ற ஆற்றுநீரைக் கல் அணை தாங்கினாற்போலப் பகைவர் படையை நடுவே தடுத்து, அப் பகைவரை விரட்டிய போரை விரும்பும் படைத்தலைவர், வாளால் பெற்ற  வெற்றிக்கான  உன் முயற்சியைப் பாராட்டி வாழ்த்துகிறார்கள்.

 

வீரர்களை அழித்து வாருங்கள் என்று மன்னன் கூறுதல்

வில்லைக் கவைஇக் கணை தாங்கு மார்பின்
மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின்
கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் . . .        730


நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின்
கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த
மாக்கண் முரசம் ஓவு இல் கறங்க
எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண்
பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய                   735


விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின்
புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை
நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டிக்
காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கிப்
பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து . . .          740

வானத்து அன்ன வள நகர் பொற்ப
நோன் குறட்டு அன்ன ஊன்சாய் மார்பின்
உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின்
நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த
புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல்                    745


பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் பிறரும்
யாவரும் வருக ஏனோரும் தம் என
வரையா வாயில் செறாஅது இருந்து

அருஞ்சொற்பொருள்:

728: கவைஇ = அணைத்து (வளைத்து); கணை = அம்பு

 

729. மா = குதிரை; எறுழ் = வலிமை; தம்மின் = கொணர்மின் (கொண்டுவாருங்கள்)

 

730. இட்டு வாய் = ஒடுங்கிய வாய்; கிடங்கு = அகழி

 

731. எயில் = மதில்; உழந்த = வருத்திய (அழித்த); தம்மின் = கொணர்மின் (கொண்டுவாருங்கள்)

 

732. ஏறு = புலி

 

733. மா = பெரிய, கண் = முரசை அடிக்கும் இடம்; ஓவு இல = ஓய்வு இல்லாமல் (இடைவிடாமல்); கறங்க = ஒலிக்க

 

734. நாப்பண் = நடுவே

 

736. குரிசிலர் = தலைவர்

 

737. புரையோர்= உயர்ந்தோர் (தலைவர்); பொலம் = பொன்

 

739.காழ் = காம்பு; எஃகு = வேல்; அலைக் கலங்கி = அலைத்தலால் கலங்கி (நிலை கலங்கி)

 

740. பிரிபு = பிரிந்து; அரிந்த = அறுபட்ட; கவயம் = கவசம்

 

741. பொற்ப = பொலிவு பெற

 

742. நோன் = வலிமையான; குறடு = வண்டியின் குடம்

 

743. ஊக்கலர் = முயற்சி உடையோர்

 

744. நிவந்த = உயர்ந்த; கணம் = கூட்டம்

 

745. தெரியல் = மாலை

 

748. செறுத்தல் = தடுத்தல்

 

பதவுரை:

728. வில்லைக் கவைஇக் கணை தாங்கு மார்பின் = வில்லை வளைத்து நாணுடன் சேர்த்து விடுகின்ற அம்பின் வேகத்தைத் தாங்கும் மார்பினையும்,

 

729. மா தாங்கு எறுழ்த்தோள் மறவர்த் தம்மின் = குதிரையைச் செலுத்தும் வலிமையையுடைய தோளினையும் உடைய மறவரைக் கொணர்மின்;

730. கல் இடித்து இயற்றிய இட்டுவாய்க் கிடங்கின் = கல்லைக் குடைந்து செய்த, சிறிய அளவே நீர்வரும்  வாயையுடைய அகழியை,

731. நல் எயில் உழந்த செல்வர்த் தம்மின் = பகைவரின் நல்ல கோட்டைமதிலை அழித்த, வீரத்தையே செல்வமாகக் கொண்ட சிறப்புடையோரைக் கொணர்மின்;

732 – 733. கொல்லேற்றுப் பைந்தோல் சீவாது போர்த்த மாக்கண் முரசம் ஓவு இல கறங்க = கொல்லும் புலியின் பதப்படுத்திய தோலை மயிர் சீவாமற் போர்த்த பெரிய கண்ணையுடைய முரசம் இடைவிடாமல் ஒலிக்க,

734. எரி நிமிர்ந்தன்ன தானை நாப்பண் = நெருப்பு நிமிர்ந்து நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று),

735. பெரு நல்யானை போர்க்களத்து ஒழிய = பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே வெட்டி வீழ்த்தியதால்,

736. விழுமிய வீழ்ந்த குரிசிலர்த் தம்மின் = சீரிய விழுப்புண்பட்டு விழுந்த தலைவர்களைக் கொணர்மின்;

737. புரையோர்க்குத் தொடுத்த பொலம் பூந்தும்பை = குற்றமற்ற உயர்ந்தோர்க்காகக் கட்டப்பட்ட பொன்னால் செய்த பூவினையுடைய தும்பைப் பூமாலையை,

738. நீர் யார் என்னாது முறை கருதுபு சூட்டி = அவர்கள் யார் என்று கேட்காமல், அவர்களின் தகுதியை மட்டுமே கருதி, முறைப்படி அவர்களுக்குச் சூட்டிப் போர் செய்ய அனுப்ப,

739. காழ் மண்டு எஃகமொடு கணை அலைக் கலங்கிப் = காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று அவர்களின் மார்பில் தைப்பதால் அவர்கள்  நிலைகலங்கி,

740. பிரிபு இணை அரிந்த நிறம் சிதை கவயத்து = பலவாப் பிரிந்து இணைந்த (பொருத்துவாய்கள் அற்ற பழைய) நிறம் கெட்ட கவசத்தோடே,

741. வானத்து அன்ன வள நகர் பொற்ப = தேவருலகத்தை ஒத்த வளமுடைய மதுரை நகரம், வீரப்பொலிவுடன் விளங்க,

742. நோன் குறட்டு அன்ன ஊன்சாய் மார்பின் = வண்டியின்  வலிமையான குடத்தை ஒத்த ஊன் கெட்ட மார்போடே (அம்புகள் தைத்ததால் அவர்களின் மார்பு வண்டியின் குடத்தில் பொருந்தியுள்ள ஆரக்கால்கள்போல் உள்ளன),

743. உயர்ந்த உதவி ஊக்கலர்த் தம்மின் = உயர்ந்த உதவி செய்வதற்கு முயற்சி செய்தவரைக் கொணர்மின்;

744. நிவந்த யானைக் கண நிரை கவர்ந்த = உயர்ந்த யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த,

745 - 746. புலர்ந்த சாந்தின் விரவுப் பூந்தெரியல் பெருஞ்செய் ஆடவர்த் தம்மின் = சந்தனம் பூசிய, மலர் மாலை சூடிய பெரிய செயல்களைச் செய்த  ஆடவர்களைக் கொணர்மின்;

747 - 748. பிறரும் யாவரும் வருக ஏனோரும் தம் என வரையா வாயில் செறாஅது இருந்து = பிறரும் வீர்கள் எல்லாரையும் கொணர்மின் என்று அழைத்து, யாரையும் தடுத்து நிறுத்தாமல், வாயில் கதவு திறந்து வைத்து,

கருத்துரை:

வில்லை வளைத்து நாணுடன் சேர்த்து விடுகின்ற அம்பின் வேகத்தைத் தாங்கும் மார்பினையும், குதிரையைச் செலுத்தும் வலிமையையுடைய தோளினையும் உடைய வீரர்களையும், கல் தரையைக் குடைந்து செய்த, சிறிய அளவே நீர்வரும்  வாயையுடைய அகழிகளுடன் கூடிய, பகைவரின் நல்ல கோட்டை மதிலை அழித்த, வீரத்தையே செல்வமாகக் கொண்ட சிறப்புடையோரையும், புலியின் பதப்படுத்திய தோலை மயிர்சீவாமற் போர்த்த பெரிய கண்ணையுடைய முரசம் இடைவிடாமல் ஒலிக்க, நெருப்பு நிமிர்ந்து நின்றாற் போன்ற (பகைவர்)படைக்கு நடுவே (சென்று), பெரிய நல்ல யானைகளைப் போர்க்களத்தே வெட்டி வீழ்த்தியதால், சீரிய விழுப்புண்பட்டு விழுந்த தலைவர்களையும், குற்றமற்ற உயர்ந்தோர்க்காக கட்டப்பட்ட பொன்னால் செய்த பூவினையுடைய தும்பைப் பூமாலையை, அவர்கள் யார் என்று கேட்காமல், அவர்களின் தகுதியை மட்டுமே கருதி, முறைப்படி அவர்களுக்குச் சூட்டிப் போர் செய்ய அனுப்ப, காம்பினுள் செருகின வேல்களுடன் அம்புகளும் சென்று அவர்களின் மார்பில் தைப்பதால் அவர்கள்  நிலைகலங்கி, பலவாப் பிரிந்து இணைந்த பொருந்துவாய்கள் அற்ற, பழைய நிறம் கெட்ட கவசத்தோடே, தேவருலகத்தை ஒத்த வளமுடைய மதுரை நகரம்,  வீரப்பொலிவுடன் விளங்க, வண்டியின்  வலிமையான குடத்தை ஒத்த ஊன் கெட்ட மார்போடே (அம்புகள் தைத்ததால் அவர்களின் மார்பு வண்டியின் குடத்தில் பொருந்தியுள்ள ஆரக்கால்கள்போல் உள்ளன), உயர்ந்த உதவி செய்வதற்கு முயற்சி செய்தவரையும், உயர்ந்த யானைகளின் திரண்ட கூட்டத்தைக் கவர்ந்த, சந்தனம் பூசிய, மலர் மாலை சூடிய, பெரிய செயல்களைச் செய்த  ஆடவர்களையும், பிற வீரர்கள் எல்லாரையும்  வாருங்கள் என்று அழைத்து, யாரையும் தடுத்து நிறுத்தாமல், வாயில் கதவு திறந்து வைத்து,

 

       

மன்னனின் பெருங்கொடையும் விருந்தளித்தலும்


பாணர் வருக பாட்டியர் வருக
யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என . . .750


இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம்
கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசிக்
களந் தோறும் கள் அரிப்ப
மரம் தோறும் மை வீழ்ப்ப
நிண ஊன் சுட் டு உருக்கு அமைய        755


நெய் கனிந்து வறை ஆர்ப்பக்
குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின்
பரந்து தோன்றா வியல் நகரால்
பல் சாலை முது குடுமியின்
நல் வேள்வித் துறை போகிய . . . .        760

தொல் ஆணை நல் ஆசிரியர்
புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின்
நிலந்தரு திருவின் நெடியோன் போல
வியப்பும் சால்பும் செம்மை சான்றோர்
பலர்வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி    765

அருஞ்சொற்பொருள்:

749. பாட்டியர் = பாணினி (பாணர்களின் குடும்பத்தைச் சார்ந்த பாடுகின்ற பெண்கள்)

 

750. யாணர் = புதுவருவாய்; வயிரியர் = கூத்தர்

 

751. இரு = பெரிய; கிளை = சுற்றத்தார்; புரக்கும் = பாதுகாக்கும்

 

752. கொடுஞ்சி = தேரின் முன்பகுதியில் உள்ள அலங்கார உறுப்பு; வீசி = வரையாது கொடுத்தல்

 

753. களம் = இடம்; அரிப்ப = வடிகட்ட

 

754. மை = செம்மறி ஆடு. வீழ்ப்ப = விழச்செய்தல் (வெட்டுதல்)

 

755. நிணம் = கொழுப்பு; ஊன் = தசை; உருக்கு = உருகுதல், அமைய = பொருந்த; உருக்கு அமைய = உருக

 

756. கனிந்து = உருகி; வறை = வறுத்த கறி; ஆர்ப்ப = ஆரவாரிக்க

 

757. குரூஉ = நிறம்; குய் = தாளிப்பு; குரூஉக்குய்ப் புகை = நிறமுடைய தாளிப்பில் எழுந்த புகை; மங்குல் = மூடுபனி

 

759. பல் சாலை முது குடுமி = பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன்

 

762. புணர்தல் = கலத்தல்

 

763. நிலம் தரு திரு = நிலந்தரு திருவிற் பாண்டியன்

 

765. புகர் = குற்றம் (களங்கம்)

 

பதவுரை:

749. பாணர் வருக பாட்டியர் வருக = பாடும் பாணர்களே வருக, பாணினியரே வருக,

 

750. யாணர்ப் புலவரொடு வயிரியர் வருக என = புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருக,

 

751-752. இருங்கிளை புரக்கும் இரவலர்க்கு எல்லாம் கொடுஞ்சி நெடுந்தேர் களிற்றொடும் வீசி = (தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம் கொடுஞ்சியையுடைய நெடிய தேர்களை யானைகளோடும் குறையாது வழங்கி,

 

753. களந் தோறும் கள் அரிப்ப = காணும் இடமெல்லாம் கள் வடிகட்டி,

 

754. மரம் தோறும் மை வீழ்ப்ப = மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டி,

 

755. நிண ஊன் சுட் டு உருக்கு அமைய = கொழுப்பையுடைய தசைகள் சுடுதலால், அவற்றுள் உள்ள கொழுப்பு உரு,

 

756. நெய் கனிந்து வறை ஆர்ப்பக் = நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிக்க,

 

757. குரூஉக் குய்ப் புகை மழை மங்குலின் = நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப்,

 

758. பரந்து தோன்றா வியல் நகரால் = பரந்து தோன்றும், அகன்ற  மதுரை மாநகரத்தே,

 

759. பல் சாலை முது குடுமியின் = பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போன்று,

 

760. நல் வேள்வித் துறை போகிய = நல்ல வேள்வித்துறைகளில் முற்றும் தேர்வாயாக,

 

761. தொல் ஆணை நல் ஆசிரியர் = தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களுடன்,


762. புணர் கூட்டு உண்ட புகழ் சால் சிறப்பின் = சேர்ந்து பழகி அவர்கள் கூட்டுறவாலே பெற்ற அறிவால் வந்த புகழாலும்,

 

763. நிலந்தரு திருவின் நெடியோன் போல = நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போன்று,

 

764. வியப்பும சால்பும் செம்மை சான்றோர் = வியப்பும்,  மேன்மையும், நடுநிலைமையும் உடைய சான்றோர்,

 

765. பலர்வாய்ப் புகர் அறு சிறப்பின் தோன்றி = பலராலும் புகழப்பட்டு, குற்றமற்ற சிறப்போடு தோன்றி,

 

கருத்துரை:

”பாடும் பாணர்களே வருக! பாணினியரே வருக! செய்யுளாகிய புது வருவாயினையுடைய புலவரோடு கூத்தரும் வருக!,” என்று வரவேற்கும் மன்னா!,  (தம்)பெரிய சுற்றத்தாரைப் பேணி ஆதரிக்கும் பரிசிலர்க்கெல்லாம் தாமரை வடிவில் அலங்கார உறுப்புகள் கொண்ட நெடிய தேர்களை யானைகளுடன் நீ குறையாது வழங்கினாய். காணும் இடமெல்லாம் கள் வடிகட்டி, மரத்தடிகள்தோறும் செம்மறிக்கிடாயை வெட்டி, கொழுப்பையுடைய தசைகளைச் சுடுதலால், அவற்றுள் உள்ள கொழுப்பு உரு, நெய் நிறையப்பெற்று வறுபடும் கறிகள் ஆரவாரிக்க, தாளிக்கும்போது எழுந்த நிறத்தையுடைய தாளிப்புப் புகை கருமையான மூடுபனியைப் போலப் பரந்து தோன்றுமாறு அகன்ற இந்த மதுரை மாநகரத்தே, நீ அனைவருக்கும் விருந்தளித்தாய்!, பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியைப் போல் நல்ல வேள்வித்துறைகளில் நீ முற்றும் தேர்வாயாக! தொன்மையான மரபுகளையுடைய நல்ல ஆசிரியர்களுடன் சேர்ந்து பழகி அவர்கள் கூட்டுறவாலே பெற்ற அறிவால் வந்த புகழாலும், நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் உயர்ந்தோனைப் போல், வியப்பும்,  மேன்மையும், நடுநிலைமையும்  உடைய சான்றோர் பலராலும் புகழப்பட்டு, நீ குற்றமற்ற சிறப்போடு தோன்றுவாயாக!

 

மன்னனை வாழ்த்துதல்


அரிய தந்து குடி அகற்றிப்
பெரிய கற்று இசை விளக்கி
முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும்
பன்மீன் நடுவண் திங்கள் போலவும்
பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப் . . . 770

பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப்
பெரும் பெயர் மாறன் தலைவனாகக்
கடந்து அடு வாய் வாள் இளம்பல் கோசர்
இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்பப்
பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த              775


மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர்
அவரும் பிறகும் துவன்றிப்
பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த
இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய
மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் . . .                  780

மகிழ்ந்து இனிது உறைமதி பெரும
வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே.

அருஞ்சொற்பொருள்:

766. குடி அகற்றி = குடி மக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி

 

767. இசை = புகழ்; விளக்கி = பலர் அறியச்செய்து

 

768.முந்நீர் = கடல்; நாப்பண் = நடுவே

 

769. நடுவண் = நடுவே

 

770. பூத்த =பொலிவு பெற்ற

 

771. தார் = மாலை; புனைதார் = அலங்கரித்த மாலை

 

772. மாறன் =  ஒரு பாண்டியன் ( ஒரு குறுநில மன்னன்)

 

773. கடந்து அடு = வென்று அழிக்கும்

 

775. பொலம் = பொன்; பொலம் பூண் ஐவர் = பொன்னாலான மாலை அணிந்த ஐம்பெருங்குழுவினர்

 

777. துவன்றி = நிறைந்து

 

778. பொற்பு = பொலிவு, அழகு

 

780. தேறல் = கள் (அல்லது கள்ளின் தெளிவு); மடுப்ப = பருக

 

782. வரைந்து = வகுத்துள்ள; ஊழ் =விதி

 

பதவுரை:

766. அரிய தந்து குடி அகற்றி = அரிய பொருட்களை கொண்டுவந்து தந்து, குடி மக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி,

 

767. பெரிய கற்றுஇசை விளக்கி = பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து,

 

769-769.முந்நீர் நாப்பண் ஞாயிறு போலவும் பன்மீன் நடுவண் திங்கள் போலவும் = கடல் நடுவே தோன்றும் ஞாயிறுபோலவும், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் திங்கள்போலவும்,

 

770. பூத்த சுற்றமொடு பொலிந்து இனிது விளங்கிப் = பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி,     

 

771. பொய்யா நல்லிசை நிறுத்த புனை தார்ப் = உண்மையான நல்ல புகழை உலகிலே நிறுத்திய, அலங்கரித்த மாலையையும்,

 

772. பெரும் பெயர் மாறன் தலைவனாகக் = பெரிய பெயரினையும் உடைய மாறன் (எனும் குறுநிலமன்னன்) தமக்குத் தலைவனாயிருப்ப,


773. கடந்து அடு வாய் வாள் இளம்பல் கோசர் =
 (பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள்,

 

774. இயல் நெறி மரபின் நின் வாய்மொழி கேட்பப் = முறைப்படி உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு அதன்படி நடக்க,

 

775. பொலம்பூண் ஐவர் உட்படப் புகழ்ந்த = பொன்னாலான அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் குழுவினர் உட்பட, (அவரால்)புகழப்பட்ட,

 

776- 777. மறமிகு சிறப்பிற் குறுநில மன்னர் அவரும் பிறகும் துவன்றிப் = வீரம் மிகுந்த, சிறப்பினையுடைய குறுநில மன்னர்களும், மற்றோரும் நிறைந்து,

 

778. பொற்பு விளங்கு புகழவை நிற்புகழ்ந்து ஏத்த = பொலிவு விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த,

 

779. இலங்கிழை மகளிர் பொலங்கலத்து ஏந்திய = விளங்குகின்ற அணிகலன்களையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் எடுத்த

 

780. மணங்கமழ் தேறல் மடுப்ப நாளும் = மணமுள்ள கள்ளின் தெளிவைத்தர அதனைப் பருகி, நாள்தோறும்,

 

781. மகிழ்ந்து இனிது உறைமதி பெரும = மகிழ்ச்சி எய்தி இனிதாக இருப்பாயாக, பெருமானே,

 

782. வரைந்து நீ பெற்ற நல் ஊழியையே. = ஊழ் உனக்கு வகுத்துள்ள காலம் முழுதும்  உடையவனாவாய்.

 

கருத்துரை:

அரிய பொருட்களை கொண்டுவந்து தந்து, குடி மக்களின் குறைகளை அகற்றி, செல்வத்தைப் பெருக்கி, பெரிய நூற்களைக் கற்று, (நின்)புகழைப் பலரறியச்செய்து, கடல் நடுவே தோன்றும் ஞாயிறுபோலவும், பல விண்மீன்களுக்கு நடுவே தோன்றும் திங்கள்போலவும், பொலிவுபெற்ற சுற்றத்தாரோடு பொலிந்து இனிதாக விளங்கி, உண்மையான நல்ல புகழை உலகிலே நிறுத்திய, அலங்கரித்த மாலையையும், பெரிய பெயரினையும் உடைய மாறன் (பாண்டியர் குலத்தைச் சார்ந்த மோகூர்ப் பழையன்) தமக்குத் தலைவனாயிருப்ப,  (பகைவரை)வென்று கொல்லும் தப்பாத வாளினையுடைய இளைய பலராகிய கோசர்கள், முறைப்படி உன்னுடைய மெய்ம்மொழியைக் கேட்டு அதன்படி நடக்க, பொன்னாலான அணிகலன்களை அணிந்த ஐம்பெரும் குழுவினர் உட்பட, (அவரால்)புகழப்பட்ட, வீரம் மிகுந்த, சிறப்பினையுடைய குறுநில மன்னர்களும், மற்றோரும் நிறைந்து, பொலிவுடன்  விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த, விளங்குகின்ற அணிகலன்களையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ள தேறலை  நாளும் பருகி, ஊழ் உனக்குக் கொடுத்துள்ள வாழ்நாட்கள் முழுதும் நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக!

 

சிறப்புக் குறிப்பு: இங்கு மாறன் என்று குறிப்பிடப்பட்டவன் பாண்டியர் குலத்தைச் சார்ந்த மோகூர்ப் பழையன் என்ற குறுநில மன்னன் என்றும் அவன் பாண்டியன் தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியனுக்கு நண்பன் என்றும் பெருமழைப்புலவர் பொ. வே. சோமசுந்தரனார் தம் நூலில் குறிப்பிடுகிறார்.

 



[1]. தென்திசை மருங்கின் வெள்ளி ஓடினும் (புறநானூறு, பாடல் 117: 2)

[2] . கரியவன் புகையினும் புகைக்கொடி தோன்றினும்

     விரிகதிர் வெள்ளி தென்புலம் படரினும்       (சிலப்பதிகாரம் 10: 102-103)

 

Comments

Popular posts from this blog

மதுரைக்காஞ்சி - அறிமுகம்

மதுரைக்காஞ்சி - மூலம்

மதுரைக்காஞ்சி - பொருட்சுருக்கம்