மதுரைக்காஞ்சி - அறிமுகம்

                                                   மதுரைக்காஞ்சி – அறிமுகம்


தமிழ் மொழியின் தொன்மை


இன்று வழக்கில் இருக்கும் மிகப் பழமையான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்பது மொழியியல் அறிஞர்களின் கருத்து. தமிழில் நமக்குக் கிடைத்துள்ள நூல்களில் மிகப் பழைமையானது தொல்காப்பியம். தொல்காப்பியம் கி. மு. மூன்றாம் நூற்றாண்டில் தொல்காப்பியரால் எழுதப்பட்ட நூல்[1]. அந்த நூலில், இருநூறுக்கும் மேலான இடங்களில், தொல்காப்பியர், “என்ப”, “மொழிப”, ”கூறுப”, “என்மனார் புலவர்என்று மற்ற இலக்கண நூல்களைச் சுட்டிக் காட்டுகிறார்இதிலிருந்து, தொல்காப்பியத்துக்கு முன்னரே பல இலக்கண நூல்கள் இருந்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. எள்ளிலிருந்து எடுக்கப்படுவதுதான் எண்ணெய். அதுபோல், இலக்கியம் இருந்தால்தான் இலக்கணம் இருக்க முடியும். ஆகவே, கி. மு. மூன்றாம் நூற்றண்டுக்குமுன் தமிழில் இலக்கியம் இருந்திருக்க வேண்டும். அந்தக் காலத்தில் தமிழில் உரைநடை நூல்கள் இல்லை. தமிழில் இருந்த இலக்கியம் எல்லாம் செய்யுள் வடிவத்தில்தான் இருந்தன.

 

அகத்திணையும் புறத்திணையும்

பாடல்களை அகத்திணைப் பாடல்கள் புறத்திணைப் பாடல்கள்  என்று இருவகையாகத் தொல்காப்பியம் பிரிக்கிறது. திணை என்ற சொல் நிலம்’, ‘இடம்’, ’குடி’, ‘ஒழுக்கம்’, ‘பொருள்என்ற பல பொருட்களையுடைய ஒருசொல். தமிழ் இலக்கியத்தில் திணை என்ற சொல் பொருள்என்பதைக் குறிக்கும் சொல்லாகப் பயன்படுத்தப்படுகிறது. மனித வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகளை அகம், புறம் என்று பிரிப்பது தமிழ் இலக்கண மரபு. ஒருஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் காதலிக்கும் பொழுதும், அவர்களின் திருமணத்திற்குப் பிறகும், தங்கள் வாழ்க்கையில் அவர்கள் அனுபவிக்கும் இன்பமும் துன்பமும் பற்றிய செய்திகள் வெளிப்படையாகப் பிறரிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவையாகையால், அவை அகப்பொருள் எனப்படும். அகப்பொருளைப்பற்றிப் பாடும் பாடல்கள் அகத்திணையில் அடங்கும். காதலைத் தவிர வாழ்க்கையின் மற்ற கூறுபாடுகள் புறப்பொருள் எனப்படும். போர், வீரம், வெற்றி, புகழ், கொடை, நிலையாமை முதலிய பொருட்களை மையப்பொருளாகக்கொண்ட பாடல்கள் புறத்திணையில் அடங்கும்.

 

சங்க இலக்கியம்

சங்க காலம் என்பது கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை என்பதைப் பொதுவாகப் பெரும்பாலோர் ஏற்றுக்கொள்கின்றனர். சங்க காலத்தில் இருந்த இலக்கியம் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகிறது. சங்க காலத்தில் இயற்றப்பட்ட பாடல்களை நூல்களாகத் தொகுக்குமாறு பிற்கால மன்னர்கள் புலவர்களுக்கு ஆணையிட்டனர். அதற்கேற்ப, சங்க காலத்தில் இருந்த பாடல்களில் நீண்ட பாடல்களாக இருந்த பத்துப் பாடல்களைத் தேர்ந்தெடுத்து, புலவர்கள் பத்துப்பாட்டு என்று அழைக்கப்படும் பத்து நூல்களாக்கினார்கள். மூன்று முதல் 140 அடிகளுடைய  பாடல்களில் சிறந்தவற்றை எட்டு நூல்களாகத் தொகுத்தார்கள். எட்டுத்தொகை என்ற சொல் அந்த எட்டு நூல்களையும் குறிக்கிறது. பத்துப்பாட்டில் அடங்கிய பத்து நூல்களும் எட்டுத்கொகையில் அடங்கிய எட்டு நூல்களும் சங்க இலக்கியம் என்று அழைக்கப்படுகின்றன. சங்க இலக்கியத்தில் உள்ள பாடல்கள் தொகுக்கப்பட்ட காலத்தைப் பற்றி அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி. முதல் அல்லது கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்று பேராசிரியர் மு. வரதராசன்[2] குறிப்பிடுகிறார். எட்டுத்தொகை நூல்கள் தொகுக்கப்பட்ட காலம் கி.பி ஏழாம் நூற்றாண்டு அல்லது எட்டாம் நூற்றாண்டாக இருக்கலாம் என்று ஈவா வில்டன் கருதுகிறார்.[3]

 

பத்துப்பாட்டு

கீழ்வரும் பாடலில் பத்துப்பாட்டு நூல்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.

 

முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை
பெருகு வள மதுரைக் காஞ்சி - மருவினிய
கோலநெடு நல்வாடை கோல்குறிஞ்சிப் பட்டினப்
பாலை கடாத்தொடும் பத்து.

 

பத்துப்பாட்டு நூல்கள்: திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, முல்லைப்பாட்டு, மதுரைக் காஞ்சி, நெடுநெல்வாடை, குறிஞ்சிப்பாட்டு, பட்டினப்பாலை, மலைபடுகடாம். இவற்றுள் திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் ஆகிய ஐந்து நூல்களும் ஆற்றுப்படை[4] என்னும் வகையைச் சார்ந்தவை. இந்த ஐந்து ஆற்றுப்படை நூல்களும் மதுரைக் காஞ்சியும் புறத்திணையைச் சார்ந்தவை. முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு மற்றும் பட்டினப்பாலை ஆகியவை அகத்திணையைச் சார்ந்தவை. நெடுநல்வாடை அகத்திணையைச் சார்ந்ததா அல்லது புறத்திணையைச் சார்ந்ததா என்பது ஆய்வுக்குரியது. பத்துப்பாட்டில் உள்ள பாடல்களுள் முல்லைப்பாட்டு 103 அடிகளை உடைய மிகச் சிறிய பாடலாகும்; மதுரைக் காஞ்சி 782 அடிகளை உடைய மிகப் பெரிய பாடலாகும்.

 

மதுரைக் காஞ்சி

மதுரைக் காஞ்சி என்னும் இந்த நூலை இயற்றிய புலவரின் பெயர் மாங்குடி மருதனார். இவர் மாங்குடி கிழார் என்றும் அழைக்கப்பட்டார்.  இவர் காஞ்சிப் புலவன் என்றும் மதுரைக் காஞ்சிப் புலவன் என்றும் அழைக்கப்பட்டதாக, நற்றிணைக்கு உரை எழுதிய பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் அவர்கள் தம்முடைய நூலில்[5] கூறுகிறார்.  இப்புலவர் மதுரைக் காஞ்சியை இயற்றியது மட்டுமல்லாமல் புறநானூற்றில் ஆறு பாடல்களையும் (24, ,26, 313, 335, 372, 396), அகநானூற்றில் ஒரு பாடலையும் (89), குறுந்தொகையில் மூன்று பாடல்களையும் (164, 173, 302), நற்றிணையில் இரண்டு பாடல்களையும் (120, 123) இயற்றியுள்ளார்.  “மாங்குடி மருதன் தலைவன் ஆக உலகமொடு நிலைஇய பலர்புகழ் சிறப்பின் புலவர் பாடாது வரைகஎன் நிலவரை.”  என்று தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் புறநானூற்றுப் பாடல் 72-இல் கூறுவதிலிருந்து[6], மாங்குடி மருதனார் இப் பாண்டிய மன்னனின் அவைக்களப் புலவர்களுக்குத் தலைவராக இருந்தார் என்பதும், அவரால் பாடப்படுவதை அவன் மிகவும் பெருமையாகக் கருதினான் என்பதும் தெரியவருகிறது.

 

இப்பாடலில் புகழ்ந்து பாடப்படும் மன்னன் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன். வாழ்க்கையின் நிலையாமையைக் கூறி, பின்பற்ற வேண்டிய நன்னெறிகளை வலியுறுத்துவதை மையப்பொருளாகக்கொண்ட பாடல்கள் காஞ்சித் திணை என்ற பிரிவில் அடங்கும். இப்பாடலில் மாங்குடி மருதனார், மதுரை நகரத்தின் சிறப்பைக் கூறி, அங்கு வாழும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கு நிலையாமையைப் பற்றிக் கூறி, அவனுடைய வெற்றிகளையையும், படைச் சிறப்பையும், கொடைத்தன்மையும், புகழையும் பாராட்டி, அவனுக்கு வகுக்கப்பட்ட வாழ்நட்கள் முழுதும் அவன் வெற்றியோடும், புகழோடும், மகிழ்ச்சியோடும் வாழ வேண்டும் என்று அவனை வாழ்த்துவதால், இப்பாடல் மதுரைக் காஞ்சி என்று அழைக்கப்படுகிறது.

பாண்டியன் நெடுஞ்செழியன் பழம்பெரும் கடவுளாகிய சிவபெருமானின் வழித்தோன்றல் என்றும், கடல்கோளால் பாண்டிய நாட்டின் ஒரு பகுதி அழிந்ததால், அதற்கு ஈடாக பகைவர்களிடமிருந்து நிலங்களைப் பெற்று,  மக்களுக்கு உதவிய நிலந்தரு திருவிற் பாண்டியன் என்னும் புகழ் பெற்ற மன்னனின் வழித்தோன்றல் என்றும் புலவர் மாங்குடி மருதனார் பாண்டிய மன்னனைப் புகழ்ந்து பாடி இப்பாடலைத் தொடங்குகிறார். அவன் சாலியூரைக் கைப்பற்றியது, குட்டநாட்டு மன்னர்களை வென்றது, தலையாலங்கானத்தில் சேரமான் யானைக்கட்சேய் மாந்தரஞ்சேரல் இரும்பொறை, சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி, திதியன், எழினி, எருமையூரன், இருங்கோ வேண்மான், பொருநன் ஆகிய எழுவரையும் வென்றது போன்ற பல நிகழ்ச்சிகளைப் புலவர் மாங்குடி மருதனார் விரிவாகக் கூறி, பாண்டியனின் வீரத்தைப் புகழ்கிறார். பழிக்கு ஆளாகாமல் சான்றாண்மையோடு அவன் விளங்கியதை இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். பாண்டியன் நெடுஞ்செழியனைப்போல் வீரத்தில் சிறந்து விளங்கி, வெற்றிகளைப் பெற்ற மன்னர்கள் அனைவரும் தங்கள் புகழ் பரவ இந்தப் பெரிய உலகத்தை ஆண்டு பின்னர் இறந்துபோயுள்ளனர் என்று வாழ்க்கை நிலையாமையைப் பாணடிய மன்னனுக்குப் புலவர் சுட்டிக்காட்டுகிறார்.

 

நீர் வளமும், நில வளமும் உள்ள மருத நிலம், வன வளம் நிறைந்த முல்லை நிலம், மலை வளம் மிக்க குறிஞ்சி நிலம், முல்லையும் குறிஞ்சியும் வறட்சியால் திரிந்த பாலை நிலம், வெளிநாட்டாரும் பாண்டிய நாட்டு மக்களும் சிறப்பாகப் பண்டமாற்று செய்துகொள்ளும் கடற்கரைப் பட்டினங்கள் உள்ள நெய்தல் நிலம் ஆகிய ஐந்து வகை நிலங்களும் சூழ்ந்துள்ள  பகுதியில் மாநகரம் உள்ளது என்று  இப்பாடல் சித்திரிக்கிறது. மதுரை நகரத்தில் நாளங்காடியும், அல்லங்காடியும் உள்ளன என்றும் அங்கு நடைபெறும் வணிகத்தைப் பற்றியும், அங்கு எழும் ஒலிகளையும் ஆரவாரத்தையும் இப்பாடல் மிக விரிவாகக் கூறுகிறது. மேலும், மதுரை நகரத்தில், மாலை நேரத்தில், பௌத்தப்பள்ளி, அந்தணர்கள் வாழும் இடம், சமணப் பள்ளி ஆகிய இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளையும் மாங்குடி மருதனார் வெகு அழகாக வர்ணிக்கிறார். நடுநிலையோமையோடு நீதி வழங்கும் அறவோர்கள் அடங்கிய அறங்கூறவையமும், காவிதிப் பட்டம் பெற்ற சான்றோரும், அமைச்சர்களும், நாற்பெருங்குழுவினரும் வாழும் இடங்கள் மதுரையில் இருந்ததாக மதுரைக் காஞ்சி கூறுகிறது.

 

       ஓரிரவின் நான்கு யாமங்களிலும் மதுரை நகரத்தில் நடைபெறும் நிகழ்ச்சிகளைப் புலவர் விளக்கமாகக் கூறியிருப்பது பாடலைப் படிப்பவர்களைத் தாமே அந்த நிகழ்ச்சிகளைக் நேரில் காண்பதுபோல் எண்ணத் தூண்டும் வகையில் சிறப்பாக அமைந்துள்ளது. மதுரை நகரத்தில், பொழுது விடிந்தவுடன், புகழ்ந்து பாடுவோரின் இசையைக் கேட்டு மன்னன் துயிலெழுந்து, காலைக்கடன்களை முடித்து, ஆடை அணிகலன்களை அணிந்து, அரசவைக்கு வந்து, பாணர்களுக்கும், பாணினிகளுக்கும், வீரர்களுக்கும் யானைகளையும் தேர்களையும் வரையாது வழங்குவதை இப்பாடலில் புலவர் குறிப்பிடுகிறார். இறுதியாக, “ஐம்பெரும் குழுவினர் உட்பட, (அவரால்)புகழப்பட்ட, வீரம் மிகுந்த, சிறப்பினையுடைய குறுநில மன்னர்களும், மற்றோரும் நிறைந்து, பொலிவுடன் விளங்குகின்ற புகழினையுடைய அரசவை உன்னைப் புகழ்ந்து வாழ்த்த, விளங்குகின்ற அணிகலன்களையுடைய மகளிர் பொன்னாற் செய்த வட்டில்களில் கொண்டுவந்து கொடுக்கும் மணமுள்ள தேறலை நாளும் பருகி, ஊழ் உனக்குக் கொடுத்துள்ள வாழ்நாட்கள் முழுதும் நீ மகிழ்ச்சியாக இருப்பாயாக!” என்று மாங்குடி மருதனார் மன்னனுக்குக் கூறும் அறிவுரை, “ஒன்றா உலகத்து உயர்ந்த புகழல்லால் பொன்றாது
நிற்பதொன் றில்.” என்ற குறளுக்கேற்ப அமைந்துள்ளது என்பது குறிப்பிடத் தக்கது.

 

வரலாற்றுச் செய்திகள் அடங்கிய பெட்டகமாகவும், பண்பாட்டுக் கருவூலமாகவும் மதுரைக் காஞ்சி விளங்குகிறது. மாங்குடி மருதனார் இயற்றிய இப்பாடல் புனைந்துரைகள் எவையும் இல்லாமல் வரலாற்றுச் செய்திகளையும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் மதுரையில் வாழ்ந்த மக்களைப் பற்றிய செய்திகளையும், தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியனின் வீரம், வெற்றி, புகழ், கொடை போன்றவற்றையும் ஒரு காணொலிபோல் கற்பவர்களின் மனத்திரையில் பதிவு செய்கிறது.

 

இப்பாடல் தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியனின் காலத்தில் – அதாவது கி. பி. இரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இயற்றப்பட்டிருக்கும் என்பது தெளிவு, இப்பாடல் ஆசிரியப்பா மற்றும் கலிப்பா ஆகிய இரண்டுவகைப் பாடல்களும் கலந்த, 782 அடிகளைக்கொண்ட நீண்ட பாடல்.

 



[1] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் 5

[2] மு. வரதராசன், தமிழ் இலக்கிய வரலாறு, பக்கம் - 28

[3] Eva Wilden, குறுந்தொகை, பக்கம் - 1

[4] வள்ளல் ஒருவரிடம் தன் வறுமையைப் போக்கும் வளங்களைப் பெற்றுவந்த ஒருவர். கூத்தர், பாணர், பொருநர், விறலி முதலியோரை அவரிடம் செல்லுமாறு வழி சொல்லி அனுப்புவது ஆற்றுப்படை என்று தொல்காப்பியம் கூறுகிறது.

[5] பின்னத்தூர் நாராயணசாமி ஐயர் உரை, பக்கம் 17

[6] முனைவர் இர. பிரபாகரன், புறநானூறு  (மூலமும் எளிய உரையும்) – பகுதி -1, பக்கம் 191

Comments

Popular posts from this blog

மதுரைக்காஞ்சி - மூலம்

மதுரைக்காஞ்சி - பொருட்சுருக்கம்